மதுரை,நெல்லை, தஞ்சாவூர் பேருந்து நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் நெல்லை புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், தஞ்சை பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகம், மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துறை அமைச்சர் நேரு மற்றும் நகராட்சி துறை செயலாளர் சிவதாஸ் மீனா, நிதியமைச்சர் பி.டி.ஆர். உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்..
திறப்பு விழாவை முன்னிட்டு பெரியார் பேருந்து நிலையம் நேற்று இரவு முதல் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது இரவில் பேருந்து நிலையத்தைப் பார்ப்பதற்கு ரம்மியமாகக் காணப்பட்டது. தற்போது புதிய பெரியார் பேருந்து நிலையத் திறப்பை முன்னிட்டு, பேருந்துப் போக்குவரத்து பெரியார் நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தப் பேருந்து நிலையம் போதுமான பேருந்துகள் நிறுத்தும் அளவிற்குக் கட்டப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருந்தது. தற்போதுதான் இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருப்பதால் ஓரிரு நாளில் பெரியார் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் பற்றிய பிரச்சினைகள் முழுமையாகத் தெரியவரும். பேருந்து நிலையம் திறந்தவுடனே பெரியார் நிலையம் பகுதியில் நெரிசல் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

பேருந்து நிலையத்தில் 40 சதவீதம் இடத்தில் மாநகராட்சி வணிக நோக்கில் வணிக வளாகம் அமைத்துள்ளது. இந்த வணிக வளாகம் கட்டுமானப் பணி இன்னும் முடியவில்லை. இந்த வணிக வளாகம் திறக்கப்படும்போது அங்கு வரும் வாகனங்கள், வாடிக்கையாளர்களும் வாகனங்கள் வரும்போது பேருந்து நிலையம் வளாகம் மட்டுமில்லாது பேருந்து நிலையத்திற்கு வெளியேயும் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே பெரியார் பேருந்து நிலையத்தில் போதுமான பேருந்துகள் வந்து செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுவதாலே இந்தப் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஆனால், அந்த நோக்கமே நிறைவடையாமல் வணிகப் பேருந்து நிலையமாகக் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தால் ஏற்படும் நெரிசலை மாநகராட்சியும், அரசுப் போக்குவரத்துக் கழகமும் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பது தெரியவில்லை.

அழகோவியமான பேருந்து நிலையச் சுவர்கள்

பொதுவாக, சிறுநீர் கழிப்பதும், எச்சில் துப்புவதுமாகப் பேருந்து நிலையச் சுவர்களைப் பயணிகள் அசுத்தம் செய்வார்கள். அதனால், பேருந்து நிலையமே நோய் பரப்பும் இடமாக மாறிவிடும். இந்தச் சூழலைத் தவிர்க்க மதுரை மாநகராட்சி மதுரையின் பழமையையும், அதன் பராம்பரியத்தையும் போற்றும் வகையிலும் அதனை அடையாளப்படுத்தும் வகையிலும் பேருந்து நிலையச் சுற்றுச் சுவர்களில் பயணிகளைக் கவரும் வசீரகமான அழகோவியங்களை மாநகராட்சி ஒவியர்களை வைத்து வரைந்துள்ளது. அதனால், தற்போது ஓவியங்கள் வரைந்த பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர்கள் பார்ப்பதற்கு அழகாகவும், வண்ணமயமாகவும் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.