Anti Hindi Protest In Tamilnadu Again?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு “நீட்” விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. இதைச் சற்று முன்னரே செய்திருந்தால் நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்கள் நினைத்தது நடந்திருக்கக் கூடும். போகட்டும். “எப்போதுமே நடக்காமல் போவதை விட, இப்போதாவது நடந்ததே” என்ற ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்தி ஆறுதல் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
இதனிடையே, தமிழக நலன்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதுடன், கொள்கைசார் திட்டங்களையும் தொடர்ச்சியாக முடக்கிவரும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி வெடிக்க வாய்ப்பிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலர் கொந்தளிப்பதைப் பார்க்க முடிகிறது.
1965களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் போல் தற்போதும் தமிழகம் கிளர்ந்தெழுவதற்கு போதிய காரணங்கள் இருப்பதாக கூறும் அவர்களது உணர்விலும், கோபத்திலும் உள்ள நியாயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதைப்போன்ற பெரும் கிளர்ச்சி தற்போதைய காலக்கட்டத்தில் வெடிக்குமா? அதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா? என்ற கேள்வியில் உள்ள யதார்த்தத்தை நம்மால் புறந்தள்ளிவிட முடியவில்லை.
60களில் திராவிட இயக்கத்தின் வீச்சும், வீரியமும் உச்சத்தில் இருந்தது. அதுமட்டுமின்றி, அண்ணா போன்றோரின் கனல் கக்கும் பேச்சுகளும், கருத்தாழம் மிக்க சொல் வீச்சுகளும் இளைஞர்களை ஈர்த்து, ரத்தத்தைச் சூடேற வைத்தன. எங்குபார்த்தாலும் இளைஞர்களும், மாணவர்களும் இயல்பாகவே திரண்டார்கள். இந்த அரை நூற்றாண்டு ஓட்டத்தில் தமிழகமும், தமிழர்களும் நிறைய மாறி இருக்கிறார்கள். இன்று ஊடகங்கள் பெரிதாக இருப்பது உண்மைதான். எனினும் அவற்றில் உண்மையான கருத்து உந்துதலைத் தரும் நிகழ்ச்சிகளோ, பேச்சுகளோ அதிகம் இடம்பெறுகின்றனவா? நெல்லை விட பதர்கள்தானே அதிகம் காணப்படுகின்றன.
மற்றொரு பக்கம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாழும் மண்ணுக்கும், வாழ வேண்டிய வாழ்க்கைக்கும் சற்றும் தொடர்பில்லாத ஏதோ ஒன்றை கல்வி என்ற பெயரில் கற்பிக்கிறார்கள். அதில் பயிலும் மாணவர்களும், இளைஞர்களும் சுயநலத் தினவேறிய வேட்டை நாய்களைப் போல், ஒருவித வெறியுடன் வெளியேறி வருகிறார்கள். கல்விப் பருவம் முழுவதும் “போட்டி உலகத்தில் வாழத் தயாராகுங்கள்” என பந்தயக் குதிரைகளைப் போல அவர்களை வளர்த்து ஆளாக்கி விட்டு, காளைப் பருவத்தில் ஒரு லட்சியவாதம் மிக்க இளைஞனாக அவன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன யதார்த்தம் இருக்கிறது?
கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும், அரைநூற்றாண்டுத் தமிழகம் அப்படி ஒரு நவீனச் சமூகத்தைத் தான் உருவாக்கி இருக்கிறது. இதில் அரசியல் இயக்கங்கள், சமூக இயக்கங்கள், பெற்றோர் என அனைவருக்கும் பங்கு இருக்கிறது. 70 வயது கிழவன் தனது படத்தை முகநூலில் பதிவிட்டால் கூட, 500, 1000 பேர் வந்து விருப்பம் தெரிவிப்பதைப் பார்க்கிறோம். அழகிய பெண்களின் படம் என்றாலோ இந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும். அரசியல், சமூகம் சார்ந்த கருத்தை ஒருவர் பதிவிட்டால் 50 பேர் கூட அதை விரும்புவதாகத் தெரியவில்லை. ஒரு சமூகத்தின் அறிவு மட்டம் எந்த அளவு இருக்கிறதோ, அதன் அளவில்தான் அதன் அரசியல் எதிர்வினைகளும், இயக்கங்களும் இருக்கும். எந்த ஒரு போராட்டத்தையும் இத்தகைய யதார்த்த நிலையை விலக்கி வைத்துவிட்டுப் பார்க்க முடியாது.
