செவிலியர்கள் போராட்டத்தை கைவிடா விடில் கடும் நடவடிக்கை: டிஎம்எஸ் வளாகத்தில் எச்சரிக்கை பலகை

டிஎம்எஸ் வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருவோர், பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மற்ற பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுவது போல தங்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கடந்த திங்கள் கிழமை (27.11.17) முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்தில் போதிய குடிநீர், கழிப்பிட வசதி இல்லை என்றும், இதனால் பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

செவிலியர்களின் போராட்டத்துக்கு திமுக, பாஜக சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 90% கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பேச்சு வார்த்தையில் பங்கேற்ற செவிலியர்கள் அறிவித்தனர். ஆனால், டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள ஒரு பகுதி செவிலியர்கள் அரசாணை 191 ஐ நடைமுறைப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். எத்தனை நாட்கள் ஆனாலும் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில், உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக் கூடாது என கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது, போராடத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பாத செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎம்எஸ் வளாகத்தில், கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநகரகம் சார்பில் எச்சரிக்கைப் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

Medical department warned the nurses in agitation