முக்கிய செய்திகள்

திராவிட இயக்கம் எனும் பழிதாங்கும் மாயப்பிசாசு…: சுகுணாதிவாகர்

 திராவிட இயக்கம் எனும் பழிதாங்கும் மாயப்பிசாசு…

________________________________________________

ஜீலை 2007 தீராநதி இதழில் எம்.டி.முத்துக்குமாரசாமியின் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது.

periyar anna kalaingarஅரசியலற்ற இலக்கியம் என்று ஒன்று சாத்தியமா, நம்முடைய அரசியலுக்கு எதிராக இருப்பதாலேயே ஒரு இலக்கியத்தை நிராகரிக்கவேண்டுமா என்னும் கேள்விகள் முன்வைக்கப்படும்போது, ‘அரசியலுக்காக ஒரு இலக்கியத்தை நிராகரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை’ என்று கூறும் அதேவேளையில் ‘ஒரு இலக்கியம் அரசியல்பூர்வமாக வாசிக்கப்படுவது தவிர்க்க இயலாது’ என்று சரியாகவே சொல்கிறார் எம்.டி.எம்.

ஆனாலும் நேர்காணல் கண்டவர் விடுவதாயில்லை. ஜேம்ஸ்ஜாய்ஸின் யுலீசசையும் எஸ்ராபவுண்டையும் மேற்கோள்காட்டித் துளைத்தெடுக்கிறார். ‘திராவிட இயக்கம் பக்தி இலக்கியங்களைப் படிப்பதைத் தடைசெய்தது’ என்றும் ‘ஒரு சந்ததியினருக்கு அந்த அறிவு சென்று சேராமல் போனதற்கு திராவிட இயக்கம்தான் காரணமென்றும் அதற்குமுன் தமிழர் வீட்டு சுகதுக்க நிகழ்ச்சிகளில் தேவாரம் ஓதுவது, திருவாசகம் பாடுவது புழக்கத்திலிருந்ததே என்றெல்லாம் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுகிறார்.

இத்தகைய கேள்விகள் தமிழில் கேட்கப்படுவது இது முதன்முறையல்ல. கவிஞர்.தமிழ்நதி தனது நட்சத்திரவாரத்தையட்டி எடுத்த நேர்காணலில் கவிஞர்.குட்டிரேவதி, ‘திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பின்புதான் தமிழர்களின் அழகியல் உணர்வு அழிந்துவிட்டது’ என்கிற ரீதியில் தெரிவித்திருந்தார்.

ஆகமொத்தம் சமூகத்தின் அத்தனைச் சீரழிவுகளுக்கும் தேக்கங்களுக்குமான காரணத்தை நாம் சுலபமாக திராவிட இயக்கத்திலிருந்து ‘கண்டுபிடித்துக்கொள்ளலாம்’ என்பது எவ்வளவு வசதியானது.!

திராவிட இயக்க ஆட்சிக்குப்பின்தான் ஊழல் மலிந்தது, ரவுடி அரசியல் தலைதூக்கியது, தனிநபர் ஒழுக்கம் சீர்குலைந்தது என்பதான குற்றச்சாட்டுகளும் பொதுப்புத்தியில் ஆழப்பதியவைக்கப்பட்டுள்ளன. ஊழல் மலிந்துவிட்டது என்பதான பேச்சின் பின்னுள்ள மனவுணர்வு பார்ப்பனரல்லாத தலித்துகளும் சூத்திரர்களும் அரசியலுக்கு வந்தபின்புதான் என்னும் தூய்மைவாத மனோபாவமே என்பதை ஊகித்தறிவது சுலபம்தான். இவ்வாறாகக் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியோ தூய்மைவாத அணுகல்முறையோடு ப.சிதம்பரத்தையும் அத்வானியையும், அப்துல்கலாமையும் ஆதரிக்கிறது.

kudiyarasuஆனால் நடந்தது என்ன? ஊழல் செய்வதில் வருணபேதம் கிடையாது என்பதை ஹர்ஷத்மேத்தா, வேணுகோபாலிலிருந்து ‘புரட்சித்தலைவி’ ஜெயலலிதா வரை நிரூபித்தார்கள். தூய்மைவாத மத்தியதரவர்க்கத்தினரின் ரோல்மாடலான பி.ஜே.பியும் ஊழல்குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பமுடியவில்லை.