அரைநூற்றாண்டு தமிழ்ச் சமூகம் இப்படி ஒருவகையான நுகர்வு உன்மத்த மதமதர்ப்பு ஏறிப் போய் மயக்கத்தில் கிடக்கிறது என்றால், அதன் அரசியல் களமோ விவரிக்க முடியாத அளவுக்கு வெட்கக்கேடான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒரே கட்சியினர், குழுக்களாக பிரிவதும், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான பேரம் பேசிப் பின் கூடுவதுமாக பகிரங்கமான பங்குப்பரிவர்த்தனைகள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதில் கொள்கை பற்றிய கவலைக்கு ஏதேனும் இடமுண்டா…. தற்கால அரசியல் என்பது, தத்துவார்த்த உள்ளீடுகள் அனைத்தையும் இழந்த சுயநலத் தக்கைகளின் அமைப்புகளாக எந்த அளவுக்கு மாறிப் போயிருக்கிறது என்பதற்கு இது வெளிப்படையான ஓர் உதாரணம்.
இவையெல்லாம், தமிழ்ச் சமூகத்தின் தற்கால உளவியல் நிலை என்றால், அதன் அரசியல் சார்ந்த புறச் சூழலும் பெரும் போராட்டங்கள் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகளுடன் உள்ளதா என்பது கேள்விக்குறியே!
நீட் விவகாரத்தில், தமிழகம் இதுவரை போற்றிப் பாதுகாத்து வந்த சமூகநீதி அணுகுமுறையை மத்திய பாஜக அரசு முற்றிலும் முடக்கி விட்டது என்பது உண்மையே! அதற்கு வழிவிட்டதும், வழி வகுத்ததும் யார்?
1984 பொதுத் தேர்தலில் மக்களவையில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா, தற்போது அசைக்க முடியாத பலத்துடன் மத்தியில் ஆட்சியமைக்க அதன் வேலைத் திட்டங்கள் மட்டும் காரணமல்ல. அவ்வப்போது விலைபோன பிராந்தியக் கட்சிகளும்தான். தமிழகமும் அதற்கு தப்பவில்லை. 1998ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதற்கு அடிகோலியது என்றால் ,1999ஆம் மக்களவைத் தேர்தலில் திமுக அதற்கான பாதையை அகலப்படுத்தியது. 1998ல் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா சில மாதங்களிலேயே ஆதரவை விலக்கிக் கொண்டதால், அப்போதைய வாஜ்பாய் அரசு கவிழ்ந்து தேர்தல் வந்தது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது திமுக. இந்தியாவில் உள்ள அரசியலமைப்பில் தேர்தலைச் சந்திக்கும் அரசியல் கட்சிகள் எதுவானாலும், கூட்டணி விபத்துகளில் இருந்து தப்ப முடியாதுதான். ஆனால், தத்துவார்த்த ரீதியாக எதிர்த்து நிற்க வேண்டிய தருணங்களில், செய்யக்கூடாத சமரசங்களைச் செய்து கொள்வதால், அரசியல் கருத்தாண்மை நீர்த்துப் போகும் என்ற உண்மையை மறுத்துவிட முடியாது. அப்படித்தான், தமிழக கூடாரத்திற்குள் முதலில் மூக்கை நுழைத்த பாஜக என்ற ஒட்டகம், தற்போது முழுமையாக உள்ளே வந்து (அதிமுகவை பினாமியாக மாற்றி) படுத்துக் கொண்டது.
இதுதான், 60களின் தமிழக அரசியலுக்கும், தற்போதைய தமிழக அரசியலுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் வலிமையாக இருந்த காங்கிரசுக்கு எதிராக சமரசமற்ற போரை திமுக தொடுத்தது. 1961 ஜனவரி மாதம் ஒரு கூட்டத்தில் அண்ணா பேசுகிறார்….
