அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகை..

காஞ்சி அத்திவரதரை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வழிபட உள்ளதை அடுத்து கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெறுகிறது. நேற்று காவி வண்ண பட்டாடையில் அத்திவரதர் காட்சியளித்தார.

நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள், அத்திவரதரை தரிசித்துச் சென்றனர்.

இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரம் பேர் அத்திவரதரை வழிபட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேர் அத்திவரதரை வழிபட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அத்திவரதரை வழிபடுவதற்காக இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளார். இதை முன்னிட்டு கோவிலைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

துணை ராணுவப் படை வீரர்கள் 100 பேரும் தங்களது நிலைகளில் தயார் நிலையில் உள்ளனர். இன்று மாலை தொடங்கி கோவில் அருகே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று போலீசார் கூறியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் வழிபட உள்ளதால், இன்று பிற்பகல் 2 மணி தொடங்கி 5 மணி வரை பொது தரிசனத்திற்கும், காலை 10 மணியுடன் சிறப்பு தரிசனத்திற்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.