மாஸ்டர் ப்ளான் மாயாவிகள் பராக்  –  தமிழர்களே எச்சரிக்கை !: செம்பரிதி

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க மாஸ்டர் ப்ளான் தயார் என பிரகடனம் செய்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா.பாஜகவின் அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ தமிழ் நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இந்த மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உத்தரப்பிரதேச வெற்றி தந்த உன்மத்த போதையில் அவர் இந்த அறிவிப்பை அல்லது மிரட்டலை விடுத்திருக்கலாம். அல்லது, அவ்வப்போது இதோ வரேன், அதோ வரேன் என்று பம்மாத்துக் காட்டியே தமது பகட்டு வாழ்வைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த்தின் அண்மைக்கால அரசியல் நெடி அடிக்கும் பேச்சு தந்த துணிச்சலாகவும் இருக்கலாம். கனவு காண்பது அவரவர் உரிமை மட்டுமல்ல, அதை அடுத்தவர்கள் தடுக்கவும் முடியாது. அந்த வகையில் பாஜக கண்டு வரும் கனவின் விஷத்தை அமித்ஷா கக்கி இருக்கிறார்.amithsha modi_

 

ஆதிக்க சக்திகளின் தூக்கத்தை அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கெடுத்துக் கொண்டிருந்த திமுக தலைவர் கலைஞர் முதுமையின் காரணமாக மௌனமாகி விட்டார். அசைக்க முடியாத தலைமை எனக் கருதப்பட்ட ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது. அதை நிரப்பப் போவது யார்…? என்பதுதான் கடந்த 6 மாதங்களாக இங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து நிற்கும் அரசியல் பெருங்கதையாடல். டீக்கடை பெஞ்ச் முதல், தொலைக்காட்சி விவாதங்கள் வரை, அவரவர் வேலைத்திட்டத்திற்கு ஏற்ப இந்தக் கதையாடல்கள் உருவாக்கப்பட்டு உலவ விடப்படுகின்றன.

 

இந்த நேரத்தில் தான், போர் தொடங்கும் போது அழைப்பு விடுக்கிறேன், தயாராக இருங்கள் என்று தனது ரசிகர்களுக்கு விடுத்த அறைகூவல் மூலம், நடிகர் ரஜினிகாந்த் வெற்றிடம் குறித்த கதையாடலை தன்னை நோக்கி வெற்றிகரமாக திருப்பி உள்ளார். ரஜினிகாந்த் திறமையான நடிகர் என்பதற்கு, அவரது படங்களை விடவும், அவ்வப்போது இப்படி ‘ஏரில் பறந்து பறந்து’ அவர் அடிக்கும் பல்டி ஸ்டேட்மென்டுகள்தான் சிறந்த உதாரணம்.

 

ஏற்கனவே திராவிட எதிர்ப்புப் போதையில் உன்மத்தம் ஏறி குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த அரசியல் குரங்குகளுக்கு இது பெரும் வாய்ப்பாக போய்விட்டது. ஆஹா… இதோ வந்துவிட்டார் ரஜினிகாந்த்… தமிழ்நாட்டின் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப இவரால்தான் முடியும் என புளகாங்கிதப் பட்டு, புரண்டும், கதறியும், கூக்குரலிடத் தொடங்கினர்.

 

அரசியலில் திட்பமும், தெளிவும் மிக்கவராக மதிக்கப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூட, கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்த்தே சரியான மாற்றாக இருப்பார் என்று உளறத் தொடங்கி விட்டார். ரஜினிகாந்த் ஒரு வசீகரமான தலைவர், அந்த வசீகரம் ஸ்டாலினிடம் இல்லை என்று, தாம் கூறிய கருத்துகளை நிறுவுவதற்காக திருமாவளவன் போலித்தனமான பல விளக்கங்களை வேறு அளிக்க வேண்டியதாயிற்று.

