. பழையசோறு
___________________________________________________________
02.06.1968-அன்று நடைபெற்ற கொட்டையூர் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. ‘விடுதலை’, 15.06.1968
– நன்றி : தமிழ் ஓவியா வலைப் பூ
_______________________________________________________________
பெரியார் பேசுகிறார்….
மணமக்களின் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியினை இம்முறையில் அமைத்ததோடு, என்னையும் அழைத்து நடத்திக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியானது இதுவரையில் நம்மிடையில் நிகழ்ந்து வந்த நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் மாறான தன்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பழைய நிகழ்ச்சியினை மாற்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டதென்றால் பழைய நிகழ்ச்சியானது மனிதத்தன்மைக்கு ஏற்றதாக இல்லாமல் பெண்களை அடிமைப்படுத்தவும் – மனிதனைக் காட்டு மிராண்டியாக்கவும், ஜாதி இழிவு அடிமையை நிலைநிறுத்தவும், பொருத்தமும், சம்பந்தமும் அற்ற சடங்குகளோடு விவாகம் – தாராமுகூர்த்தம் – கன்னிகாதானம் என்னும் பெயரால் நடைபெற்று வந்தது.
அரசாங்கத்திலும் மத்ததிலும் – சமுதாயத்திலும் ஆதிக்கம் பெற்றிருக்கிற பார்ப்பனர் தங்கள் ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகப் பெரும்பான்மையான மக்களை மடமையில் ஆழ்த்தி அவர்களை அறிவு பெற ஒட்டாமல் தடுத்து அவர்களைப் பகுத்தறிவற்ற மடையர்களாகச் செய்து தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள். மக்களிடம் அறியாமையை நிலை நிறுத்த வேண்டுமானால் அவர்களை மூடநம்பிக்கைக்காரர்களாக்கினால் தான் முடியும் என்பதை உணர்ந்த பார்ப்பனர்கள், மக்களிடையே மூடநம்பிக்கையினைப் புகுத்தினார்கள்.
கடவுள், மத, சாஸ்திரங்களின் மூலம் புகுத்தி விட்டார்களாததால் பயந்து கொண்டு மக்கள் அதனைப் பின்பற்றி வரலாயினர். இது மாற வேண்டுமென்று இந்தியாவிலேயே எவரும் கருதவுமில்லை – முயற்சிக்கவுமில்லை.
சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின்தான், அதுவும் சமூகத்தில் சரிசமமான பெண்கள் ஆண்களுக்கு எதற்காக அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டுமென்று கேட்க ஆரம்பித்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.
42-வருஷங்களாக சுயமரியாதை இயக்கம் மனிதனின் அறிவிற்கேற்ற சுதந்திரத்திற்கேற்ற எல்லா வாய்ப்புகளும் பெண்களுக்கும் இருக்க வேண்டுமென்று பாடுபட்டதன் காரணமாக, பெண்களுக்கு ஆண்களைப் போல் சமுதாயத்தில் எல்லா உரிமைகளும் இன்று வழங்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் அடிமைகளல்ல, ஆண்களைப் போன்று சம உரிமையுடையவர்கள் என்பதை நிலை நிறுத்தவே இம்முறையாகும்.
ஆதிக்கம் பார்ப்பான் கையில் இருந்தாலும் அவன் கையிலிருந்து மாறினாலும் பார்ப்பன அடிமைகளான காங்கிரஸ்காரன் கைக்கு ஆதிக்கம் போனாலும் 10.000 கணக்கான திருமணம் நடைபெற்றாலும் இதுவரை இத்திருமணம் சட்டப்படிச் செல்லுபடியாக்காமலலே இருந்தது. இப்போது பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் சுயமரியாதைக்காரர்களும் திராவிடர் கழக்காரர்களாகவுமிருந்த தமிழர்களுடைய ஆட்சியானது ஏற்பட்டதால் இத்திருமணமனது சட்டப்படிச் செல்லும் என்று சட்டமியற்றியுள்ளதோடு, இதுவரை இம்முறையில் நடைபெற்ற திருமணங்களும் செல்லுபடியாகுமென்று சட்டமியற்றி உள்ளது. சுயமரியாதைக்காரர்களாகிய நமக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதென்பதோடு இதை செய்த இந்த அரசை ஆதரிப்பது உண்மையான சுயமரியாதைக்காரர்களின் கடமையுமாகும்.