திராவிடக் கட்சித்தலைவர்கள்தான் தனிநபர் ஒழுக்கமற்றவர்கள் என்கிற மனப்பதிவை இருவர் மணிரத்னத்திலிருந்து தில்லிப்பார்ப்பனர் பி.ஏ.கிருஷ்ணன் வரை உருவாக்கத்தவறவில்லை. ஆனால் உண்மை என்பது அதுதானா? பார்ப்பனர்களுக்கும் ஆண்குறி உண்டு என்பதை இருள்நீக்கிசுப்பிரமணியம், டாக்டர்.பிரகாஷ் தொடங்கி சமீபத்தில் அந்துமணி என்கிற ரமேஷ்(எ) தினமலர் ராமசுப்புவரை நிரூபித்தார்கள்.

ஆனாலும் குற்றங்களுக்கான வேர்களைத் திராவிட இயக்கத்தில் தேடுவது என்பது இன்னமும் வசதியானதாகத்தானிருக்கிறது. அந்த மனோபாவத்தின் இன்னொரு பரிமாணமே குட்டிரேவதியின் கூற்றும் எம்.டி.எம்மை நேர்காணல் எடுத்தவரின் கேள்விகளும். ‘திராவிட இயக்கம் அழகியல் உணர்வைக் கொன்றழித்துவிட்டது’ என்பவர்கள் உண்மையிலேயே திராவிட இயக்க இலக்கியங்களை வாசித்திருக்கிறார்களா, வாசித்திருக்கிறார்கள் என்றால் எந்தளவிற்கு என்றெல்லாம் கேள்விகள் விரிவதைத் தவிர்க்கமுடியவில்லை.kuyil_bharatidasan_2

‘நாயின் நாக்குப்போன்ற சிவந்த மெல்லடியைத் தூக்கிவை குடிசையில்’ என்னும் பாரதிதாசனின் கவிவரிகளில் படிம அழகு விரியவில்லையா?

“நதிதழுவி அருவியின் தோள் உந்தித் – தெற்கு
நன்முத்துக்கடலலையின் உச்சிதோறும்
சதிராடி மூங்கிலிலேப் பண்ணெழுப்பித்
தாழையெல்லாம் மடற்கத்தி சுழற்றவைத்து
அந்தியிலே இளமுல்லை சிலிர்க்க – செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க -என்
சிந்தையணு ஒவ்வொன்றும் சிலிர்க்க
செல்வம் ஒன்றுவரும் அதன்பேர் தென்றல்காற்று”

என்னும் சுப்புரத்தினத்தின் வரிகளில் வீசும் தென்றல் நம்மைத் தழுவவில்லையா?

“சுயநலமென்பீர்கள், என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது, ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப்போல’ என்னும் கலைஞரின் வசனத்தில் தத்துவம் கவித்துவமாய்த் தெறிக்கவில்லையா?

diravida raniஅழகியல் உணர்வற்றுத்தானா, ஏறக்குறைய பெரியாரைத் தவிர திராவிட இயக்கத்தில் இருந்த அத்தனைபேரும் நாடகம், சிறுகதை, வசனம் என எழுதியும் நடித்தும் குவித்தனர்? திராவிட இயக்க இலக்கியம் என்பது அண்ணா கலைஞரைத்தாண்டியும் சி.பி.சிற்றரசு, அண்ணல்தங்கோ, தென்னரசு, தத்துவமேதை டி.கே.சீனிவாசன் என்று பரவிப் பரந்துகிடக்கிறதே? மன்றம், தென்றல், திராவிடநாடு, முரசொலி என நாற்பதிற்கும் மேற்பட்ட பத்திரிகைகளை திராவிட இயக்கம் நடத்தியது எப்படி?