 

திருமாவளவனைப் போன்றோர் கதியே இது எனும் போது, மற்றவர்களைப் பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆரூடங்களை சொல்லுவதற்கு அர்ஜூன் சம்பத்துகள் போதாதா… அதற்கு, இத்தனை  ஆண்டுகாலம் எத்தனையோ தீவிரமான அரசியலைப் பேசியும், நடத்தியும், போராடியும் வந்த திருமாவளவன் தேவையா என்ன? வேதனைப் படுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. திருமாவளவன் மீது இதுவரை வைத்திருந்த அரசியல் நம்பிக்கை அர்த்தமற்றுப் போனதே என்பதுதான் நமது கவலை.

 

ஊடகங்கள், பத்திரிகைகள் போன்ற ‘அறிவு’சார் அமைப்புகளுக்கோ, ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக, வண்ணவண்ண பூமராங்குகளைச் சுழல விடுவதில், எப்போதுமே துளி வெட்கமும் இருந்ததில்லை. ஒரு சமூகத்தை சரியாக வழி நடத்திச் செல்வதிலும், அரசியல் படுத்துவதிலும் பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் முதன்மையான பொறுப்பு இருக்கிறது. ஆனால், இன்று ரேட்டிங், விளம்பரம் போன்றவற்றைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தப் பொறுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘பிட்’டுப் படம் போடுவதில் ஏதோ சட்டச்சிக்கல் இருக்கிறது போலும். அதனால், நேரடியாக அத்தகைய காட்சிகளைத் தவிர, மற்ற அனைத்தையும் செய்தி என்ற பெயரில் ஒளிபரப்பி, ஒரு சமூகத்தையே உளவியல் ரீதியான பிறழ்வு நிலைக்கு ஆளாக்கி வருகின்றனர். ரஜினி விவகாரத்தில், ஊடகங்களும், பத்திரிகைகளும் ஊழித்தாண்டவம் ஆடிய விதம், மீண்டும் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறது.

 

மதம் ஓர் அபின் என்றார் மார்க்ஸ். அந்த மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு, தமிழ்ச் சமூகத்தின் திராவிட அரசியல் வீரியத்தை வீழ்த்தவும், வேரறுக்கவும் அதனை விடவும் மயக்கும் சக்தி தேவைப்படுகிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்ததுதான் ரஜினி என்ற அரசியல் மாயை!

 

தன்னுணர்வுrajini-modiம், பகுத்தறிவுத் தீர்க்கமும் கொண்ட ஓர் இனத்தை அழிக்க, முதலில் அதன் உளவியலில் முறுக்கேறி உள்ள அரசியல் இறுக்கத்தைக் களைய வேண்டும். அதைத்தான் அரசியல் அகற்றம் என்கிறோம். மதநல்லிணக்கம், சாதி, மத எதிர்ப்புணர்வு, சகிப்புத் தன்மை, மதச்சார்பற்ற பொதுப்புத்தி, எளிய சமூகத்திற்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள்  குறித்த புரிதல் என, திராவிட இயக்கம், தமிழ்ச் சமூகத்தின் பொது மூளைக்குள் வலுவான அரசியல் அடித்தளத்தை அமைத்திருக்கிறது. அதனைத் தகர்க்காமல், மக்களைப் பிரித்தாளும் எந்த சக்தியும் தமிழ்நாட்டுக்குள் காலூன்ற முடியாது. அதனைச் செய்து முடிப்பதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள ஆயுதம் தான் ரஜினி.  

 

அதன் விளைவுகள்தான் ‘அவாள்’ எல்லாம் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், வந்தே ஆக வேண்டும் என அடம் பிடிப்பதும், ஆர்ப்பரிப்பதும். அரசியல் விமர்சகர்களில் ஒருவராக வலம் வரும் அவாள்களில் ஒருவர் கூறுகிறார்: “ரஜினி பாஜகவுடன் சேர்வதை விட தனியாக கட்சி தொடங்க வேண்டும். பின்னர் பாஜகவுடன் அவர் கூட்டணி வைக்க வேண்டும். அவர்களுடன் அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவினரும் கூட்டணி  வைக்க வேண்டும்”

 

