தவிர்க்க முடியாத தலைவர் ஸ்டாலின்… ஏன்?: செம்பரிதி

கலைஞர் மறைந்துவிட்டார்.

ஆனால், அவரை அப்போதும், இப்போதும், எப்போதும் எதிர்த்து வரும் ஆதிக்க கூட்டத்தின் உக்கிரம் மட்டும் தணிந்த பாடில்லை.

வாழும் காலம் முழுவதும் அவரைச் சிறுமைப் படுத்துவதையே அரசியலாக கொண்ட அந்த கூட்டம், இறப்புக்குப் பின்னும் அவரது ஆளுமையைச் சிதைத்துவிட வேண்டும் என்ற மூர்க்கத்துடன் செயல்படுகிறது.

மெரீனாவில் அவரது நினைவிடம் அமைந்துவிடக் கூடாது என்ற கடைசி நேர அற்ப விளையாட்டும் கூட அந்தச் சதிகார கும்பலின் சதுராட்டமே தவிர வேறென்ன? இறுதிவரை நீதிமன்றத்தில் எதிராக வாதிக்கொண்டிருந்த வைத்தியநாதன் தான் அந்தக் கூட்டத்தின் குறியீடு!

அதில் வெல்ல முடியவில்லை… அடுத்தது என்ன செய்யலாம் என்று அலையும் அந்தக் கூட்டத்தின் பார்வை திமுக மீது முன்னெப்போதும் இல்லாத கடும் வன்மத்துடன் திரும்பி இருக்கிறது.

பெரியார், அண்ணாவால் புடம்போடப்பட்டு, கலைஞரால் பொலிவும், வலிவும் ஊட்டப்பட்ட திராவிட இயக்கத்தை அத்தனை எளிதில் அடையாளமிழக்கச் செய்து விட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும், சமூகநீதி, சாதிஒழிப்பு, மதநல்லிணக்கம், சமத்துவம் போன்ற தங்களுக்கு எதிரான கருத்தாக்க நெருப்பு கனன்று கொண்டிருக்கும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே என்பதை சரியாக இனம் கண்டு கொண்ட ஆதிக்க சக்திகளுக்கு, அதன் மீதான வன்மம் தணியாததில் வியப்பில்லை.

தேர்தலுக்கு தேர்தல் திமுகவை வீழ்த்தும் வியூகத்திற்கு அவர்களுக்கு ஜெயலலிதா பயன்பட்டார். இந்த வியூக வலையில் அவ்வப்போது அனைத்துக் கட்சிகளும் வீழ்ந்து பின்னர் வெளிவருவதும் வாடிக்கையாகவே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நிகழ்ந்த மோதல்கள், விரிசல்கள் அனைத்தையும் பார்த்த ஆதிக்க கூட்டத்தின் சாணக்கியர்களுக்கு, திமுகவிலும் அத்தகைய காட்சிகளை அரங்கேற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஆத்திரமும் வந்து விட்டது. அதன் விளைவாக விடப்பட்ட வெள்ளோட்டம் தான், கலைஞர் நினைவிடத்தில் மு.க.அழகிரி கூறிய ஆதங்கப் பிதற்றல்கள். அழகிரி மூலம் திமுகவில் பிளவை ஏற்படுத்திவிடலாம் என்பது அந்தக் கூட்டத்தின் கனவு. ஆனால், அதற்கு எதிராக திமுக தொண்டர்கள் மத்தியில் ஒருமித்து எழுந்த குரல், இனி தங்கள் கனவு நிறைவேறாது என்பதை அவர்களுக்கு உணர்த்தி உள்ளது.

ஆனாலும் அந்தக் கூட்டம் ஓய்ந்து விடாது. இதில் திமுகவின் மேல்மட்ட தலைவர்களை விட, அந்த இயக்கத்தின் உண்மையான அடிமட்டத் தொண்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதை அவர்களில் பலரிடம் பேசும் போது அறிய முடிகிறது.

ஸ்டாலின் தான் தங்களது தலைவர் என்பதில் திமுக தொண்டர்கள் உறுதியாக இருப்பதையும் உணர முடிகிறது. அதற்கான காரணங்களையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

1967 – 68 ஆண்டுகளில் தனது பதின்பருவத்திலேயே இளைஞர் திமுக என்ற அமைப்பை கோபாலபுரத்தில் உள்ள முடிதிருத்தும் கடையில் நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கியது முதல், படிப்படியாக நிகழ்ந்த ஸ்டாலினின் அரசியல் பரிணாமவளர்ச்சியை அவர்கள் நினைவு கூர்கின்றனர்.