தமிழின் முதல் பெண்நாவலாகிய ‘மதிகெட்ட மைனர் (அ) தாசிகளின் மோசவலை’ எழுதிய மூவலூர் ராமார்மித்தத்தமையார் திராவிட இயக்கத்தவர்தானே? ஆண்களே அற்ற பெண்களை மட்டுமே கதைபாத்திரங்களாகக் கொண்டு நாவலொன்றை முப்பதுகளிலேயே சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் எழுதினாரே. (ராகவனா, நீலாம்பிகை அம்மையாரா என்று நினைவில்லை). அழகியல் உணர்வற்ற கருணாநிதியால் வள்ளுவர்கோட்டமும், பூம்புகாரும், வள்ளுவர் சிலையும் எப்படிச் சாத்தியம்?

இத்தகைய கலை, இலக்கிய வெளிப்பாடுகள் அழகியல் உணர்வின்றி எப்படி உருவாக முடியும்? ஆனால் திராவிட இயக்கத்தவரின் எழுத்துக்கள் பளபளப்பானவை, எதார்த்தத்தை மிகைப்படுத்தியவை என்பது உண்மைதான். ஆனால் இன்றைய நவீன இலக்கிய எழுத்துமுறை, வாசிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை அளப்பது என்பது நேர்மையாகாது. திராவிட இயக்க எழுத்து என்பது அதற்கு முந்தைய எழுத்தை விட நிச்சயமாக நவீனமானதுதான். மற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களின் பிரதிகளை விட்டுவிடுவோம். ஆனால் பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் வாசிக்கும்போது பலமுறை நவீன இலக்கியம் வாசிப்பதான உணர்வையே அடைகிறேன். குறிப்பாக நாகம்மை மரணத்தின்போது அவரால் விடப்பட்ட அறிக்கை.

எம்.டி.எம் தனது நேர்காணலில் ஒருவிசயத்தைத் தெளிவாகச் சொல்கிறார். திராவிட இயக்கம்தான் சங்க இலக்கியம் குறித்த வாசிப்பைப் பரவலாக்கியது என்று. சங்க இலக்கியம் மட்டுமில்லை, பெரியாரும் திமுகவும் இல்லாமல் போயிருந்தால் திருக்குறளும் வள்ளுவரும் தமிழ்ப்பொதுமனத்தில் இவ்வளவு ஆழமாக ஊன்றியிருக்கமாட்டார்கள். கருணாநிதி இல்லையென்றால் சிலம்பும் கண்ணகியும் குறித்தான கதையாடல்கள் தமிழ்மனத்தில் ஏது?

ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையை வேறுவிதமாக உரையாடிப் பார்ப்போம். திராவிட இயக்கம் பகுத்தறிவுவாதத்தை முன்வைத்தது. பகுத்தறிவுவாதம் தர்க்கத்தின்பாற்பட்டது. இலக்கியமோ, அழகியல் உணர்வோ, கலைமனமோ தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. திராவிட இயக்கத்தின் தர்க்கபூர்வமான பகுத்தறிவுவாதம் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட மெல்லிய கலைமனத்தைச் சாகடித்துவிட்டது, தேவதைக்கதைகளைக் கொன்றழித்துவிட்டது என்பதாக இந்த குற்றச்சாட்டை வாசிக்க முயல்வோம்.diravidanadu

