ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்…

அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 31) வெளியிட்ட அறிக்கை:
“கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற 28 வயது இளைஞர் தனியார் வங்கியில் பணி செய்து வந்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்த அவர், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடத் தொடங்கினார்.

தொடக்கத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் அதிகப் பணம் சம்பாதித்த மதன்குமார், ஒரு கட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டார். முதலில் லாபம் சம்பாதித்த அவர், பின்னர் தன்னிடமிருந்த பணம் முழுவதையும் இழந்துவிட்டார்.

அப்போதும் ஆன்லைன் சூதாட்டம் என்ற மோகினிப் பிசாசின் பிடியிலிருந்து மீள முடியாத அந்த இளைஞர், தமது நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி சூதாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கில் கடன் சேர்ந்து விட்டதால், அதைச் சமாளிக்க முடியாமல் மதன்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

இவற்றில் எதுவுமே புதிய தகவல் இல்லை. இதற்கு முன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு என்ன நடந்ததோ, அதுதான் மதன்குமாருக்கும் நடந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தின் வடிவமைப்பே அதுதான். ஆன்லைன் சூதாட்டம் என்பது ஒரு மாயவலை.

மின்னஞ்சல் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் ஆன்லைன் சூதாட்டம் விளையாட வரும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அழைப்பு விடுக்கும்; ஊடகங்கள் மூலமாகவும் பிரபலங்களைக் கொண்டு விளம்பரங்கள் செய்யப்படும்; சிறப்பு போனஸாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும், அதைக் கொண்டு சூதாட்டம் விளையாடி பணத்தை வெல்லலாம் என்றும் ஆசை காட்டப்படும்.

அவற்றை நம்பி, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீளவே முடியாது. தங்களிடமுள்ள பணம் முழுவதையும் இழந்து, கடன் வாங்கியும் சீரழிவதைத் தடுக்கவே முடியாது. அவ்வாறு பணத்தை இழந்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தக் கொடுமை தொடர்கிறது.

கடந்த 10 நாட்களில் மட்டும் புதுச்சேரி, மதுரை மேலூர், சென்னை செம்பியம் ஆகிய இடங்களில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்போது நான்காவது தற்கொலை நிகழ்ந்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் என்ற தீமையை உடனடியாகத் தடுக்காவிட்டால் தற்கொலைகளும், அதனால் நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து விடும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால், தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம் வைத்துச் சூதாடினால் அது குற்றம் ஆகும். ஆனால், ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை; தடை செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமின்றி, கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்தும் பல ஆன்லைன் சூதாட்டத் தளங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை இளைஞர்களை எளிதில் கவர்ந்து வீழ்த்துகின்றன. ஆன்லைன் சூதாட்டங்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது.

அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.