சுயபாரதம் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
தன்னிறைவு இந்திய திட்டத்தில் 3வது கட்ட சலுகைகளை அறிவித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியாகின்றன. அதில், 8 விவசாய துறையை உள்கட்டமைப்பு சார்ந்ததாக இருக்கும்.
மற்ற 3 திட்டங்கள் விவசாய துறைக்கான அரசு முறைகளின் மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாய துறையை சார்ந்துள்ளனர். சணல் பருப்பு உற்பத்தியில் தொடர்ந்து இந்தியா முன்னிலையில் உள்ளது.
நமது விவசாயிகள் அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் விவசாயிகளுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. “
இக்கட்டான சூழ்நிலையிலும் ரபி அறுவடையை விவசாயிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். ஊரடங்கின் போது உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்காக ரூ.74,300 கோடி வழங்கப்பட்டுள்ளது..
பீமயோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6,400 கோடி நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகளிடம் 560 லட்சம்லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் கிசான் நிதி திட்டத்தில் ரூ.ரூ.18700 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் நிலைய உள்கட்டமைப்புக்கு மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
இதன் மூலம் குளிர்பதன வசதிகள் மற்றும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்கள் நலனுக்காக ரூ.20,000 கோடியில் திட்டம் .மீனவர்கள் புதிய மீன்பிடி கப்பல்கள் வாங்க நிதிஉதவி வழங்கப்படும் மற்றும் மீன் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறு உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு விளைப்பயிரை மையமாக கொண்டு உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்