இனி 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற உடனேயே சிஏ படிப்பில் சேரும் வகையில், இந்திய பட்டயக் கணக்காளர் மையம் விதிகளைத் திருத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர்வதற்கு 12-ம் வகுப்புத் தேர்ச்சி என்ற நடைமுறை இருந்து வந்தது. தற்போது அது 10-ம் வகுப்புத் தேர்ச்சி என மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய பட்டயக் கணக்காளர் மையத்தின் தலைவர் அதுல் குமார் கூறுகையில், ”பட்டயக் கணக்காளர் சட்டம் 1988, 25E, 25F மற்றும் 28F ஆகிய சட்ட விதிகளைத் திருத்த அரசிடம் அண்மையில் அனுமதி பெற்றுள்ளோம்.
இதன்மூலம் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சிஏ படிப்பில் சேர முடியும். எனினும் அடிப்படைப் பாடப்பிரிவுக்கான அனுமதி 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும்.
10-ம் வகுப்பில் சிஏ படிக்கப் பதிவு செய்வதன் மூலம் 11, 12-ம் வகுப்புப் படிக்கும்போதே சிஏ அடிப்படைத் தேர்வுக்காக 4 மாதங்கள் படிக்கலாம்.
இதன் மூலம் 12-ம் வகுப்புத் தேர்வை எழுதிய உடன் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் சிஏ அடிப்படைத் தேர்வை மாணவர்கள் எழுத முடியும்.
இதனால் வழக்கத்தைவிட 6 மாதங்களுக்கு முன்னதாகவே ஒருவரால் பட்டயக் கணக்காளராக முடியும்” என்று தெரிவித்துள்ளார்.