தமிழக அரசு தொடங்கியுள்ள ‘சிற்பி’ திட்டம் என்றால் என்ன?..

தமிழக பள்ளி மாணவர்கள் உட்பட சிறார்களால் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கவும், போதைக்கு எதிரான விழிப்புணர்வை சிறார்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும், முன்மாதிரி முயற்சியாக காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்கள் செயல்படும் வகையில் ரூ.4.25 கோடி மதிப்பில் “சிற்பி” என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் 8-ம் வகுப்பில் பயிலும் தலா 50 மாணவர்கள் சிற்பி திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறையுடன் இணைந்து, பள்ளி மாணவர்கள் செயல்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பி திட்ட மாணவர்களுக்கு பிரத்யேக சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.
சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணுதல், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு வழிகாட்டுதல், பள்ளிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் சிற்பி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், முன்னதாக அவர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல் துறை மக்களின் நண்பன் என்று சொல்லும் வேளையில், மக்களும் காவல்துறையின் நண்பனாக இருக்க வேண்டும் என்பதே தமது எண்ணம். காவல் துறையும், மக்களும் இணைந்து செயல்பட்டால் குற்றங்களே இருக்காது. காவல்துறைக்கும், மக்களுக்கும் பாலமாக சிற்பி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டமே சிற்பி.