சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், அண்மையில் மறைந்த கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:
தீர்மானம் :
தமிழினத்தின் தனிப் பெருந்தலைவர், முத்தமிழ் அறிஞர், பன்முக ஆற்றல் களஞ்சியம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் கண்ட புத்துலக நாயகர், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்கள் 19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 13 முறையும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் ஆற்றிய அளப்பரிய பணிகளின் காரணமாக, தொண்டால் பொழுதளந்து பொது வாழ்வில் ஈடுபடுவோர் அனைவரும் பார்த்துப் படித்துப் பயிற்சி பெற்றுப் பின்பற்ற வேண்டிய அரசியல் பண்பாட்டுப் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறார்.
தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் எண்ணிலா முற்போக்குச் சட்டங்களையும் முன்னோடித் திட்டங்களையும் நிறைவேற்றித் தந்து அரசு நிர்வாக வரலாற்றில் நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் வளமும், நலமும் ஏற்படுத்தும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியிருக்கிறார். பொதுப் போக்குவரத்து நாட்டுடைமை, இலவச நிலம் – குடியிருப்பு மனைப்பட்டா உள்ளிட்ட நிலச் சீர்திருத்தம், கல்வி – வேலைவாய்ப்பு – தொழில் வளர்ச்சி – அடிப்படைக் கட்டமைப்பு – விவசாயிகளின் நலனுக்காக முதன்முதலில் சட்டமன்றத்தில் நங்கவரம் பிரச்சினை பற்றிய கன்னிப் பேச்சு தொடங்கி முதலமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விவசாயிகள் – வேளாண்மை முன்னேற்றத்திற்குக் கையெழுத்திட்ட மகத்தான திட்டங்கள் வரையிலான தலைவர் கலைஞர் அவர்களின் பிரமிப்பூட்டும் சாதனைப் பட்டியலை எடுத்துரைப்பதற்கு ஏடுகள் போதாது.
கைரிக்சா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் அமைத்தது உள்ளிட்டவையும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கடைக்கோடி கிராமம் வரை மின் இணைப்புகள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு தன்னிறைவுத் திட்டங்களும், ஊராட்சிகள் தோறும் நூலகங்கள், சென்னையில் உலகத் தலைவர்கள் பார்த்து வியந்த சர்வதேசத் தரத்திலான ஆசியாவின் மிகப்பெரிய “பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்” என தலைவர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் கிராமங்களின் நீடித்த – நிலைத்த வளர்ச்சிக்கும் (Sustainable Growth), நகரங்களின் முழுமையான கட்டமைப்பு வசதிகளுக்கும் (All-round Growth) பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்.
தமிழகத்தில் முதன்முதலில், சட்டநாதன் கமிஷன் அமைத்து சமூகநீதிக்கு அசைக்க முடியாத அடித்தளம் ஏற்படுத்தி, தொடர்ந்து காலந்தோறும் உரிய பலன்கள் கிடைக்கச் செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். கல்வி – வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியின மக்களுக்கான இடஒதுக்கீடுகளை அளித்து, அவர்தம் சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்காக இறுதிமூச்சு வரை அயராது பாடுபட்ட சமூகநீதிப் போராளி தலைவர் கலைஞர் அவர்கள்.
அதுபோலவே சிறுபான்மையினர் நலன் காக்கும் திட்டங்களையும், வேலைவாய்ப்புகளில் அவர்களுக்குரிய இடஒதுக்கீட்டையும் தந்தவர் தலைவர் கலைஞர். மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சமூகநீதிக் காவலரும், முன்னாள் பிரதமருமான திரு வி.பி.சிங் அவர்களுக்கு ஊக்கமளித்து உற்ற துணையாக நின்றவர்.
ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைத்து நல்லிணக்கமும் சமத்துவமும் காண பெரியார் நினைவு ‘சமத்துவபுரங்களை’ அமைத்தவர். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றிடும் வகையில், ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தை நிறைவேற்றி, தன் வாழ்நாளிலேயே அச்சட்டத்தின்கீழ் நடைபெற்ற முதல் அர்ச்சகர் நியமனத்தைக் கண்டுகளித்தவர். “பொடா”வாக இருந்தாலும், “தடா” வாக இருந்தாலும் அடக்குமுறைச் சட்டங்களைத் தீவிரமாக எதிர்த்து, மதச்சார்பற்ற சமுதாயக் கட்டமைப்பைக் காத்து, நாட்டின் பன்முகத்தன்மை இடையூறின்றிக் காப்பாற்றப்பட, தன் வாழ்நாள் முழுதும் விழிப்புடனிருந்து (Eternally Vigilant) உழைத்தவர்.
