ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்க முயலும் ஆதிக்க மேலாண்மை என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கே மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும், கற்றறிந்தோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்பதும்,
மாநிலங்களில் பணியாற்றும் மாஜிஸ்திரேட்டுகளைக் கூட மத்திய அரசே தேர்வு செய்யும் என்பதும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதைப் போன்றது என்றும்,
கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பிற்போக்கான காரியம் என்றும் கூறியுள்ளார்.
பொது விநியோகம் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை என்றும் அதில் கை வைப்பது, தேன் கூட்டில் கல் வீசுவதற்கு சமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகள் மத்தியில் அதிகாரங்களைக் குவித்துக் கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகார உள்நோக்கம் நிறைந்தது என்றும் அ.தி.மு.க. அரசு இந்தத் திட்டங்களை ஆரம்ப நிலையிலேயே கடுமையாக எதிர்த்து அடியோடு கைவிட வலியுறுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.