நாங்கள் சாதாரணர்கள்
உழைப்பையே முதலீடாய்க் கொண்டவர்கள்
எந்த அடக்கு முறைக்கும் உடனே இலக்காகுபவர்கள்
எனினும் எங்கள்
ஒற்றைச் சொல் உங்களை பதற்றப்படுத்துகிறது
உடல் மொழியின் பதில் எரிச்சலூட்டுகிறது
ஒரு கலைப்படைப்பை அரங்கேறவிடாமல் தடுக்கிறது
நாங்களும் இந்த தேசத்தின் பிரஜைகள் தான்
வேற்று நாட்டு அகதிகள் போல் ஏன் அலைக்கழிக்கிறீர்கள்
பொற்கால முழக்கங்களும்
அற்புதங்களெனச் சொல்லி நிகழ்த்திய
சாகஸ சூரத்தனங்களும் பல்லிளிக்கத் தொடங்கிவிட்டன
வெறுப்பின் உச்சம் எவ்வளவு அருவருக்கத்தக்க
செயல்களாக உருமாறுகின்றன
படுகொலைகளின்
நிகழ்விடத்திலிருந்தே உண்மைகள்
ஒளிரத் துவங்கிவிட்டன
நீங்கள் உருவாக்கிய பரிதாபத்திற்குரிய காலம்
முடிவுக்கு வரப்போவது கண்டு
ஏன் இவ்வளவு கலக்கமுறுகிறீர்கள்
வெற்றியை போல்
தோல்வியையும் ஏந்திக்கொள்ளுங்கள்
ஆனாலும்
வன்மம் தீர்க்கும் வெறுப்பேதும்
எங்களுக்கில்லை.
Notes Of Citizen : Ravi Subramanian (Poem)