கலைஞருக்கு மெரீனாவில் இடம் கிடைக்காது போயிருந்தால் எனையும் புதைக்க நேரிட்டிருக்கும்: ஸ்டாலின் உருக்கம்

கலைஞருக்கு மெரீனா கடற்கரையில் இடம் கிடைக்காது போயிருந்தால் எனையும் அவருக்கருகே புதைக்க நேரிட்டிருக்கும் என திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் கலைஞரின் பெருமைகளையும், போராட்டங்களையும் நினைவு கூர்ந்தனர். இந்தக் கூட்டத்திற்கு ஒரு வாரம் சவரம் செய்யப்படாத சோகம் கவிந்த முகத்துடன் வருகை தந்திருந்த ஸ்டாலின் நிறைவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நீங்கள் அனைவரும் தலைவரை இழந்து நிற்கிறீர்கள். நான் தலைவருடன் எனது தந்தையையும் இழந்து தவிக்கிறேன். அண்ணாவின் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என் பதே கலைஞரின் நீண்டகால ஆசை. கலைஞருக்கு மெரீனாவில் இடம் ஒதுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கையைப் பிடித்து கோரிக்கை விடுத்தேன். ஆனால், விதிமுறை அதற்கு இடம் கொடுக்கவில்லை எனக் கூறி மறுத்து விட்டனர். எப்படியும் இடம்கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த நேரத்தில் நீதிமன்றம் நமக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ஒருவேளை மெரீனாவில் கலைஞருக்கு இடம் கிடைக்காது போயிருந்தால், எனையும் அவருக்கு அருகிலேயே புதைக்க நேர்ந்திருக்கும். கலைஞருக்கு மெரீனாவில் இடம் கிடைக்க திமுகவின் வழக்கறிஞர்களின் திறமையான வாதமே காரணம். அந்தப் பெருமை அவர்களையே சாரும்.

இவ்வாறு ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Stalin breaks Down in DMK working Comittee Meet