தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி..


மூன்றாவது அணியில் தி.மு.க. ஒரு போதும் இடம் பெறாது. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.
தி.மு.க.வின் முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க சில மாநில கட்சிகள் முயற்சி செய்கின்றன. மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி அந்த கூட்டணியை உருவாக்க வாய்ப்புள்ளது.
ஆனால் அந்த மூன்றாவது அணியில் தி.மு.க. ஒரு போதும் இடம் பெறாது. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்.

கருணாநிதி உடல் நலம் இல்லாமல் செயல்பட முடியாதபடி இருப்பதால், அவர் இல்லாத வெற்றிடத்தை உணரத் தொடங்கியுள்ளோம். அவர் மட்டும் முன்பு போல அரசியலில் தீவிரமாக இருந்திருந்தால், அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவை அவர் வேறு விதமாக கையாண்டிருப்பார். மாறுபட்ட திட்டத்துடன் களம் இறங்கி இருப்பார்.

எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தபோது அ.தி.மு.க. இரண்டாக உடைந்து ஆட்சியை இழந்தது. ஆனால் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட போதும், ஆட்சி கவிழவில்லை. 1989-ல் நடந்த சம்பவத்துக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. உள்ளது.

தற்போதைய அ.தி.மு.க. அரசு முற்றிலுமாக மத்திய அரசிடம் சரண் அடைந்து கிடக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி மீதான ஏராளமான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

எனவே தி.மு.க. எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. சட்டசபையில் நாங்கள்தான் முதன் முதலாக குட்கா பிரச்சினையை கிளப்பினோம்.

18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உறுதியான தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. அடுத்து 3-வது நீதிபதி தீர்ப்புக்கு சென்றுள்ளது. 3-வது நீதிபதி தீர்ப்பால் ஆட்சி கவிழலாம் என்று நினைக்கிறோம்.

தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க. தொண்டர்கள் கட்டுக்கோப்புடன் உள்ளனர். தி.மு.க. தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இனத்தை சேர்ந் தவர்கள் ஆவார்கள். தி.மு.க. கொள்கையால் அவர்கள் அனைவரும் பிணைந்துள்ளனர்.

தி.மு.க. கடந்த 7 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ளது. எங்கள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதனால் தி.மு.க.வினர் இன்றும் அதே கட்டுக் கோப்புடன் உள்ளனர்.

1977-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர். மீது இருந்த கவர்ச்சி காரணமாக நாங்கள் 13 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்தோம். 1989-ல் கலைஞர் முதல்வரானார். அதன் பிறகு தி.மு.க.- அ.தி.மு.க.வுக்கு மாற்றாக திகழ்ந்து வருகிறது. கடந்த தேர்தலில்தான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தோல்வியை தழுவியது.

தற்போது தி.மு.க.வில் நாங்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசி ஆலோசனை செய்து செயல்பட்டு வருகிறோம். எனவே மூத்த உறுப்பினர் என்ற ரீதியில் நான் மு.க. ஸ்டாலினுக்கு எந்த அறிவுரையும் சொல்வது இல்லை. ஏதாவது கருத்து கேட்டால் சொல்வேன்.

அரசியலில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மாதிரி மு.க.ஸ்டாலின் உள்ளார். சந்திரபாபு நாயுடு எப்போதும் அரசியல் பற்றியே பேசுவார். சிந்திப்பார். மு.க.ஸ்டாலினும் அதே போன்று உள்ளார்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜர்..

17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..

Recent Posts