ஆன்லைன் விற்பனை அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தொடர் கடையடைப்பு: மருந்து வணிகர்கள்

ஆன்லைன் விற்பனை அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தொடர் கடையடைப்புப் போராட்டம் நடத்த நேரும் என மருந்து வணிகர்கள் கூறி உள்ளனர்.

மத்திய அரசு மருந்து வணிகர்களின் நலனுக்கு எதிரான ஆன்லைன் மருந்து விற்பனை அனுமதியை ரத்து செய்ய கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தினர் கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

ஆன்லைனில் மருந்து வணிகத்தை அனுமதிக்கும் முடிவை எதிர்த்து இந்திய அளவில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 30 ஆயிரம் மருந்து கடைகளும் இந்தியா அளவில் 8 லட்சம் மருந்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மருந்து வினியோகத்தை அரசு அனுமதித்தால் தீவிரவாதிகள் முதல் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தடையின்றி மருத்துகள் கிடைக்கும் நிலை உருவாகும், மருத்துவர்கள் மருந்துசீட்டை போலியாக தயாரித்து மருந்துகள் வாங்கும் நிலை ஏற்படும் இதனால் ஆன்லைன் மருந்து வினியோகத்தை மத்திய அரசு அனுமதிக்க கூடாது..
ஆன்லைன் மருந்து விற்பனையை அனுமதித்தால் மருந்து வணிகர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

இந்த போராட்டத்திற்கு பின்பு மத்திய அரசு ஆன்லைன் மருந்து விற்பனை அனுமதியை ரத்து செய்யவில்லை என்றால் டிசம்பர் மாதம் 3 நாட்கள் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.