அரசியல் சட்டத்தின் மாண்புகளை நிலைநாட்டி, ஜனநாயகத்தின் அடிப்படை நெறிகளான எழுத்துரிமை, பேச்சுரிமை, போராட்டம் நடத்தும் உரிமை என்று முழுமையான சுதந்திரத்தை (Absolute freedom) அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.
நாட்டின் நெருக்கடி நிலையை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் இந்தியாவிலேயே தலைவர் கலைஞர் ஒருவர் மட்டுமே; அதற்கான விலையாக ஆட்சியையே பறிகொடுத்தவர். ஆனால் நெஞ்சுக்கு நீதியாக நினைத்துப் போற்றிய தமது கொள்கையை நெருக்கடியிலும் முன்னேடுத்தார் என்று தமிழகம் மட்டுமல்ல – ஒட்டுமொத்த இந்தியாவே ஏன், உலகமே வியந்தது.
அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்ட ராஜமன்னார் குழு அமைத்து, ‘மாநில சுயாட்சி’ முழக்கத்தை முதலில் எழுப்பியவர். தமிழக சட்டமன்றத்தில் அதற்காக முதன்முதலில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியவர். தொலைநோக்குச் சிந்தனையுடன் தலைவர் கலைஞர் அவர்கள் “மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” (Autonomy for the States; Federalism at the Centre) என்று உருவாக்கிய உரிமை முழக்கம் இன்றைக்கு இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எதிரொலிக்கிறது.
மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். பொதுவாழ்வில் ஊழலை ஒழித்து தூய்மையையும் நேர்மையையும் நிலைநாட்டிட, வார்டு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த மாநில அளவில் ஒரு சட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாகக் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர்.
பெண்ணுரிமை – மகளிர் நலன் போற்றிய தலைவர் கலைஞர் அவர்கள், பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம், மகப்பேறு உதவித் திட்டம், விதவைப் பெண்கள் மறுவாழ்வுத் திட்டம், மகளிர்க்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு, வேலை வாய்ப்புகளில் 30சதவீத இடஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமனம், பொருளாதார சுதந்திரம் பெற்று, சுயச்சார்பும் தன்னம்பிக்கையும் வளர வேண்டும் என்பதற்காக முதன்முதலில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் – எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல், சொத்தில் பெண்களுக்குச் சமபங்கு கிடைக்கும் வகையில் புரட்சிகரமான சொத்துரிமைச் சட்டம் உள்ளிட்டவற்றை இயற்றி, பெண் விடுதலை (Emancipation of Women) போற்றும் பெருமைமிக்கவராகத் தலைவர் கலைஞர் அவர்கள் திகழ்ந்தார்.
தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த தொழிலாளர் நலத் திட்டங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் ஆகியவை முன்மாதிரியானவை. மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வம் அளப்பரியது. காவல்துறையினருக்கு மூன்று முறை போலீஸ் கமிஷன்களை அமைத்து பயன் தரும் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தவர். அரசு ஊழியர்களின் ரகசியப் பதிவேட்டு (Confidential Record) முறையை ஒழித்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி அரசு நிர்வாகத்தின் அசைக்க முடியாத தூண்களில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முக்கியமானவர்கள் என்ற சீரிய எண்ணத்துடன் செயல்பட்டவர்.
தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான “கலைஞர் காப்பீடுத் திட்டம்”, தமிழ்நாட்டை குடிசைகளே இல்லாத மாநிலமாக்கும் “கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டம்”, ஏழை மக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் “இலவசத் திட்டங்கள்” எல்லாம் இன்றைக்கு இந்தியாவிற்கே முன்னோடித் திட்டங்களாக, நாட்டின் வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கும் நல் வழிகாட்டும் திட்டங்களாக அமைந்திருக்கின்றன.