ஆனால் உண்மையில் திராவிட இயக்கம் தர்க்கபூர்வமான பகுத்தறிவு இயக்கமா? பெரியாரின் பகுத்தறிவு என்பதே வெறுமனே தர்க்கபூர்வமான பகுத்தறிவு மட்டுமல்ல. எல்லாவித வழிபாட்டுமுறைமைகளுக்கும் எதிரான, எல்லாவிதமான உரையாடல்களையும் சாத்தியப்படுத்துகிற, விமர்சனவெளியில் தன்னை முன்கிடத்துகிற இறுக்கமற்ற நெகிழ்வுடைய திறப்பே அவரது பகுத்தறிவு என்னும் கருத்தாக்கம். இல்லாது பெரியார் வெறுமனே தர்க்கங்களுக்குள் சுருங்கிப்போயிருந்தாரெனில் அவரிடத்திலே கவித்துவ அறமிருந்திருக்காது. காரியமுதல் நோக்கமும் வறட்டுத்தனமான சில செத்துப்போன கேள்விகளுமே மிச்சமிருந்திருக்கும்.

பெரியாரையும் அவரையத்த சிலரையும் தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக திமுகவின் அரசியல், இலக்கிய மற்றும் கலைப்பொதுவெளியின் ஊடான செயல்பாடுகளைத் தொகுத்துப்பார்த்தோமெனில் அவற்றிற்கும் பகுத்தறிவிற்குமான உறவு குறித்த ஒரு சில புரிதல்கள் சாத்தியப்படும்.

திராவிட இயக்கம் மதத்தை மறுத்தது, கடவுளை மறுத்தது. ஆனால் அந்த வெற்றிடங்களை வள்ளுவர், திருக்குறள், சேரன் செங்குட்டவன், கண்ணகி, ராசராசசோழன் என்னும் குறியீடுகளால் நிரப்பியது. மத உணர்விற்குப் பதிலியாக தமிழினப்பெருமிதக் கதையாடல்களை இட்டு நிரப்பியது.

வள்ளுவரும், கண்ணகியும் தமிழர் தெய்வங்களாயினர். இயக்கத்திலும் தோழமை பூர்வமான உறவுச்சொல்லாடல்கள் ஒழிந்து குடும்ப உறவுகளின் மாதிரியிலான உறவுச்சொல்லாடல்கள் கட்டப்பட்டன ‘தோழர்’ என்கிற வார்த்தை பின்னுக்குத்தள்ளப்பட்டது. அண்ணாத்துரை என்கிற பெயரின் வசதியால் அவர் அண்ணா ஆனார். மற்றவர்கள் தம்பிகளானார்கள். கலைஞருக்கோ அனைவரும் உடன்பிறப்புகளானார்கள்.

dk symbolஅரசியல்பூர்வமான உறவுச்சொல்லாடல்களின் இடத்தை குடும்ப அடிப்படையிலான உறவுச் சொல்லாடல்கள் நிரப்பிக்கொண்டன. இதை ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பது வரை நீட்டித்துக்கொள்ளலாம். பகுத்தறிவைப் பேசுவதாய் வந்த திராவிட இயக்கத்தில்தான் அண்ணா ‘இதயதெய்வம்’ ஆனார். எம்.ஜி.ஆர் ‘அமரரானார்’.

ஆக மதவழிபாட்டிற்குப் பதிலாகத் தனிநபர் வழிபாட்டையும் பழம்பிம்ப வழிபாடுகளையும் திராவிட இயக்கம் முன்வைத்தது. மதமற்ற ஒரு வழிபாட்டுமுறையை உருவாக்கியதுதான் திராவிட இயக்கப் பகுத்தறிவின் சாதனை. இந்தப் பதிலியாக்கத்தின் விளைவாக பண்பாட்டுப் பெருமிதத்தின் பெயராலே திராவிட இயக்கத்தலைவர்களின் சொல்லாடல்களிலும் செயற்பாடுகளிலும் தமிழ்க்குடும்ப உறவுமுறைகளில் சிறுகீறலுமில்லாத மதிப்பீடுகளாய் ஆண்மய்ய மற்றும் ஆணாதிக்க மதிப்பீடுகள் நிரம்பிவழிந்தன. எனவே தர்க்கபூர்வமான பகுத்தறிவிற்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது. அதைக்காரணம் காட்டி அவற்றின் பகுத்தறிவே அழகியலைக் கொன்றழித்தது (அ) பக்தியுணர்வைத் தடைசெய்தது என்று குற்றம்சாட்டுவது அறியாமையேயாகும்.

