இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி 159/8 என்று மடிய தொடர்ந்து ஆடிய இந்திய அணி ராகுலின் சரவெடி சதத்தில் 163/2 என்று அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
18.2 ஓவர்களில் இலக்கை ஊதியது இந்தியா.
பறந்து கொண்டிருந்த இங்கிலாந்தை தரையிறயக்கியது குல்தீப்பின் ஒரு ஓவர்: கோலி புகழாரம்
95/1 என்று 12வது ஓவரில் வலுவாக இருந்த இங்கிலாந்து குல்தீப் யாதவ்வின் புரியாப் புதிர் ஸ்பின்னில் (5/24) 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ்வும் அருமையாக வீசி ஜேசன் ராயை வீழ்த்தினார், புல்ஷாட் ஆடப்போனார் ராய், பந்து சற்றே தாழ்வாக வர பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. பிறகு கடைசியில் கிறிஸ் ஜோர்டானை வீழ்த்தி 4 ஓவர்களில் 21/2 என்று சிறப்பாக வீசினார். ராய் 30 ரன்களில் வீழ்ந்தார். குல்தீப் யாதவ் இந்த ஒருநாள், டி20 தொடர்களில் இங்கிலாந்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி அனுபல்லவி, சரணங்களுக்கு தொடக்கப் பல்லவி இசைத்துக் காட்டியுள்ளார். டி20-யில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் குல்தீப்.
விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் வரிசையாகக் கைப்பற்றிய தருணத்தில் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 69 ரன்கள் விளாசினார். இலக்கை விரட்டுகையில் கே.எல்.ராகுல் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 54 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மொயின் அலிக்கு சாத்துமுறை நடந்தது இவர் 2.2 ஓவர்களில் 37 ரன்கள். ராகுலின் 2வது டி20 சர்வதேச சதமாகும்.
குல்தீப் யாதவ்வின் ராங் ஒன், லெக் ஸ்பின், மிக மெதுவான பந்துகளில் இங்கிலாந்து மிடில் ஆர்டர் நிலைகுலைந்தது, தோனி மீண்டுமொரு முறை அபாரமாக கீப்பிங் செய்து ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை ஸ்டம்ப்டு செய்தார்.
ஆரவாரமான இந்திய ரசிகர்கள் கூட்டத்தின் முன் அதைவிடவும் ஆரவாரமான அதிரடி இங்கிலாந்து பேட்டிங் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் சரணடைந்தது. இயான் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை 14வது ஓவரில் சொற்பமாக வீழ்த்தி பெவிலியன் அனுப்பினார். 180 ரன்களாவது குறைந்தபட்சம் வந்திருக்க வேண்டும். மேலும் அலெக்ஸ் ஹேல்ஸ் திணறலை முடிவுக்குக் கொண்டு வந்த குல்தீப், 8 இன்னிங்ஸ்களில் 7வது அரைசதம் எடுத்த ஜோஸ் பட்லரையும் காலி செய்தார் குல்தீப்.
ராய், பட்லர் நல்ல தொடக்கம்:
இங்கிலாந்து ஆனால் தொடக்கத்தில் இந்தியாவின் சிறந்த பவுலர் புவனேஷ்வர் குமாரை உரித்தனர், அவரது 2 ஓவர்களில் 19 ரன்கள் விளாசப்பட்டது, 4வது ஓவரிலேயே கொண்டு வரப்பட்ட சாஹல் முதல் ஓவரிலேயே 16 ரன்கள் விளாசப்பட்டார். உமேஷ் யாதவ் டாப் எட்ஜில் பட்லரைக் காலி செய்திருந்தால் இங்கிலாந்து இன்னும் கூட குறைந்த ஸ்கோரில் காலியாகி இருக்கும். அலெக்ஸ் ஹேல்ஸ் 18 பந்துகளில் 8 ரன்கள் என்று ஒன்றும் புரியாதவராக ஆடினார். கடுமையாகத் தடவிய ஹேல்ஸ், கடைசியில் குல்தீப்பிடமும் தடவ ஒரு நேர் பந்தில் கடுப்பில் ஒரு ஸ்வீப் ஆடி பந்தைக் கோட்டை விட்டார் பவுல்டு ஆனார்.