ஜெயலலிதாவோடு பறிபோன பார்ப்பனிய ஆட்சியை, தமிழ்நாட்டில் மீண்டும் நிறுவ வேண்டும் என்பதில் ‘அவாள்’களுக்கு எத்தனை கவனம், எத்தனை பதனம் பார்த்தீர்களா? பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் அதில் சேர்ந்து, தமக்குள்ள மூடர் கூட்டத்தின் செல்வாக்கை ரஜினி இழந்துவிடக் கூடாது. அதே நேரத்தில் அந்தச் செல்வாக்கை வீணடித்து விடாமல், ஒரு தனிக்கட்சி தொடங்கி, பாஜகவின் ஆதரவுக் கட்சியாக அதனை இயக்க வேண்டும். பின்னர், எங்காவது எஜமானர்கள் கிடைக்கமாட்டார்களா என்று அலைந்து கொண்டிருக்கும் அதிமுக என்ற அடிமைகள் கூட்டத்தை தன் வசப்படுத்துவதில் அவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. எம்.ஜி.ஆர், ஜெயலலலிதா போன்ற முகங்களுடன், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் முகத்தையும் சேர்த்துக் காட்டி, வாக்குகளைக் கபளீகரம் செய்து விடலாம் என்பதுதான் பாஜகவின் பலே திட்டம். தமிழ்நாட்டின் தொலைக்காட்சி விவாத மேடைகளில் நடுநிலையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் என பல்வேறு முகமூடிகளுடன் அலையும் ‘அவாள்’களின் அவாவும் அதுதான்.

 

அவர்களது ஒரே குறிக்கோள், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பது மட்டும்தான். அதற்காக வைகோ,விஜயகாந்த், ரஜினிகாந்த் என யாருடன் வேண்டுமானாலும் கைகோர்ப்பார்கள்.

 

karuna_chalangeதிமுக மீது மட்டும் இத்தனை வெறுப்பு ஏன்? மதவெறிக்கும், சாதி அமைப்புக்கும் எதிராக எஞ்சி நிற்கும் வெகுமக்கள் பங்கேற்கும் ஒரே அரசியல் பேரியக்கம் திமுக மட்டும்தான். என்னதான் கொள்கையளவில் நீர்த்துப் போனதாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இயக்கத்தின் உள்ளீடாக திராவிட அரசியலின் நெருப்பு அந்த இயக்கத் தொண்டர்களின் உள்ளே மட்டும்தான் கனன்று கொண்டிருக்கிறது. பெரியாரும், அண்ணாவும் பற்றவைத்துச் சென்ற தீ அது. அத்தனை எளிதில் அணைந்து விடாது. திராவிட இயக்கத்தின் அந்தத் தீப்பந்தத்தை, எத்தனையோ சனாதனப் பெரும் புயலிலும் அணைந்து விடாமல் காத்துக் கம்பீரத்துடன் ஏந்தி வந்தவர்தான் கலைஞர் கருணாநிதி. அதனால் தான், அவர் பெயரைச் சொன்னாலே, அவாள்களுக்கு பற்றிக் கொண்டு வருகிறது. அந்தத் தீப்பந்தம் இப்போது ஸ்டாலின் கையில் பத்திரமாகவே இருக்கிறது. அதனால் தான், எந்த வகையிலும் திமுக ஆட்சிக்கு வந்து, ஸ்டாலின் முதல்வர் ஆகிவிடக் கூடாது என்பதில் அவாள்களின் கூடாரம் தெளிவாக இருக்கிறது. என்னதான் ‘இந்து நேசனாக’ காட்டிக் கொள்ள முயன்றாலும், அவாள்களின் பரிவாரம் தம்மை ஒரு முதலமைச்சராகவோ, தலைவராகவோ ஒரு நாளும் ஏற்காது என்ற உண்மை கலைஞரின் மகனான ஸ்டாலினுக்கு மட்டும் புரியாதா என்ன?