அவற்றிற்கான காரணங்களை நாம் சூழலில்தான் தேடவேண்டும். தேவதைக்கதைகள் ஒழிந்துபோனதற்கு திமுக காரணமில்லை. அண்ணாதுரை ஆட்சிக்காலத்திலும் குழந்தைகள் பாட்டிகளிடம் கதைகேட்டுக்கொண்டிருந்தார்களே தவிர, ”ஏழுமலை ஏழுகடல் தாண்டி அசுரனின் உயிர் எப்படி இருக்கும்?” என்றெல்லாம் ‘பகுத்தறிவு’க்கேள்விகளை எழுப்பவில்லை.

ஆனால் இன்றைய சூழல்வேறு. நவீனக்கல்விமுறையும் ஊடகங்களின் வளர்ச்சியினூடான விஞ்ஞான வளர்ச்சியும்தான் தேவதைகளின் மரணத்திற்குக் காரணம். கி.ராஜநாராயணன் ஒருமுறை சொன்னார், ‘ஒரு குழந்தை வானம் ஏன் நீலமாக இருக்கிறது, கடலில் ஏன் அலைகள் வருகின்றன என்றெல்லாம் சதா கேள்விகேட்டுத்துளைக்கும். கேள்விகேட்பது குழந்தைகளின் இயல்பு. ஆனால் மூன்றுவயதில் நாம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிடுகிறோம். பின் பிரம்போடு வாத்தியார் கேள்விகேட்கத்தொடங்கிவிடுகிறார். குழந்தைகள் கேள்விகளற்றுப்போகிறார்கள்’ என்று. நமக்குத்தான் குழந்தைமையைக் கொல்லும் ஹார்மோன் ஊசிகள் பாடத்திட்டங்கள் என்னும் பெயரில் இருக்கின்றனவே!

ஆனாலும் பகுத்தறிவைத்தாண்டி மாயச்சாகசத்திற்காய் ஏங்கும் குழந்தை மனம் அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடுவதில்லை. அவை ஜெட்டிக்ஸாகவும் சன்டிவியின் சுட்டிடிவியாகவும் ஹாரிபார்ட்டராகவும் மடைமாற்றம் கொள்கின்றன. எவ்வித ஆதாய நோக்கமுமற்று தேவதைக்கதைகளைப் பகிர்ந்துகொண்ட பாட்டிகளின் இடத்தை வணிகநோக்கமும் அரசியல்நோக்கமும் கொண்ட அனிமேசன் பிம்பங்கள் நிரப்பிக்கொள்கின்றன.

வீட்டில் போகோ ஓடுகிறது. விருந்தினர் வருகிறார். ‘வாங்க, எப்படியிருக்கீங்க?’ என்று ஒரு கேள்வியை வீசிவிட்டு போகோவின் மாயக்குகைக்குள் மறைகிறோம். அன்றொருநாள் தேவதைக்கதைகள் சொன்ன கிழவி மூலையில் முடங்கிக்கிடக்கிறாள். சொல்லப்படாத தேவதைக்கதைகள் வழிந்துகிடக்கின்றன வெறும் உமிழ்நீராய்…

சில பின்குறிப்புகள்:

1. எம்.டி.எம்மை நேர்காணல் எடுத்தவர் அரசின் குரலே பாடத்திட்டங்களாய் மாறுகின்றன என்கிறார். ஆனால் நாற்பதாண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பாடத்திட்டங்களிலிருந்து பக்தி இலக்கியங்கள் எடுக்கப்பட்டதில்லை. மேலும் சீறாப்புராணம், யேசுகாவியம், ரட்சண்ய யாத்திரீகம் போன்ற இந்து அல்லாத புறச்சமய இலக்கியங்களும் இடம்பெற்றன. வேண்டுமானால் புலவர்.குழந்தையின் ராவணகாவியம், பாரதிதாசனின் கண்ணகிபுரட்சிக்காப்பியம் ஆகியவை இடம்பெற்றிருக்கலாம்.