அடுத்த ஓவரில்தான் இங்கிலாந்தை முற்றுகையிட்டு ஆட்கொண்டார் குல்தீப்; இயன் மோர்கன் ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று கோலியிடம் கேட்ச் ஆனார். 3வது பந்தில் குல்தீப்பின் ராங் ஒன்னுக்கு ஸ்டம்ப்டு ஆனார். அடுத்த பந்தே ஜோ ரூட் பந்து உள்ளே வரும் என்று இறங்கி வந்து ஆடப்போக பந்து எதிர்த்திசையில் ஸ்பின் ஆகியது தோனிக்கு 2வது ஸ்டம்பிங். 50/0 என்று இருந்த இங்கிலாந்து 107/5 என்று ஆனது. கடைசியில் டி.ஜே.வில்லே 15 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 29 எடுக்க பட்லர் 18வது ஓவர் வரை நின்று 69 எடுக்க இங்கிலாந்து 159/8 என்று முடிந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் 5, பாண்டியா 1, உமேஷ் யாதவ் 2 விக்கெட்.
கேட்ச் விட்டதைச் சாதகமாக்கி ராகுல் அதிரடி சதம்:
ஷிகர் தவண் 4 ரன்களில் டி.ஜே.வில்லேவின் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். அடுத்து வந்த ராகுல் அருமையான டச்சில் இருப்பது அவரது பேட்டிங்கில் பளிச்சிட்டது, ஆனாலும் ஒரு பந்தை அவர் பேக்வர்ட் பாயிண்ட் திசையில் காற்றில் ஆட பந்து கேட்சாக வந்தது ஜேசன் ராய் கோட்டை விட்டார். 26/2 என்று ஆகியிருக்கும் ஆனால் ராயின் தவறை பயன்படுத்திய ராகுல் அதன் பிறகு லியாம் பிளங்கெட்டை 4வது ஓவரில் ஒரு பிளிக், கட் பவுண்டரிகள் அடித்தார். மொயின் அலி வந்தவுடன் ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மற்றும் ஒரு லாங் ஆன் சிக்ஸ். லியாம் பிளெங்கெட் மீண்டும் பந்து வீச வந்த போது 6,4,4,6 என்று நாசம் செய்யப்பட்டார். 37 பந்துகளில் 85 ரன்கள் என்று இருந்த போது விரைவுச் சதத்துக்கு ராகுல் தயாராக இருந்தார், ஆனால் இங்கிலாந்து கொஞ்சம் இந்தியாவைக் கட்டுப்படுத்தியது ஆனால் அவர் சதமடிப்பதை ஒன்றும் செய்ய முடியவில்லை. ரோஹித் சர்மா 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 32 எடுத்து ரஷீத்திடம் ஆட்டமிழக்கும் போதே இந்திய அணி 130/2 என்று இருந்த்து, ரோஹித், ராகுல் கூட்டணி 11 ஒவர்களில் 123 ரன்களைச் சேர்த்ததில் ரோஹித் பங்களிப்பு 32 மட்டுமே. ராகுல் 101 நாட் அவுட், விராட் கோலி 1 சிக்சருடன் 20 நாட் அவுட்.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் மட்டுமே சக்சஸ்புல் பவுலர் (1/25). ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ். வரும் வெள்ளியன்று கார்டிப்பில் இந்தியா தொடரை வெல்ல நம்பிக்கையுடன் ஆடும், இங்கிலாந்து குல்தீப் யாதவ் அச்சுறுத்தலுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும். பிரிஸ்டலில் ஞாயிறன்று இறுதி டி20 போட்டி.