அதிபர் ட்ரம்பால் முன்மொழியப்பட்ட பிரெட் கவனாக், பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
அதிபர் ட்ரம்பால் முன்மொழியப்பட்ட பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.
இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிப்பதில் ட்ரம்ப் பிடிவதாமாக இருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 51 ஓட்டுகள் ஆதரவாகவும், 49 ஓட்டுகள் எதிராகவும் பிரெட் கவனாக்குக்கு கிடைத்தன. இதையடுத்து அவர் மயிரி ழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பிரெட் கவனக்கிடம் 11 மணிநேரம் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ நடத்திய விசாரணைக்கு பிறகே, அவருக்கு ஆதரவாக வாக்களிக்க அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.
அமெரிக்காவில் மாகாணங்களுக்கான தேர்தல்கள் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பிரெட் கவனாக் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வந்த அதிபர் டிரம்பிற்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது.
அமெரிக்க செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வாஷிங்டனில் பெருந்திரளான மக்கள் கவனாக் நியமனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, செனட் சபையின் நடவடிக்கையை பார்வையாளர்கள் மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருத்தவர்கள், “வெட்கக்கேடு” என்றும், துணை அதிபர் மைக் பென்ஸ், கவனாக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை திரும்பப்பெற வேண்டுமென்றும் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், பிரெட் கெவனாக் உச்சநீதிமன்றத் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை வாழ்த்தி, அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் இரண்டு பதிவுகளை இட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஜனநாயக கட்சியினர் தொடுத்த பயங்கரமான தாக்குதல்” மற்றும் குற்றஞ்சாட்டிய பெண்களின் ‘சீற்றத்தை’ பிரெட் கெவனாக் எதிர்த்து நின்று வெற்றிபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
At last… Brett Kavanaugh sworn in as an Associate justice of US Supreme Court