 

இத்தகைய பின்னணியில் தான், தன்னுடைய ‘மாஸ்டர் ப்ளான்’ மிரட்டலை விடுத்துள்ளார் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா. உண்மையிலேயே அவர்களுடைய மாஸ்டர் ப்ளான் ரஜினியை அரசியலுக்கு கொண்டு வந்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதானே ஒழிய மற்றவையெல்லாம் அடுத்த பட்சம்தான். அவர் இப்போது சொல்லி இருக்கும் மாஸ்டர் ப்ளான் என்ன தெரியுமா? வாக்குச்சாவடி வாரியாக குழு அமைத்து, அந்தக் குழுக்கள் நேரடியாக பிரதமர் மோடியிடமே கட்சியின் செல்வாக்கு நிலவரம் குறித்த தகவல்களை அவ்வப்போது அளிப்பதுதான். வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்படும் குழுக்கள் என்னதான் அப்படி தகவல்களைத் திரட்டப் போகின்றன? சாதிதான்.. எந்தெந்த வார்டுகளில் எந்தெந்த சாதி வாக்குகள் அதிகமாக உள்ளன… அவர்கள் எந்தக் கட்சியில் உள்ளனர்… அவர்களை எப்படி தங்கள் கட்சிக்கு (பாஜக) இழுக்கலாம்… என்ற வேலைத்திட்டத்தைத் தயாரித்து, அதனை வார்டு வாரியாக செயல்படுத்துவது… இதுதான் அமித்ஷா சொல்லியிருக்கும் மாஸ்டர் ப்ளானுக்குள் மறைந்திருக்கும் அதிரடித் திட்டம். இதைத்தான் அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் செய்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு உத்தரப்பிரதேச மாநிலம் அல்ல. அங்கே திராவிட இயக்கத்தின் தாக்கம் இல்லை. பாஜகவுக்கு எதிராக அங்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இருந்தாலும், மதச்சார்பின்மை, மதச்சார்பு என்ற அளவோடு அக்கட்சிகளுக்கு இடையேயான கொள்கை முரண்பாடுகள் முடிந்து போகின்றன. அதிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பெயரளவுக்கு மட்டுமே தலித்துகளை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியாக உள்ளது. மற்றபடி அக்கட்சியில் பிராமணர்களின் செல்வாக்கே வலிமையாக உள்ளது. (அந்த அரசியல் வேறு. அதற்குள் சென்றால் கட்டுரை விரியும். வேறு ஒரு தருணத்தில் அதனைப் பார்க்கலாம்.)

 

ஆக, திராவிட இயக்கத்தைப் போல, பாஜகவின் அடிப்படையான சனாதனக் கொள்கையை நேரடியாக எதிர்க்கும் இயக்கங்கள் அங்கு இல்லை. இங்கே திராவிட இயக்கமான திமுக மிகவும் உறுதியோடும், ஊக்கத்தோடும் எழுந்து நின்று கொண்டிருக்கிறது. அதனால், பாஜகவின் ஆட்சியைப் பிடிப்பதற்கான மாஸ்டர் ப்ளான்  மனக்கணக்கு பலிப்பதற்கான சாத்தியமே இல்லை.

 

மற்றொரு பக்கம், தமிழகத்தில் அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி காலூன்றி விடலாம் என்று பாஜக போடும் கணக்கும் தவறானது.

 

பெரியாரையும், அண்ணாவையும் தவிர்த்துவிட்டு பிராமணரான ஜெயலலிதாவாலேயே தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடிந்ததில்லை. தற்போதைய அதிமுகவினரால் அது முடியுமா என்ன? அதுமட்டுமல்ல… கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசியல் சூழலில் ஏற்படாத குழப்பங்கள் இல்லை. அதிமுக எத்தனை அணிகளாக உடைந்துள்ளது என்பதையே இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. அப்படி இருந்தும் கூட அவர்களில் யாரும் பாஜகவுக்கு சென்றுவிடவில்லை.