அன்னைத் தமிழை அரியணை ஏற்றும் அனைத்து முயற்சிகளையும் தன் உயிர் மூச்சாகக் கருதியவர். சென்னை மாநகரத்தை “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, எல்லா மொழிகளிலும் “சென்னை” என செந்தமிழில் சொல்லும்படி மாற்றியவர் தலைவர் கலைஞர். பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க்கல்வி, தமிழில் பொறியியல் பட்டப்படிப்பு, தமிழறிஞர்களுக்கு விருதுகள், சலுகைகள், தமிழ் நூல்கள் நாட்டுடைமை, உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தியது, சென்னையில் வள்ளுவர் கோட்டம், சூழும் தென்கடல் ஆடும் குமரியில் 133 அடி உயரத்தில் விண்ணுயர அய்யன் திருவள்ளுவர் சிலை என்று ‘கோட்டம் முதல் குமரி’ வரை தமிழ் மொழிக்காகவும், தமிழினத்திற்காகவும் காலம் முழுவதும் உறுதியுடன் நின்ற தலைவர் கலைஞர் அவர்கள், தமிழுக்கு “செம்மொழி” அந்தஸ்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் திருமதி சோனியா காந்தி அம்மையார் மூலமாக பெற்றுத் தந்தது வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய சாதனைச் சரித்திரம்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தியவரும், தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20சதவீத இடஒதுக்கீடு வழங்கியவரும் அவரே. தமிழன்னைக்கு மனம் கனிந்த முதல் மரியாதை அளித்திடும் வகையில், அரசு நிகழ்ச்சிகள் – கல்விநிலைய விழாக்களில் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலை ‘தமிழ்த்தாய் வாழ்த்தாக’ இடம்பெறச் செய்தவரும் கலைஞர் தான். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் எனவும், திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கைக் கடைப்பிடிக்கவும் வழியமைத்து, பிறமொழி – பண்பாட்டு மேலாதிக்கத்திலிருந்து தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுத்துக் காத்தவர் தலைவர் கலைஞர்.
மாபெரும் அரசியல் தலைவரான கலைஞர் அவர்கள், பன்முகத்திறன் கொண்ட ஆற்றலாளர் ஆவார். எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரை ஆசிரியர், பத்திரிகையாளர், கவிஞர், நாடக ஆசிரியர், நாடக நடிகர், திரைப்பட கதை-வசனர்த்தா, திரைஇசைப் பாடலாசிரியர் எனத் தான் தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர்.
தன் படைப்புத் திறமை வாயிலாக திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சுயமரியாதை – பகுத்தறிவு – மூடநம்பிக்கை எதிர்ப்பு – சமூகநீதி ஆகியவற்றை மக்களின் மனங்களில் நிலைபெறச் செய்தவர். அவருடைய “பராசக்தி” திரைப்பட உரையாடல்கள் திரைத்துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தி, பாமரர்களிடமும் பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டு சேர்த்தன. மந்திரிகுமாரி, மனோகரா, மருதநாட்டு இளவரசி, மலைக்கள்ளன், ராஜா ராணி, பணம், பூம்புகார், மறக்கமுடியுமா, புதையல், இருவர் உள்ளம், காஞ்சித் தலைவன், பாலைவன ரோஜாக்கள், நீதிக்குத் தண்டனை, பாசப்பறவைகள், பொன்னர் சங்கர் என அவர் பங்களிப்பில் உருவான 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் கொள்கை முழக்கங்களாகவே அமைந்தன.
எழுத்துத்துறையில் அவர் தமது பேனாமுனையினால் செதுக்கிய சிற்பங்கள் ஈடு இணையற்றவை. உலகத்தரத்திலான சிறுகதைகளையும் புதினங்களையும் தமிழில் தந்த தலைவர் கலைஞர், தமிழ் மொழியின் பெருமை கூறும் பழந்தமிழ் இலக்கியங்களை புதுநடையில் தந்தவர். குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை அவற்றுக்கான சான்றுகளாகும். உலகம் போற்றும் ரஷ்யப் புரட்சி இலக்கியமான மாக்ஸிம் கார்க்கியின் “தாய்” நாவலைத் தமிழில் கவிதை நடையில் தந்தவர் தலைவர் கலைஞர்.
இலட்சிய முழக்கமிட்ட அவருடைய பிரச்சார நாடகங்கள் திராவிட இயக்கத்தின் படைக்கலன்கள். தொலைக்காட்சி எனும் ஒளிஊடகத்தையும் விட்டுவைக்காமல், அதனையும் பயன்படுத்தி, தென்பாண்டிச் சிங்கம் மற்றும் மதத்தில் புரட்சிசெய்த மகான் இராமானுஜர் போன்ற தொடர் காவியங்களையும் படைத்தளித்தார் தலைவர் கலைஞர்.
