2014 பொதுத்தேர்தலில் வெற்றி பெற பாஜக என்னைப் பயன்படுத்திக் கொண்டது: அண்ணா ஹசாரே ஒப்புதல்

தன் கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் அண்ணா ஹசாரே, 2014 தேர்தலில் வெற்றி பெற பாஜக தன்னைப் பயன்படுத்திக் கொண்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

ரலேகான்சித்தியில் அவர் இது குறித்து கூறியதாவது:

ஆமாம்! 2014 தேர்தலில் வெற்றி பெற பாஜக என்னைப் பயன்படுத்திக் கொண்டது. லோக்பாலுக்கான என் போராட்டத்தின் மூலம்தான் பாஜகவும் ஆம் ஆத்மியும் ஆட்சியைப் பிடித்தன. இப்போது இவர்கள் இருவர் மீதும் எனக்கு சிறிதளவும் மரியாதை இல்லை.

பிரதமர் மோடியின் அரசும் மக்களை தவறாக வழிநடத்துகிறது, மேலும் எதேச்சதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா அரசு கடந்த 4 ஆண்டுகளாக பொய்களாகவே கூறிவருகிறது.

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பொய்கள் கூற முடியும்? இந்த அரசு நாட்டு மக்களைக் கைவிட்டு விட்டது. என்னுடைய கோரிக்கைகளில் 90% நிறைவேற்றப்பட்டதாக மாநில அரசு கூறுவதும் தவறுதான்.

2011 மற்றும் 2014-ல் என்னுடைய போராட்டங்களினால் பயனடைந்தவர்கள் இன்று என் கோரிக்கையை ஏற்க மறுத்து வாளாவிருக்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக நான் கூறியவற்றை அமல் படுத்த ஒன்றும் செய்யவில்லை.

மத்திய மாநில அரசின் அமைச்சர்கள் என்னிடம் வந்து பேசுவார்கள் என்றனர், கூடாது இது தவறான கற்பனைகளுக்கு இட்டுச் செல்லும்

அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை எழுத்துப்பூர்வமாக அளிக்கட்டும். அவர்கள் உத்தரவாதங்களின் மீது எனக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை.

இவ்வாறு கூறினார் அண்ணா ஹசாரே.

கடந்த வாரம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், ஹசாரேயை ‘ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் ஏஜெண்ட்’ என்று வருணித்தார்.

ஆனால் சில மணிநேரங்களிலேயே அஜித் பவார் மன்னிப்புக் கேட்டார்.

இந்நிலையில் உண்ணாவிரதம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்காதா என்று கேட்ட போது, “கவலை வேண்டாம், நான் நன்றாகவே இருக்கிறேன்,

கடவுள் என் பக்கம் இருக்கிறார். அடுத்த 5 நாட்களுக்கு எனக்கு ஒன்றும் ஆகாது” என்றார்.