Winter session begins with hot
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சூடூ தணியும் முன்னரே நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி விட்டது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட மூன்று அவசரச் சட்டங்கள், இஸ்லாமியப் பெண்களுக்கான திருமண உரிமை (தலாக் முறைக்கு எதிரானது) உள்ளிட்ட பல சட்டத் திருத்தங்கள் என பல மசோதாக்கள் இதில் நிறைவேற்றப்படும் என ஆளும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. எனினும், காங்கிரஸ் மீது பிரதமர் முன்வைத்த மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து, நாடாளுமன்றத்தில் பிரச்சனையைக் கிளப்ப அக்கட்சியினர் திட்டமிட்டிருப்பதால், குளிர்காலக் கூட்டத்தொடர் அத்தனை குளிர்ச்சியாக இருக்காது எனத் தெரிகிறது. இதனால், கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது, அவை நடவடிக்கைகள் சுமூகமாக அமைய எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
#WATCH IMMEDIATE PLAYOUT: Prime Minister Narendra Modi addresses the media ahead of #WinterSession of Parliament https://t.co/3MIEBOpREP
— ANI (@ANI) December 15, 2017
செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:
பொதுவாக தீபாவளி அன்று குளிர்காலம் துவங்கும். ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக குளிர்காலம் முழுதாக துவங்கவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தொடர் மூலம் நாட்டு மக்களுக்கு பயன்கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்றத்தில், நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்கும் என நம்புகிறேன். அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். விவாதத்தில் பங்கேற்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், பிரதமர் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சிகள் அமைதிகாக்கத் தயாராக இல்லை என்பது அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே தெரிந்துவிட்டது. ஆம்… மாநிலங்களவையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தான் பிரதிநிதிகளைச் சந்தித்தது குறித்து பிரதமர் மோடி எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் எம்பி குலாம்நபி ஆசாத் கேள்வி எழுப்பியதை அடுத்து, அவையில் அமளி ஏற்பட்டது. இதனால், மாநிலங்களவை பிற்பகல் 2.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.