சமூக ஊடகங்களில் போலி செய்தி பரப்பியதாக 366 வழக்குகள் பதிவு…

நாட்டில் முழு அடைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து வதந்திகள், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்தி என அனைத்தும் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் கொரோனா குறித்து தகவரான செய்திகளை பரப்பியதாக மகாராஷ்டிரா காவல்துறையின் சைபர் பிரிவு இதுவரை 366 வழக்குகளை பதிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்த வழக்குகள் சனிக்கிழமை வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
“சில சமூக விரோத சக்திகள் முழு அடைப்பின் போது டிக்டாக், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் தங்கள் பதிவுகள் மூலம் தவறான செய்திகளையும் வதந்திகளையும் பரப்பிய பின்னர் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று மகாராஷ்டிரா சைபர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபோன்ற வழக்குகளில் அதிக எண்ணிக்கை பீட்டில் (35 ஆக) பதிவாகி இருப்பதாகவும், புனே கிராமத்தில் 29, ஜல்கானில் 26, மும்பையில் 21 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார். “சந்திரபூர் மாவட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பேஸ்புக்கில் தங்கள் பதிவுகள் மூலம் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றதால் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையின் போது, ​​155 வழக்குகள் வாட்ஸ்அப் பதிவுகள், 143 பேஸ்புக் பதிவுகள், டிக்டாக் வீடியோக்கள் 16, ட்விட்டர் பதிவுகள் ஆறு, இன்ஸ்டாகிராம் பதிவுகள் நான்கு என இத்துனை பதிவுகள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது எனவும் மகாராஷ்டிரா சைபர் காவல்துறை தெரிவித்துள்ளது.