ஸ்டாலின் என்ற பெயருக்காக சர்ச் பார்க் கான்வென்டில் சேர்த்துக் கொள்ள மறுக்கப்பட்டதில் இருந்தே அவரது எதிர்ப்பு அரசியல் தொடங்கி விட்டது. 1975ல் அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்ட போது, அவரது அரசியல் பரிணாமம் முக்கியக் கட்டத்தை அடைந்தது. சிறையில் வாய் கோணும் அளவுக்கு போலீசார் பூட்ஸ் கால்களால் மிதித்து சித்ரவதை செய்தும் கூட, அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி விடவில்லை. அதன் பின்னர்தான் இளைஞர் திமுக, திமுக இளைஞரணியானது. ஊர்ஊராக சென்று உறுப்பினர்கள் சேர்த்து இளைஞரணிக்கு முழு உருவம் கொடுத்தார். இந்திய அளவில், திமுகவின் இளைஞரணியைப் போல, வேறு எந்த அரசியல் கட்சியின் இளைஞர் அமைப்பும் அத்தனை வலிமையானதாகவும், ஆக்கரீதியானதாகவும் செயல்பட்டதில்லை. 1980ல் மதுரை ஜான்சிராணி பூங்காவில் முறைப்படி  தொடங்கப்பட்ட இளைஞரணி, பின்னர் திமுகவைப் போலவே, கிளைகளையும், விழுதுகளையும் பரப்பி ஆலமரமாய் உருவெடுத்து நின்றது. இளைஞரணியின் தலைமையகமாக தேனாம் பேட்டையில் உள்ள அன்பகத்தை நிறுவுவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 11 லட்சம் ரூபாய் நிதி வசூலித்தார்.

இதற்கிடையே, கட்சியிலும் வட்டப்பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் என படிப்படியாக தனது களப்பணிகள் மூலம் உயர்ந்து வந்தார் ஸ்டாலின். 1996 ஆம் ஆண்டு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை பெற்றார். மாநகர மேயராக சிறப்பான நிர்வாகத்தைத் தந்து அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பாராட்டுப் பெற்றார். 2001ல் மீண்டும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ஜெயலலிதா அவருக்காகவே கொண்டு வந்த சட்டத்தின் மூலம் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு முன்பே ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு அவர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் மட்டும் அவர் நான்குமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனாலும், 2006க்குப் பின்னர்தான் திமுக ஆட்சியமைத்த போது அவருக்கு உள்ளாட்சி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஏறத்தாழ 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்திற்குப் பின்னர்தான் ஸ்டாலின் முதல் முறையாக அமைச்சர் பதவியைப் பெற முடிந்தது.

இளைஞரணிச் செயலாளராக ஓர் அமைப்பை உருவாக்கிக் கட்டமைத்ததன் மூலம், அவரது அரசியல் திறனை நிரூபித்துள்ளார்.

சென்னை மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு தமது அரசுசார் நிர்வாகத்திறனையும் ஸ்டாலின் நிறுவியுள்ளார்.

சென்னையில் ஸ்டாலின் மேயராகவும், அமைச்சராகவும் இருந்த காலத்தின் பல பாலங்கள் கட்டப்பட்டன. காலை ஆறு மணிக்கெல்லாம் பாலம் கட்டும் பணிகளைப் பார்வையிட்ட படியே நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்பதை சென்னைவாசிகள் பலரும் அறிவர்.

பெரம்பூர் பாலத்தை பலமுறை சுரண்டியும் எந்தக் குறையையும் ஜெயலலிதாவால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் சென்னை மக்கள் அறிவர்.

இப்படி, அரசியல் திறன் ,ஆட்சித் திறன் என அனைத்து வகையிலும் தன்னை நிரூபித்தது மட்டுமின்றி, அரைநூற்றாண்டு அரசியல் அனுபவத்தையும் பெற்றுள்ள ஸ்டாலினை விட தலைவராவதற்கான தகுதி வேறு யாருக்கு இருக்க முடியும் என்கிறார்கள் அவரை தீவிரமாக ஆதரிக்கும் திமுக தொண்டர்கள்.  

இத்தனைக்கும் பிறகு கலைஞர் உயிருடன் இருக்கும் வரை தலைமைப் பதவியில் அமர்வதற்கு அவர் பொறுமை காத்து வந்தார் என்பது, ஸ்டாலினின் அரசியல் பக்குவத்தையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. கலைஞரைப் போலவே, ஸ்டாலினையும் ஆதிக்கக் கூட்டம் கிண்டலடிக்கத் தவறவில்லை.

கட்சிக்கே தலைவராக முடியவில்லையாம்.. .இவர் வந்துவிட்டார் மற்றவற்றைப் பேச” என இளக்காரம் பேசாதவர் யார்? பேசும் போது ஏற்படும் சிறுதவறுகளை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி பரவ விட்டு எக்காளமிட்ட சிறுமைத்தனத்தை என்ன வென்பது?

