சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிட்டது திமுக…

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், திமுக அந்த முயற்சியை கைவிட்டுள்ளது.

முன்பிருந்த அரசியல் சூழ்நிலை மாறிவிட்டதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், அதிமுக எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், இரத்தினசபாபதிக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து, சபாநாயகர் நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை என்று கூறி, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக நோட்டீஸ் அளித்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டப்பேரவையில் ஜூலை 1ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படுமா என்பது, அன்றைய நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்படும் என சபாநாயகர் தனபால் அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு கூறியிருந்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 6 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

மறைந்த உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணிக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குடிநீர் பிரச்சனைக்கு அதிமுக அரசு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்றும், இந்த பிரச்சனையை திமுக எழுப்பிய பிறகே, அவசர அவசரமாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளனர் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.