அதிகரிக்கும் ஜேஎன்.1 கரோனா தொற்று: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்தறை அறிவுறுத்தல்..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,669 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால், கேரளாவில் 3 பேர், கர்நாடகாவில் 2 பேர், பஞ்சாப்பில் 1 என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, இதுவரை தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,33,327 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் சதவீதம் 98.81 ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன்.1 வகை கரோனா தொற்று கடந்த சிலநாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மகாராஷ்டிராவில் ஒருவரிடமும் கோவாவில் 19 பேரிடமும் கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று பரவுவதற்கு புதிய ஜேஎன்.1 வகை திரிபே காரணமாக கூறப்படுகிறது.

சுகாதாரத்துறை கூட்டம்: கரோனா தொற்று மீண்டும் பரவி வருவதை கருத்தில்கொண்டு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக்மாண்டவியா தலைமையில் டெல்லியில் புதன்கிழமை உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் மாண்டவியா கூறுகையில், “மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால் பீதியடையத் தேவையில்லை. நமது தயார்நிலையில் எவ்வித தளர்வும் இல்லை. பொது சுகாதாரம் என்று வரும்போது எவ்வித அரசியலுக்கும் இடமில்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு முழு உதவிகள் அளிக்கும். பாதிக்கப்பட்ட மாநிலங்கள் தயார்நிலையை உறுதி செய்ய ஒவ்வொரு மருத்துவமனையிலும் 3 மாதத்துக்கு ஒரு முறை கரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்