இதழியல் துறையில் தலைவர் கலைஞர் பதித்த காலச்சுவடுகள் தனித்துவமானவை. பள்ளிப் பருவத்திலேயே “மாணவர் நேசன்” என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திய தலைவர் கலைஞர் அவர்கள், 1942ல் “முரசொலி” இதழைத் தொடங்கினார். துண்டு வெளியீடாக ஆரம்பித்து, வார இதழ், நாளிதழ் என வளர்ந்து 76ஆம் ஆண்டாக இன்னமும் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. பத்திரிகையுலக வரலாற்றில் இவ்வளவு நீண்டகாலம் தொடர்ச்சியாக ஒரு பத்திரிகையைப் பொறுப்பேற்று நடத்தியது மாபெரும் சாதனையாகும்.
தொண்டர்களுடன் உரையாடும் வகையிலான உடன்பிறப்பு கடிதங்கள், அறிக்கைகள், பேச்சுகள், கவிதைகள், கார்ட்டூன்கள் என முரசொலியில் தலைவர் கலைஞர் அவர்கள் வெளிப்படுத்திய பன்முக எழுத்தாற்றலும், நெருக்கடி நிலைக்காலத்தில் பத்திரிகைத் தணிக்கை முறை இருந்தபோதும், செய்திகளை அவர் வெளியிட்ட இலாவகமும் இன்றைய ஊடகத்துறையினர் பாராட்டிப் பின்பற்ற வேண்டிய இதழியல் பாடங்கள். தனது மூத்த பிள்ளையாகக் கருதிய முரசொலியில் அவர் தொடர்ச்சியாக எழுதியதுடன், தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் கதை, கவிதை, நேர்காணல் என ஓடிக்கொண்டே இருக்கும் வற்றாத நதியாக அரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
சேலம் உருக்காலைத் திட்டம், சேது சமுத்திரத்திட்டம், சென்னை ‘மெட்ரோ ரயில் திட்டம்’, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிப்காட் முதல் தொழில் வளாகம் உருவாக்கம், சிறப்புப் பொருளாதாரமண்டலங்கள் உருவாக்கம், சென்னை தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், பூந்தமல்லி முதல் திருப்பெரும்புதூர் வரையிலும் எண்ணற்ற தொழிற்சாலைகளை ஏற்படுத்தி தொழில்வளச்சாலை (Industrial Corridor) அமைத்து, தொழில் முன்னேற்றத்திற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படுத்திடச் செயல்பட்ட ஒரே தலைவர் கலைஞர் அவர்கள் தான்.
இளமைப் பருவத்திலேயே காவிரிநீரைப் பருகி காவிரி தீரத்தின் மைந்தனாக வளர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதை முதன் முதலில் வலியுறுத்தியவர்; வழக்காடியவர். வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர் மன்றத்தை அமைக்கச் செய்து, அதன் இடைக்காலத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பையும் பெற்றுத் தந்தவர். தன் இறுதிக்காலம் வரை காவிரி உரிமைகளைக் காக்கும் போராட்டத்தைத் தொடர்ந்தவர்.
அதுபோலவே முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்துவதில் சட்டரீதியான வெற்றிக்குப் பெரிதும் பாடுபட்டவர். கிருஷ்ணா நதிநீர் சென்னைக்குக் குடிநீராகக் கிடைத்திடச் செய்ய உழைத்தவர். கடல்நீரை நன்னீராக மாற்றி குடிநீராகப் பயன்படுத்தும் திட்டங்களை கொண்டு வந்தவர். தமிழ்நாட்டின் நீர்வளத்தைப் பெருக்கி, பாசனப் பரப்பளவை அதிகரித்திட 30க்கும் மேற்பட்ட அணைகள் தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு ஆறுகளைத் தூர்வாரும் பணியைச் செம்மைப்படுத்திச் செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் தான். அதுமட்டுமின்றி ஒகேனக்கல் உள்ளிட்ட மெகா குடிநீர்த் திட்டங்கள், மாநில அளவில் நதிகள் இணைப்புத் திட்டங்கள் என நீர் மேலாண்மையை சிறப்பாகக் கடைப்பிடித்தவர் தலைவர் கலைஞர்.
சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் – நெடுஞ்சாலைகள், வகுத்துச் செயல்படுத்திய தொழிற் கொள்கைகள், தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர் காட்டிய ஆழ்ந்த அக்கறை எல்லாம் மாநிலத்தின் உட்கட்டமைப்பை உயர்த்திய ஏணிகளாக அமைந்ததைப் பார்க்க முடியும். நகர்ப்புறங்களில் மட்டுமே கல்லூரிகள் என்றிருந்த நிலையை மாற்றி கிராமப்புறங்களிலும் கலை -அறிவியல் கல்லூரிகளை உருவாக்கியது, புதிய புதிய பல்கலைக் கழகங்களை உருவாக்கியது, மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்தது, நுழைவுத் தேர்வை ரத்து செய்தது, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகையுடன் தொழிற் படிப்புகளில் இடமளித்தது, பள்ளிகளில் கணினிக் கல்வி, சமச்சீர் கல்வி, இணையப் பயன்பாட்டிற்கேற்ற வகையில் சீரிளமைத் தமிழ் மொழி சிறந்து விளங்க கணினி இணைய மாநாடுகள் நடத்தி அவற்றின் முடிவுகளைச் செயல்படுத்தி இளைய தலைமுறையினர் நவீன தொழில் நுட்பங்களில் தமிழைப் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திடத் துணை நின்றது உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி, ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றமான மாற்றங்கள் இன்றைய வளர்ச்சிக்குப் படிக்கட்டுகளாக இருக்கின்றன.
திருநங்கைகள் எனப் பெயர் சூட்டி மாற்றுப் பாலினத்தவரின் நலன் காத்தது, தொழுநோயாளிகள் – பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையங்களை உருவாக்கியது, மனிதக் கழிவை மனிதனே அகற்றிச் சுமக்கும் கொடுமையை நீக்கச் சட்டம் இயற்றியது என சமூகத்தில் யாரெல்லாம் பள்ளத்தில் வீழ்ந்து ஒடுங்கிக் கிடக்கிறார்களோ – ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளார்களோ அவர்களையெல்லாம் அண்ணல் அம்பேத்கர் வழி நின்று கைதூக்கிவிடுவதற்கு சமூகநீதிக் கரத்தை நீட்டி அவர்களின் தன்மானம் – சுயமரியாதையைக் காத்தவர்.
தாய்த் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்களுக்கும் கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும், அரணாக விளங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். குறிப்பாக, ஈழத்தமிழர் துயர்துடைக்கவும் அவர்களின் உரிமையை நிலைநாட்டவும் 1956 முதலே குரல் கொடுத்து வரும் தலைவர் கலைஞர் அவர்கள், ஈழத்தமிழர் உரிமைக்காகப் பல போராட்டங்கள் கண்டு சிறைசென்றவர். “டெசோ” அமைப்பின் மூலம் ஈழத்தமிழர் விடுதலைக் குரலை இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் எதிரொலித்திடச் செய்தவர். தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காகத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர்.
ஈழத்தமிழர்களுக்கு பேராதரவாளர் என்பதற்காக, தலைவர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியே இனத் துரோகச் சூழ்ச்சியினால் கொல்லைப்புற வழியாக கலைக்கப்பட்டது. அதன் பிறகும், ஈழத்தமிழர் உரிமைக்கான அவரது குரல் தீரத்துடன் தொடர்ந்து ஓங்கி ஒலித்தது.
தலைவர் கலைஞர் அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கான நலத்திட்டங்களின் நாயகர்; ஜனநாயகத்தின் கண்ணயராக் காவலர்; கூட்டாட்சித் தத்துவத்தின் மூலவர்; மத்திய – மாநில உறவுகளில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் மக்கள் தலைவர்; சமூகநீதி சாதனையின் தன்னேரிலாச் சரித்திரம்.
