சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தருக்குக் கரோனா தொற்று…

சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சாமி தரிசனத்துக்காக வந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக கடந்த 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாள்தோறும் 250 பக்தர்கள் வீதம் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் வரும்போது 48 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அத்தகைய பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பரிமலைக்கு வரும் பக்தர்கள் வசசீர்கரா, எருமேலி வழியாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்தப் பாதை மூடப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரத்தில் சன்னிதானம், நிலக்களூர் பம்பாவில் தங்கவும் அனுமதியில்லை. பக்தர்கள் வசதிக்காக சன்னிதானம், நிலக்கல், பம்பா ஆகியவற்றில சிறப்பு மருத்துவ முகாம்களைக் கேரள அரசு அமைத்துள்ளது.

பக்தர்கள் அனைவரும் நிலக்கல் பகுதிக்கு வரும்போது அங்கு கேரள அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்குழுவினர் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தி அதில் நெகட்டிவ் இருக்கும்பட்சத்தில் மட்டும் பக்தர்களை மலை ஏற அனுமதிக்கின்றனர்.

இதில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பக்தர்களுக்கு நிலக்கல் பகுதியில் கேரள மருத்துவக் குழுவினர் சார்பில் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்திலிருந்து ஒரு பக்தர் சபரிமலைக்குச் சாமி தரிசனம் செய்ய நேற்று வந்திருந்தார். அந்த பக்தரிடம் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்கவில்லை. இதையடுத்து நிலக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவக் குழுவினர் தமிழகத்தைச் சேர்ந்த அந்த பக்தருக்கு ஆன்டிஜென் பரிசோதனை நடத்தினர். அதில் அந்த பக்தருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

அந்த பக்தர் தனிமைப்படுத்தப்பட்டு, ஸ்வாப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த பக்தர் உடனடியாக பத்தனம்திட்டா அருகே ரன்னி நகரில் உள்ள கார்மெல் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் கரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்