7.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்: ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்காதது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்…

7.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்: ஆளுநருக்கு முதல்வர் பழனிச்சாமி அழுத்தம் கொடுக்காதது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை..
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த வருவதால், உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. தொடர்ந்து மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த மாதம் 15ம் தேதி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் இன்று வரை ஒப்புதல் அளிக்காததால் சட்டம் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதலமைச்சர் திரு. பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ‘தமிழக ஆளுநர் – முதலமைச்சர் – மத்திய பா.ஜ.க. அரசு’ ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்றும் – நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.