இலங்கை அருகே புதிய காற்றழுத்த சுழற்சி நிலவுவதால் டெல்டா மாவட்டங்களில் நாளை இரவு முதல் மீண்டும் மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது
வங்கக்கடலில், இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த சுழற்சி நாளை திரிகோணமலையை அருகே வந்தடையும்.
இதனால் இலங்கை முழுவதும் நாளை முதல் நல்ல மழை பெய்யும். இலங்கையின் கிழக்குப்பகுதியில் அமைவதால் கூடுதல் மழையை எதிர்பார்க்கலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை, நாகை, திருவாரூர், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் நாளை இரவு மழை தொடங்க வாய்ப்புள்ளது. 22 மற்றும் 23-ம் தேதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையுடன் கடல் பகுதியில் சாதகமான வெப்பம் நிலவுவதால் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு ஏற்படும்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை.
கடலூர் மாவட்டம் தொடங்கி குமரி கடல்பகுதி வரையிலும் மழை பெய்யலாம். கடல் பகுதியையொட்டியுள்ள மாவட்டங்களுக்கும் சற்று மழை இருக்கலாம்.
உள்மாவட்டங்களில் திருச்சி, பெரம்பலூர் வரை மழை இருக்கும். பிற மாவட்டங்களுக்கு 23 மற்றும் 25-ம் தேதிகளில் லேசான மழை இருக்கும். கர்நாடகா, ஆந்திரா எல்லையோர மாவட்டங்களுக்கு தூறல் மழை மட்டுமே இருக்கும்.
நீலகிரி மாவட்டத்தில் 22-ம் தேதி முதல் தினந்தோறும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உட்பட வட தமிழகத்தை பொறுத்தவரை நனைக்கும் மழை மட்டுமே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.