சுங்கச்சாவடியில் முந்திரி விற்ற மாணவி: கல்வி கற்க உதவிய தி.மு.க பேரூராட்சி தலைவர்..

படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் சுங்கச்சாவடியில் முந்திரி வியாபாரம் செய்து வந்த மாணவியின் கல்வி படிப்பை மீண்டும் தொடர் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் உதவி செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரத்தைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவருகிறார். ஆனால் குடும்ப வறுமை காரணமாகப் படிப்பை தொடரமுடியாமல், தந்தையுடன் சேர்ந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் முந்திரி விற்பனை செய்து வருகிறார்.

மேலும் கல்லூரிக்கு சென்றபோதும் தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார் விடியற்காலை 4 மணிக்கு சுங்கச்சாவடியில் தந்தையுடன் சேர்ந்து முந்திரி விற்ற பிறகு கல்லூரிக்குச் சென்றுவந்துள்ளார். ஆனால் குடும்ப வறுமையின் காரணமாகத் தொடர்ந்து மாணவி வசந்தியால் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை.
இதனால் படிப்பைக் கைவிட்டு விட்டு தந்தையுடன் முழுநேரமாகவே சுங்கச்சாவடியில் நின்று வந்துச்செல்லும் பேருந்துகளில் முந்திரி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் மாஹே தங்கம் என்பவர் மாணவி வசந்தியின் கஷ்டத்தை வீடியோவாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் மாணவி, ‘குடும்ப வறுமையால் கல்லூரியைக் கைவிட்டு விட்டு தந்தையுடன் சேர்ந்து முந்திரி விற்று வருகிறேன். தனக்கு யாராவது படிக்க உதவினால் நன்றாக இருக்கும்” என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது.
இது குறித்து செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் கவனத்திற்கு வந்துள்ளது. உடனே மாணவி சிந்து மற்றும் அரவது தந்தையை அலுவலகத்திற்கு அழைத்து கல்விக் கட்டணத்திற்கான செலவுகளை ஏற்றுக் கொள்வதாகக் கூறி வசந்தியின் கனவை நினைவாக்கியுள்ளார். மேலும் எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேட்கும்படியும் கூறியுள்ளார்.

இந்த பெரிய உதவியை அடுத்து மாணவி வசந்தி, மொக்தியார் அலிமஸ்தானுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் மாணவி வசந்தியின் கல்விக் கனவை வசந்தமாக்கிய செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலிமஸ்தானுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.