2. பெரியாரின் பகுத்தறிவு வெறுமனே தர்க்கபூர்வமானது மட்டுமில்லை என்பதை புதியகோடங்கி இதழில் அ.மார்க்சின் ‘பெரியார்?’ நூலிற்கான விமர்சனத்திலும் புத்தகம்பேசுது மற்றும் விடுதலை ஞாயிறுமலரில் மீள்பிரசுரமான ‘பெரியாரில் மிளிர்ந்த கவித்துவ அறம்’ என்னும் கட்டுரையிலும் சற்று விரிவாக விளக்க முயற்சித்திருக்கிறேன்.

3. திராவிட இயக்கத்தினரின் ஆண்மய்யச்சொல்லாடல்களை அண்ணாவின் ‘ரோமாபுரிராணிகள்’, கருணாநிதியின் பலபிரதிகள், பெரியார் இயக்கத்தவரின் புராண ஆபாசம் குறித்தவிமர்சனப்பேச்சுகள், பாரதிதாசனின் குடும்பவிளக்கு, இருண்டவீடு முதலான நூல்கள் தொடங்கி, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், ஏன் நமது திராவிட இயக்க ஆதரவுப் பதிவாளர்களான விடாதுகருப்புவின் எழுத்துக்கள் மற்றும் தோழர்.செந்தழல்ரவி ‘ஆம்பளையாயிருந்தா நேரா வா, நீ என்ன பொட்டையா?’ என்று அவரது ஆழ்மனதில் புதைந்துபோன ஆண்மய்யச்சொல்லாடல்களை உதிர்த்தது எனப் பல்வேறு உதாரணங்களை வரிசைப்படுத்தலாம்.

4. எம்.டி.முத்துக்குமாரசாமியின் நேர்காணல் சமீபத்தில் தீராநதியில் வந்த நேர்காணல்களில் முக்கியமானது. ஆனால் எம்.டி.எம்மின் பிரதிகளில் வெளிப்படட் சைவவெள்ளாளக் கருத்தியல் குறித்துக் காத்திரமான விமர்சனங்கள் தமிழ்ச்சூழலில் முன்வைக்கப்பட்டன. அதுகுறித்து எந்தக் கேள்வியுமில்லை.மேலும், அவர் நகுலனைத் ‘திராவிட இயக்கத்தால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட விளிம்புப் பிராமண மனமாய்’ப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இது ‘பிராமணர்கள் தலித்துகளைப் போல நடத்தப்படுகிறார்கள்’ என்றலறும் அசோகமித்திரனின் குரலோடு பொருந்திப்போவது கவனிக்கத்தக்கது.

மேலும் நகுலனும் தான் திராவிட இயக்கத்தால்தான் தனிமைப்பட்டுப் போனதாக சொல்லிக்கொண்டதாகத் தெரியவில்லை. சு.ரா மற்றும் ஞானக்கூத்தன் போன்றோரின் பிரதிகளில் காணப்படும் திராவிட இயக்கவெறுப்பு மனோநிலையை நகுலனின் எழுத்துக்களில் காண இயலாது.

சாரு தனது நகுலன் அஞ்சலிக்கட்டுரையில், ‘முதல் சந்திப்பில் ‘நீங்க பார்ப்பானா’ என்று நகுலன் கேட்டதாகவும் இல்லையென்றவுடன், ‘ஏன் அவர் முகத்தில் அவ்வளவு திருப்தி என்றும் எழுதுகிறார். ஒருவேளை இதே கேள்வியை நகுலன் எம்.டி.எம்மிடம் கேட்டிருந்தால் ‘ஆமாம்’ என்றிருப்பாரோ என்னவோ?

– சுகுணாதிவாகரின் மிதக்கும் வெளி வலைத்தளப்பதிவில் இருந்து…
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *