தகவல் திருட்டு மோசடி: ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்! (Cambridge Anlytica issue: India serve notice to FB)

கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா தகவல் திருட்டு முறைகேடு தொடர்பாக அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தனிநபர் தொடர்பான தகவல்களை கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனத்தின் மூலம் திரட்டி, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான சமூக உளவியலைக் கட்டமைக்க முயல்வதாக அண்மையில் புகார்கள் எழுந்தன. அமெரிக்காவில் ட்ரம்பும், இந்தியாவில் மோடியும் இந்த முறையில்தான் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கி, தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. பதிலுக்கு காங்கிரசும் இதேபோன்ற செயலில் ஈடுபட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இதனால், ஃபேஸ்புக் மீதான நம்பகத் தன்மையே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில், ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தனிநபர் குறித்த தகவல்களை, பிற நபர்கள் முறைகேடாக பயன்படுத்தி விடாமல் தடுக்க எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து பதிலளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. 

மேலும், தனிநபர் தகவல்கள் மூலம் இந்தியத் தேர்தல் நடைமுறையில் ஊடுருவித் தாக்கத்தை ஏற்படுத்தும் பணியில் ஏதேனும் நிறுவனங்களை ஃபேஸ்புக் ஈடுபடுத்தி உள்ளதா என்றும் அந்த நோட்டீஸில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து  கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்நிறுவனம் வரும் 31ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Cambridge Anlytica issue: India serve notice to FB