திமுக தலைவர் கருணாநிதி தற்போது உடல் நலம் நன்கு தேறி வரும் நிலையில் அவர் பேசவும், பொழுதைக்கழிக்கவும் அவருக்கு ஒரு புது உறவினர் கிடைத்துள்ளார். கருணாநிதியின் பேரன் அருள் நிதியின் 2 வயது மகன் மகிழன் தான் அந்த உறவு.
ஒரு காலத்தில் 18 மணி நேரத்திற்கு மேலாக உழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இயல், இசை, நாடகம், அரசியல், எழுத்துப்பணி என அனைத்து துறைகளிலும் தடம்பதித்த கருணாநிதி ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்தவர்.
புத்தகம் வாசிப்பதையும், எழுத்துப்பணியையும் தனது வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்ட கருணாநிதி தமிழக அரசியலில் கடந்த 2016-ம் ஆண்டுவரை முழுநேரமும் இயங்கக்கூடிய அரசியல் தலைவராக விளங்கினார்.
தமிழக அரசியல் வரலாற்றில் வைரவிழா கண்ட அரசியல் தலைவர்களில் இடதுசாரி கட்சித்தலைவர்கள் சங்கரய்யா, நல்லக்கண்ணு போன்றோர் வரிசையில் கருணாநிதியும் ஒருவர். திராவிட இயக்கத்தலைவர்களில் முத்த தலைவரான கருணாநிதியின் ஆளுமை தனித்துவமிக்கது.
‘ஓய்வுக்கு ஓய்வு கொடுப்பவர்’ என்று கட்சிக்காரர்களால் புகழப்பட்ட கருணாநிதியையும் இயற்கையின் ஒத்துழையாமை முடக்கி போட்டது. கடந்த ஓராண்டாக ஒரே அறைக்குள் முடங்கிப்போனார். தனது பேச்சாற்றலால் தமிழகத்தை கட்டிபோட்டவரை இயற்கை கட்டிப்போட்டது.
தொண்டையில் பொறுத்தப்பட்ட குழாய் பேசுவதற்கு சிக்கலை உருவாக்க கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறார். தற்போது அவர் தொண்டையில் பொருத்தப்பட்ட பெரிய குழாய் அகற்றப்பட்டு சிறிய குழாய் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அதுவும் அகற்றப்பட்டு இன்னும் சிறிய குழாய் பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் பேசத்துவங்கும் வாய்ப்புகள் உள்ள நிலையில் அவரை பேசத்தூண்டவும் உற்சாகமாக வைத்துக்கொள்ளவும் அவருடன் விளையாட புதிய உறவினர் தினமும் வருவதாக கூறுகிறார்கள். மு.க.தமிழரசுவின் மகனும் நடிகருமான அருள்நிதியின் இரண்டு வயது குழந்தை ‘மகிழன்’தான் அது.
தற்போது அவரை தினமும் கண்டு பேசிவரும் கனிமொழி தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார், அவருடன் பேசி பொழுதைக்கழிக்க யாரும் இல்லாத நிலையில் தமிழரசு தனது பேரன் மகிழனை மாலையில் கோபாலபுரம் அழைத்து வந்து விடுகிறாராம். தினமும் கருணாநிதி முன் குழந்தை மகிழனை அமர வைத்து விடுகிறார்களாம்.
குழந்தையுடன் விளையாடுவது கொஞ்சுவது என்று ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை அவருக்கு பொழுது போகிறதாம். பேரனின் மகனான மகிழனிடம் விளையாடுவதை அதிகம் விரும்புகிறார் கருணாநிதி. அந்த குழந்தையை தினமும் அழைத்து வந்து அவரிடம் விடுங்கள் அவர் பேசுவதற்கும் இயங்குவதற்கும் அது உதவியாக அமையும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.
ஓய்வில்லாமல், குடும்பத்தாரை சந்திக்க முடியாமல், உழைத்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போது தனக்கு கிடைத்த புதிய உறவான பேரன் வயிற்று குழந்தையுடன் உற்சாகமாக பொழுதை கழித்து வருகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் பழைய உடல் நிலையை அடைய வேண்டும் என்பதே திமுக தொண்டர்களின் விருப்பம்.