தி.மு.க. பொது செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது.
அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வரும் 9-ம் தேதி கூடுகிறது.
இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார்.
இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர்.
இதற்கிடையே, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாலை 4 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், தி.மு.க. பொது செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.