திருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருமண தோஷம் மற்றும் குழந்தை வரம் வேண்டிய 100 க்கும் மேற்பட்ட பெண்களை சாமியாடிகள் மண்டியிட வைத்து சவுக்கால் அடித்த சம்பவம் அரங்கேறியது.

சாட்டையால் அடிவாங்கி நேர்த்தி கடன் செலுத்தும் வினோத பேய் விரட்டும் நிகழ்ச்சி குறித்த விவரம்

இந்த பெண்கள் ஏதோ திருவிழாவில் விருந்துக்காக அமர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணி விட வேண்டாம், திருமண தோஷம் நீங்க வேண்டி இளம் பெண்களும், குழந்தைவரம் வேண்டி திருமணமான பெண்களும் இப்படி வரிசை கட்டி அமர்ந்திருப்பது பூசாரியிடம் சாட்டை அடி வாங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்துவதற்காக…!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்திஉள்ள அச்சப்பன் கோவிலில் ஆயுத பூஜைக்கு மறு நாள் விஜயதசமி அன்று பேய்விரட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

அச்சப்பன் சாமி, அகோர வீரபத்திரர், மதுரைவீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களை பல்லக்கில் ஏற்றி காட்டுக்கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்கின்றனர்.

கடன் தொல்லை நீங்கவும், தங்களுடைய கஷ்டங்கள் நீங்கவும் வேண்டிய பக்தர்களுக்கு நேர்த்திகடனாக தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பெண்களுக்கு பேய் விரட்டும் நிகழ்ச்சிக்கான நேர்த்திகடன் அரங்கேற்றப்பட்டது.

தலைவிரி கோலத்துடன் வணங்கியபடி தரையில் கைவைத்து மண்டியிட்டு நீண்டவரிசையில் பெண்கள் காத்திருக்க, சாமியாடியும், கோவில் பூசாரியும் நிமிர்ந்து கையெடுத்து கும்பிடும் பெண்களை சாட்டையாலும் சவுக்காலும் அடிக்க தொடங்கினர்

சில பெண்கள் ஒரு அடியில் விட்டால் போதும் என்று ஓட்டம் பிடிக்க…. சில பெண்களோ எத்தனை அடியும் தாங்கும் வல்லமை உள்ளவர்களாக நிமிர்ந்து கும்பிட்டனர்…

ஒரு புறம் அடி விழுந்து கொண்டிருக்க வரிசையில் மண்டியிட்டிருந்த இளம் பெண்களோ நமக்கு எத்தனை அடி விழும் என்ற திக் திக் மன நிலையில் அடிவிழுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

திருமணமாகத பெண்கள் சிலர், பெற்றோர் விருப்பத்தின் பேரின் இத்தகைய பேய் விரட்டும் நேர்த்திக்கடனை செலுத்தினாலும், குழந்தை வரம் கேட்டு வேண்டிய பெண்கள் மிகுந்த ஈடுபாட்டோடு காணப்பட்டனர்

கம்யூட்டர் காலத்திலும்… டிஜிட்டல் யுகத்திலும்…. இப்படியெல்லாம் தமிழகத்தில் நடக்கின்றதா ? என்று சிலர் கேள்வி எழுப்பினாலும் அந்த பகுதி பெண்களோ பேய் விரட்டும் நிகழ்ச்சி மீதான தங்கள் நம்பிக்கையை இன்னமும் இழக்கவில்லை..!