“குடியரசுத் தலைவருக்கு கறுப்புக் கொடி காட்ட நாம் முடிவு செய்திருந்தோம். அதன்படி காட்டி இருந்தால் பலர் தியாகத் தழும்புகளை ஏற்றிருப்பார்கள். இங்கே மேடையில் இருப்பவர்களில் சிலர் பிணமாகி இருக்கக் கூடும். ஆனால் அது நிறுத்தப்பட்டு விட்டது. எனினும் அடியோடு நிறுத்தப்பட்டு விடவில்லை. என்றைக்கும் தியாகம் புரியத் தயாராக இருக்கிறோம். இந்த ஆற்றலைத் தக்க நேரத்தில் பயன்படுத்த வேண்டும். உழவர்களின் முழங்கால் வரை சேறு படிந்திருப்பது போல், விடுதலை வீரர்களின் கழுத்துவரை ரத்தம் படிந்திருக்க வேண்டும். உடலில் இருந்து பீறிட்டு வரும் இரத்தம், மார்புச் சந்தனமாக வேண்டும். இன்றைக்கு நீங்கள் பூசியிருக்கும் சந்தனம் அந்தச் சந்தனத்தை நினைவு படுத்த வேண்டும்”
போராட்டம் என்பது எத்தகையது என்ற உணர்வையும், தெளிவையும் ஊட்டி இருக்கும் அவரது பேச்சில் எத்தனை வீரம்… எத்தனை தீரம்… காங்கிரசை இத்தனை மூர்க்கத்துடன் எதிர்த்த திமுக அதனை வீழ்த்தவும் செய்தது. எனினும் காங்கிரசில் இருந்த போது விமர்சிக்கப்பட்ட ராஜாஜி, அதில் இருந்து பிரிந்து சுதந்திரா கட்சியைத் தொடங்கிய போது, அவருடன் தேர்தல் கூட்டணியும் வைத்துக் கொண்டது திமுக. எனினும், அதன் அடிப்படைக் கொள்கைகளை நீர்த்துப் போகவிடாமல், நெருப்பெனக் காத்துவர அப்போதைய தலைவர்கள் தவறவில்லை. திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக தோன்றிய பின்னர், “திராவிட இயக்கம்” கருத்தாக்கத் தீவிரம் திமுகவிடம் மட்டுமே சற்று எஞ்சியது. அதிமுக திராவிட இயக்கத்திற்கான பெரும்பான்மையான அடையாளங்களை வேகமாகவே உதிர்த்து, ஆர்எஸ்எஸ் போன்ற நேரெதிர் கூடாரங்களில் உள்ளவர்களே ஊடுருவும் முரண் அரசியல் இயக்கமாக மாறிப்போனது.
அதிமுகவை எதிர்கொள்ளும் நெருக்கடியில் திமுகவும் அவ்வப்போது தடுமாறியதன் விளைவுதான், 90களின் இறுதியில் அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்த சறுக்கல் சரித்திரம்.
இத்தகைய சமரசப் போக்குகள் போகப்போக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டதே தவிர குறைந்து விடவில்லை. அவசரநிலைக் காலத்தில் ஆட்சியைக் கலைத்த காங்கிரசுடன் சில ஆண்டுகளிலேயே கூட்டணி கொள்ள வேண்டிய நிலை திமுகவுக்கு நேர்ந்தது. தற்போது, கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு முரண்பாடுகள், நெருக்கடிகள் வந்த போதும் காங்கிரசுடனான திமுகவின் கூட்டணி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இப்படியாக, அடுக்கடுக்கான சமரசங்களால் கொள்கையளவில் நமர்த்துப் போன தீக்குச்சியைப் போல ஆகிவிட்ட அரசியல் ஒரு பக்கம்…. நடப்பது என்னவென்றே தெரியாமல் ஸ்மார்ட் போன்களுக்குள்ளும், பிக்பாஸ்களுக்குள்ளும் திளைக்கும் இளையதலைமுறை மற்றொரு பக்கம்… என சோம்பிக் கிடக்கும் தமிழகத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போன்ற மற்றொரு பெருங்கிளர்ச்சி வெடிப்பது சாத்தியமா என்ற கேள்வி நமக்குள் எழுவதில் தவறில்லைதானே!
நன்றி: https://www.patrikai.com/
_________________________________________________________________