8 வழிச்சாலை அரசாணை ரத்து: நிலத்தைத் தொட்டு வணங்கி கண்ணீர்விட்ட விவசாயிகள்

8 வழிச்சாலை அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவைக் கேட்ட சேலம் விவசாயிகள், அரசு நட்டஅளவீட்டுக் கற்களைப் பிடுங்கி வீசிவிட்டு, நிலத்தை வணங்கி கண்ணீர்விட்டனர்.

சேலம் – சென்னை இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள் எனப் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தெரிவித்து, 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தீர்ப்பை வரவேற்று சேலம், அயோத்தியா பட்டினத்தை அடுத்த ராமலிங்கபுரத்தில் விவசாயிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அரசு சார்பில் தங்களின் நிலத்தில் நடப்பட்டிருந்த அளவீட்டு கற்களைப் பிடுங்கித் தூரமாக வீசினர். நிலத்துக்குக் கற்பூரம் காட்டி வழிபட்டனர்.

‘சேலம் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம்’ சார்பில் தீர்ப்பு தொடர்பாகக் கூறும்போது, ”நீதிமன்றம்தான் அரசாணையை ரத்து செய்துள்ளது.

தமிழக அரசே இதனை முன்வந்து ரத்துசெய்யவேண்டும். அரசே செயல்படுத்தும் வரையில் பிரச்சாரம் தொடரும்” என்றனர்.

விவசாயிகள் சிலர் இதுகுறித்துப் பேசும்போது, ”நாங்கள் சாதாரணமாக வெளியே போனால் கூட இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று போலீஸ் கண்காணித்தனர்.

அவர்களில் சிலர் எங்களை பயமுறுத்தவும் செய்தர். இத்தனை நாட்கள் கழித்து இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறோம்.

விவசாய நிலத்தை அழித்துத்தான் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதில்லை. இந்த தீர்ப்பு, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நெடுவாசல் ஆகியவற்றுக்கும் முன்னுதாரணமாக அமையவேண்டும்” என்றனர்.