ரபேல் வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், ரபேல் வழக்கை இழுத்தடிக்கலாம் என்ற மோடி அரசின் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடமுடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்தும், ரபேல் விவகாரத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான சில ஆவணங்களின் அடிப்படையிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த அமர்வின் போது, இந்த வழக்கில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கசிந்த ஆதாரங்களை விசாரிக்க போவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தி இந்து இதழில் வெளியான ஆதாரங்களை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
இந்நிலையில் இது தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்ய 4 வாரங்கள் அவகாசம் கோரி மத்திய அரசு சார்பில் நேற்று விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான முதல் அமர்வு, நான்கு நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மே 6 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் எதிரான தீர்ப்பை அளித்து விட்டால், அது பாஜகவுக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதியே, மத்திய அரசு தரப்பில் 4 வாரங்கள் அவகாசம் கோரப்பட்டன.
4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டால் அதற்குள் தேர்தல் முடிந்து விடும் என மத்திய பாஜக அரசு திட்டமிட்டது.
ஆனால், மோடி அரசின் எதிர்பார்ப்பிற்கு மாறாக உச்சநீதிமன்றம் அவகாசம் தர மறுத்து, உடனடியாக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதனால், மே 6ம் தேதி ரபேல் வழக்கில் முக்கியத் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இது தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அடுத்தடுத்த வாரங்களில் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருவதாலேயே தம்மை மிரட்டுவதற்காகவே, பாலியல் புகார் போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.