கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யத் தடை கோரிய மனு : சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடைகோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
தமிழக கோயில்களில் ஆகம விதிகளை மீறி தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் எனவும் கூறி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல மனுவாக தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு “ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளன. எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது.

எந்த மொழியில் பக்தர்கள் விருப்பப்பட்டு கேட்கிறார்களோ அந்த மொழியை அர்ச்சகர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. விரிவான ஆய்வுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது” எனக்கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.