அனைத்துத் தரப்பினரும் பயன் பெறும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை (Integrated Development Plan) வெற்றிகரமாகச் செயல்படுத்திய சிந்தனைத் திறன்மிக்க செயல்பாட்டாளர். தேசிய அரசியலில் பெண் ஒருவரும் (பிரதீபா பாட்டீல்), தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும் (கே.ஆர்.நாராயணன்), பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் (ஜெயில்சிங்) குடியரசுத் தலைவர்களாகப் பொறுப்பேற்கப் பாடுபட்டவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவர் (மீராகுமார்) மக்களவை சபாநாயகராக வர உறுதுணையாக நின்றவர். நாட்டின் பாதுகாப்பிற்கு சீனப் போர் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் வந்தபோதெல்லாம், நாட்டின் ஒருமைப்பாட்டின் பக்கம் உறுதியாக நின்று, மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு கொடுத்த தேசாபிமானி. “ஆதரித்தாலும், எதிர்த்தாலும் கலைஞர் உறுதியாக இருப்பார்” என்று இந்திய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சிறப்பானதொரு நம்பகத்தன்மையை ஏற்படுத்திக் கொடுத்து, மாநிலக் கட்சித் தலைவராக இருந்தாலும் தேசிய அரசியலில் உரிய முக்கியத்துவம் பெற்று விளங்கியவர். பிரதமர்களையும், குடியரசுத் தலைவர்களையும் உருவாக்குவதிலும், மத்தியில் கூட்டணி அரசுகளை உருவாக்கி மாநிலங்களின் உரிமைக்குரல் வலிமையாக ஒலிக்கவும் அடிப்படைக் காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் விரிவான தேர்தல் கூட்டணிகளை (Broad-based Alliances) அமைத்து திராவிடப் பேரியக்கத்தின் அரசியல் ஆசானாக விளங்கியவர். பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிதாமகனாக விளங்கிய தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற காலம்தான் ஜனநாயகத்திற்கும், கருத்துரிமை அடிப்படையிலான ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும் பொற்காலம். நிர்வாகத்திறன் மற்றும் தலைமைப் பண்பு மிகுதியாகப் பெற்ற பேராளுமை அவர்; ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று கருதி அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை மட்டுமல்லாமல், மாற்றுக் கருத்து உடையோரையும் மனமுவந்து வரவேற்று மதித்துச் செயல்படுவது, கனிவு – துணிவு – பணிவு போன்ற உயர்ந்த குணநலன்களுக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் திகழ்ந்த தலைவர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டையும், இந்தியாவையும் தமிழர்கள் வாழும் உலக நாடுகளையும் கண்ணீர்க் கடலில் மிதக்கவிட்டு மறைந்து விட்டார் என்பதை கழகத்தின் தலைமைச் செயற்குழு மிகவும் கனத்த இதயத்துடனும், கண்ணீர்ப் பெருக்குடனும் பதிவு செய்கிறது.
எந்நாளும் எளிமையைப் போற்றிய, இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய கலைஞர் அவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் துக்கம் (National Mourning) கடைப்பிடிக்கப்பட்டதுடன், நாடாளுமன்றக் கட்டடத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. குடியரசுத்தலைவர் இரங்கல் தெரிவிக்க, பிரதமர் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரங்கலுரை வாசிக்கப்பட்டு அவைநடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
மத்திய அமைச்சரவையின் சார்பில் தலைவர் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் பல மாநில அரசுகளும் தலைவர் கலைஞரின் மறைவிற்கு துக்கம் கடைப்பிடித்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தின.
திருக்குவளை எனும் சிறிய எளிய விவசாயக் கிராமத்தில் பிறந்து டெல்லிப் பட்டணம் மட்டுமல்லாமல் குவலயமே திரும்பிப் பார்த்திடும் வகையில் இறுதிவரை எதற்கும் அசைந்து கொடுக்காமல் கொள்கைவழி நின்று அயராதுழைத்த அந்த ஓய்வறியாச் சூரியன் தனது 94 வயதில், 81 ஆண்டு கால அர்த்தம் பொதிந்த பொதுவாழ்வுச் செயல்பாட்டிற்கு ஓய்வு கொடுத்து, அவர் விரும்பியபடியே தமது ஆருயிர்த் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் அருகில், அவருடைய அன்புத்தம்பி என்ற பிறப்புரிமையுடன் மீளாத் துயில் கொண்டுள்ள நிலையில், வான்முட்டும் அவர் புகழை காருள்ள வரை கடல் நீருள்ள வரை குறைந்திடாமல் காத்து, அவர் கண்டதும் கொண்டதுமான இலட்சியங்களை எள்ளளவும் வழுவாமல் என்றும் கடைபிடித்து, நிறைவேற்ற உறுதியேற்று; கழக தலைமைச் செயற்குழு இதயபூர்வமான இரங்கலை தீராக் கண்ணீருடன் பதிவு செய்கிறது!
Resolution For Kalaingar In DMK Working Committee Meet