பெரியார் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
துக்ளக் ஆண்டு விழாவில் தனது சர்ச்சை பேச்சு குறித்து நடிகர் ரஜினி விளக்கம் அளித்துள்ளார். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.
இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நபர்கள், பல்வேறு பாஜகவினர், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசினார். இந்த விழாவில் ரஜினி பேசியதாவது;
பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார்.
இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார்.
அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார். இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.
பெரியாரின் போராட்டம் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கள் சில தவறானது ஆகும். ரஜினியின் இந்த கருத்துக்கு எதிராக பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது.
அதேபோல் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தவும் திட்டங்கள் போடப்பட்டுள்ளது. ரஜினி வீடு முற்றுகைப் போராடம் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக நாளை நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது; 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும் நான் கூறவில்லை.
பத்திரிகைகளில் கேள்விப்பட்டதை மட்டும் தான் நான் பேசினேன். கற்பனையாக ஏதும் பேசவில்லை. தான் பேசியது மறுக்கப்பட வேண்டியது அல்ல, மறக்கப்பட வேண்டியது.
சேலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் நம்பத்தகுந்த பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. 1971-ல் ராமர்-சீதை படங்கள் உடையில்லாமல் கொண்டுவர பட்டது உண்மைதான்.
1971-ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் ஏதும் பேசவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.
ரஜினி இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியாக போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளனர்.
ரஜினி சார்பாக போலீசில் பாதுகாப்பு கோரப்பட்டது. இதையடுத்து தற்போது சென்னை போலீஸ் சார்பாக ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
15க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு முன் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள்.