ஓர் ஆலமரத்தின் நிழலில் சிறு புல் கூட வளர முடியாது என்பார்கள். ஆனால், இங்கே கலைஞர் எனும் மிகப்பெரிய அரசியல் ஆலமரத்தின் நிழலில் முளைத்தும் கூட, மற்றொரு ஆலமரமாக வளர்ந்து, படர்ந்து கிளை பரப்பி நிற்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் கலைஞராக முடியுமா எனச் சிலர் கூறுகின்றனர். கலைஞர் மீது உள்ள பற்றால் அவர்கள் அப்படிக் கூறவில்லை. திமுக இனியும் வலிமை பெறக்கூடாது என்பதற்கான வேறு மாதிரியான வியூகம் இது. திமுக தொண்டர்களை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தும் முயற்சி.

ஒரு மனிதரைப் போல மற்றொரு மனிதர் இருக்க முடியாது என்பது இயற்கையின் விதி. அதனைக் கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சி தேவையில்லை. கலைஞரின் செயல்முறையும் பேச்சாற்றலும் வேறாக இருக்கலாம். அதற்காக ஸ்டாலினிடம் அதனையே எதிர்பார்ப்பது அறிவியல் பூர்வமாக எப்படிச் சரியாக இருக்க முடியும்? ஸ்டாலினின் செயல்முறைகளும், பாணியும் வேறாக இருக்கலாம். அதே நேரத்தில், கலைஞரின் அரசியல் சாரமும், ஊக்கமும் ஸ்டாலினுக்குள் இறங்கி இருப்பதை அவரது அண்மைக்கால நடவடிக்கைகள், பேச்சுகள், அறிக்கைகள் மூலம் தெளிவாக உணர முடிகிறது. 50 ஆண்டுகால அரசியல் கற்றுக் கொடுக்காததை அவருக்கு இனி வேறுயாரும் கற்றுக் கொடுத்துவிட முடியாது.

கலைஞரிடம் வேறு எதனையும் கண்டுபிடித்து விமர்சிக்க முடியாத அரைவேக்காடுகள் ஒரு காலத்தில் மஞ்சள் துண்டைக் கட்டிக் கொண்டு அழுததுபோல், குடும்ப அரசியல், துர்கா ஸ்டாலின் கோவிலுக்குப் போகிறார் என, ஸ்டாலினுக்கு எதிராகவும் அதேபோன்ற குப்பைகளைத் தோண்டி எடுத்து அரசியல் வீதிகளில் அள்ளி வீசுகிறது மற்றொரு கூட்டம். கலைஞரும் சரி, ஸ்டாலினும் சரி, ஏன் பெரியார், அண்ணாவும் கூட பகுத்தறிவு முழுமையாக பரவிய வேற்றுக்கிரகத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. எல்லா நம்பிக்கைகளும் வேரோடிப் போயிருக்கும் இந்தச் சமூகத்தில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களோடு வாழ்ந்து கொண்டுதான் தங்களது அரசியல் இயக்கங்களையும் போராட்டங்களையும் நடத்திச் சென்றனர். சாதாரண மனிதர்களுக்கு மத்தியில் தான் திமுக என்ற பேரியக்கத்தை நடத்திச் செல்ல வேண்டி இருக்கிறது. திமுக தலைமையின் குடும்பமும் அந்தச் சமூகத்தின் ஓரங்கம்தான். சமூகத்தின் அனைத்து பலமும், பலவீனமும் அந்த குடும்பத்திலும் பிரதி பலிக்கும்தான். அவற்றையும் தாண்டி கலைஞரைப் போலவே, ஸ்டாலினும் தனது அரசியல் பயணத்தை திட்பத்துடன் மேற்கொள்வார் என்ற நம்பிக்கை திமுகவுக்கு இருக்கிறது. திமுகவையும், ஸ்டாலினையும் விட்டால் தமிழகத்தின் குறைந்த பட்ச உரிமைகளைக் காப்பதற்கு வேறு யாருமில்லை என்ற யதார்த்தம் மக்களுக்கும் புரியத் தொடங்கி இருக்கிறது.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் காலத்தால் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்து நிற்கும் ஸ்டாலினை, தங்களது தலைவராக ஏற்றுக் கொள்வதில் திமுக தொண்டனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

மற்றவர்களுக்கு அந்தக் கவலை இருக்கிறது என்றால் அதற்கான காரணங்கள் வேறு. திமுகவில் என்ன நடக்கிறது என மற்றவர்கள் கவலைப்படுவது திமுகவின் நலனுக்காக அல்ல என்பதை ஒவ்வொரு திமுக காரனும் அறிவான்.

உயிரினும் மேலான உடன்பிறப்பே என்ற கலைஞரின் ஒற்றைச் சொற்றொடர், காற்றில் கரைந்து விடாமல் ஒவ்வொரு திமுக தொண்டனின் அகச் சுவரிலும் மோதி, மோதி அதற்கான விழிப்புணர்வை அவனுக்குள் தூண்டி வருகிறது.

Stalin is a unavoidable leader… Why?