 

மற்றொரு புறம், ஆட்சியை இழந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், திமுகவில் இருந்தும் யாரும் வெளியேறவில்லை. இதில் இருந்தே, இவர்கள் சொல்லும் வெற்றிடம் என்ற தோற்றம் எத்தனை போலியானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஜெயலலிதா மட்டுமே மரணமடைந்துள்ளார். அது அதிமுகவில் வேண்டுமானால் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கலாம். தமிழகத்தில் நிரப்ப முடியாத வெற்றிடம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. தமிழக அரசியலை நடிகர்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும் என்ற எண்ணமும், உள்நோக்கமும் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் அது வெற்றிடமாக தோன்றலாம். மற்றபடி திமுகவில், கலைஞர் முதுமையை அடைந்துவிட்டாலும், அக்கட்சியைக் கட்டுக்குலையாமல், அதே வலிமையுடன் ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்.

 

M.K.stalin facebookஸ்டாலின் அரைநூற்றாண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவர். அழுத்தமான கருத்தியல் பின்னணியைக் கொண்டவர். மேயர், உள்துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என பல்வேறு பொறுப்புகளையும் திறம்பட கையாண்டவர். சென்னையை எழில்மிகு சென்னையாக மாற்ற பல திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றியவர். அவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் எதிலும் இதுவரை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதில்லை. மேயராகவும், அமைச்சராகவும் இருக்கும் போது, அதிகாலையிலேயே பணி நடைபெறும் இடங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கி ஆற்றுப்படுத்தி முடுக்கி விடும் பழக்கமுள்ளவர். இப்போது உள்ள சமகாலத் தலைவர்களில், வேறு யாரையும் விட, கட்டமைப்பு, நிதி நிர்வாகம், திட்டச் செயல்பாடுகள் என அனைத்தையும் திறம்பட கையாளும் ஆட்சித் திறன் படைத்தவர் ஸ்டாலின். அதனை நடைமுறை ரீதியாகவும் நிறுவி உள்ளார். இத்தனை தகுதியும் உள்ளவர் திமுகவின் செயல் தலைவராக இருக்கும் போது, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக கூறுவது, திட்டமிட்டு உருவாக்கப்படும் கதையாடலன்றி வேறென்ன?

 

திமுகவுக்கு எதிராக ஊழல்குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜகவின் அவாள்கள், (தமிழிசை பிறப்பால் தமிழராக இருக்கலாம், அவரைப் போன்றவர்கள் சிந்தனையால் பார்ப்பனர்களே – நவீன பார்ப்பனர்கள்) கர்நாடகாவிலும், மத்தியப் பிரதேசத்திலும் சந்திசிரித்த, சிரித்துக் கொண்டிருக்கும் அக்கட்சி முதலமைச்சர்களின் ஊழல்களை வசதியாக மறைத்து விடுகின்றனர். மத்தியில் நடைபெறும் ஆட்சி முடிவடைந்த பின்னர் தான், தற்போது நடைபெறும் ஊழல்கள் குறித்த விவரங்கள் வெளியாகும். ஆக, எந்த விதத்திலும் ஸ்டாலினை எதிர்கொள்ள முடியாததால் தான், அவரையும், திமுகவையும் எதிர்க்க தற்போது ரஜினி எனும் அரசியல் மாயையின் துணையைத் தேடுகிறது பாஜக.

 

ரஜினியை விட ஸ்டாலின் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டார்? ரஜினி முதல்வராகலாம், ஸ்டாலின் ஆகக் கூடாது என்றால் அதன் உள்நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்வதில், அரசியல் தெளிவுள்ள யாருக்கும் சிக்கல் இருக்காது.

 

மாஸ்டர் ப்ளான் என்ற மாயவலையுடனும், ரஜினி என்ற மயக்குப் பொடியுடனும் தமிழக அரசியலைக் கபளீகரம் செய்து விடலாம் என்று கணக்குப் போடும் பாஜக, திராவிட இயக்கத்தின் கொள்கைத் திண்மையைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவே தோன்றுகிறது. எனினும் தமிழகமும், தமிழர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது என்பதில் மட்டுமே சந்தேகம் இல்லை.

 

Chemparithi’s Article about BJP’s Master Plan

______________________________________________________________________