முக்கிய செய்திகள்

“விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயக படுகொலையாகும்” : இயக்குநர் அமீர்..


ஆர்.கே. நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தமிழக அரசியலில் மிகச் சிறந்த ஜனநாயகப் படுகொலை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நண்பர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட செயல் தமிழக அரசியலில் மிகச் சிறந்த ஜனநாயகப் படுகொலையாகும். தேர்தல் ஆணையம் என்பது மத்திய மாநில ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகள் என்கிற உண்மை இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

நண்பர் விஷால் திடீரென சுயேட்சை வேட்பாளராக அறிமுகமானது முதல் மறைந்த எம்ஜிஆர் மற்றும் அம்மையார் சமாதியில் அரசியல் பிரவேசம் தொடங்கியது உள்ளிட்ட பல்வேறு செயல்கள் குறித்து அவர் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இதுபோன்ற ஒரு ஜனநாயகப் படுகொலையை நாம் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. அது யாருக்கு நிகழ்ந்தாலும் தவறு தவறுதான்.

நண்பர் விஷாலின் வேட்பு மனுவை முதலில் நிராகரித்து பின் ஏற்றுக்கொண்டு மறுபடியும் அவர் இல்லாத போது அவரது வேட்பு மனுவை நிராகரித்திருப்பது அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. இது போன்ற நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அத்தனை மனிதருக்கும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. சர்வாதிகாரம் ஒழிந்து ஜனநாயகம் தழைத்தோங்க போராடுவோம்.” என தெரிவித்துள்ளார்.