சேலத்தில், 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட ஒருபகுதியை போக்குவரத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. தற்போது, அஸ்தம்பட்டி எல்ஆர்என் ஓட்டல் பகுதியில் இருந்து ஏவிஆர் ரவுண்டானா வரை செல்லும் பாலத்தின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட ஒரு பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
ஐந்து ரோடு பகுதியில் நடைபெற்ற விழாவில், 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒருபகுதியை, பொதுமக்களின் போக்குவரத்திற்கு, முதலமைச்சர் அர்ப்பணித்தார்.
இந்த விழாவில், அதிமுக எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடாச்சலம், மனோன்மணியன் உள்ளிட்டோரும், திமுக எம்எல்ஏ ராஜேந்திரன், சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசி முடித்துவிட்டு, ரிப்பனை வெட்டி மேம்பாலத்தை திறப்பதற்காக முதலமைச்சர் வந்தார். அங்கு சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் வரவில்லை. இதனால் ரிப்பனை வெட்டி பாலத்தை திறக்காத எடப்பாடி பழனிசாமி, திமுக எம்பி மற்றும் எம்எல்ஏவை அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் கூறினார்.
இதனை அடுத்து அதிகாரிகள், காவல்துறையினர் சென்று, திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபனையும், அக்கட்சியின் எம்எல்ஏ ராஜேந்திரனையும் அழைத்து வந்தனர்.
அவர்களுக்காக 7 நிமிடங்கள் காத்திருந்த முதலமைச்சர், திமுக எம்பியும், எம்எல்ஏவும் வந்தவுடன் ரிப்பனை வெட்டி மேம்பாலத்தை திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, மேம்பாலத்தில் காரில் சென்று பார்வையிட்டார்.
441 கோடி ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்படும் இந்த இரண்டடுக்கு மேம்பாலத் திட்டத்தை கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் வாகனங்கள் கடப்பதாக கணக்கெடுக்கப்பட்ட ஐந்து ரோடு பகுதியில்தான் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஐந்து ரோட்டில், ஏ.வி.ஆர்., ரவுண்டானா, சென்னை சில்க்சில் துவங்கி, சாரதா காலேஜ் சாலை வரையிலான பகுதியில் ஒரு பாலமும், குரங்குசாவடியில் தொடங்கி ஓமலூர் சாலை, அண்ணா பூங்கா வரை என, இரு உயர் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
அதில், ஐந்து ரோடு துவங்கி புதிய பஸ் ஸ்டாண்டு வரையிலான பகுதியில் இரண்டு அடுக்கு மேம்பாலமாக அமைய உள்ளது.
தமிழகத்தின் மிக நீளமான இரண்டு அடுக்கு மேம்பாலம் என்ற சிறப்புடனும், சுமார் 7 கிலோ மீட்டர் தூர அளவை கொண்டதாக உருவாகி வருகிறது. தற்போது, அஸ்தம்பட்டி எல்ஆர்என் ஓட்டல் பகுதியில் இருந்து ஏவிஆர் ரவுண்டானா வரை செல்லும் பாலத்தின் பணிகள் நிறைவு பெற்று, முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.