பொதுவாகப் பெண்கள் தங்களுக்குத் திருமணமானால் தாங்கள் ஒரு ஜீவன் என்பதையே மறந்திட வேண்டும். சுற்றத்தாரை மறந்துவிட வேண்டும். எது செய்வதானாலும் தன் கணவனைக் கேட்டுச் செய்ய வேண்டும். கணவனின் மனம் கோணாமல் அவன் சொல்படி கேட்டு அவனுக்கு அடிமையாக இருந்து ஏவல் செய்ய வேண்டும். அவன் அடித்தாலும், உதைத்தாலும் பட்டுக் கொண்டு அவனுக்கு அடங்கி நடக்க வேண்டும். எதற்காக ஒரு பெண் தன் சுதந்திரத்தை இழந்து அடிமையாக இருக்க வேண்டும் என்பது பற்றி எவனுமே இதுவரை சிந்திக்கவில்லை என்பதோடு பெண்கள் இப்படி நடந்து கொள்வது தான் அவர்களின் பதிவிரதா தன்மையாகுமென்று எழுதி வைத்து விட்டான். பெண்கள் அறிவற்றவர்களானதால் அவர்களும் இப்படி நடந்து கொள்வது தங்களின் கடமை என்றே கருதி நடந்து வந்தனர்.
முதலாவது இங்குள்ள தோழர்கள் நான் சொல்பவற்றையெல்லாம் நம்ப வேண்டுமென்று சொல்லவில்லை. எத்தனையோ கருத்துகளில் இதுவும் ஒரு கருத்து என்று கருதிச் சிந்தியுங்கள். இதில் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்து என்று உங்களுக்குத் தோன்றுவதை ஏற்று நடவுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். அநேகம் பேருக்கு நான் சொல்வது அதிசயமாக இருக்கலாம். ஆச்சரியமாகவும் இருக்கலாம். கலவரமாகக் கூட தெரியலாம். இறுதி வரை நீங்கள் நம்பி கடைபிடித்து வந்தவைகளுக்கு முரணாக நேர்மாறாக இருக்கலாம். எனக்குத் தோன்றிய கருத்தினைக் கூறுகின்றேன். ஏற்க முடிந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்.
பெண்களை அடிமைப்படுத்தும் கொடுமை இம்முறையில் ஒழியவில்லையென்றால் திருமணமே சட்டப்படி குற்றமாக்கப்பட வேண்டும். யோக்கியமான முறையிலே உரிமை இல்லை என்றால் சட்ட விரோதமாக்க வேண்டும். உலகிலே இருக்கிற எல்லா ஜீவராசிகளைப் போலவும் தான் மனிதனுமாகும். மற்ற ஜீவராசிகள் எப்படி நடந்து கொள்கின்றனவோ அதுபோன்று தான் மனிதனும் நடந்து கொள்கின்றான். பொதுவாக ஆண் ஜீவன்கள் உணர்ச்சிக்கு ஆளாகும்போது பெண் ஜீவனைக் கொண்டு திணித்துக் கொள்ளுமே தவிர குட்டிப் போட வேண்டுமென்று கருதுவது கிடையாது. ஜீவராசிகளில் அதிகமான அறிவு என்பதான பகுத்தறிவுடைய மனித ஜீவன் மட்டும்தான் பெண்ணைத் தனக்கு அடிமையாக கொண்டிருக்கிறான். மற்ற எந்த ஜீவனும் இதுபோல் பெண் ஜீவனை அடிமையாக்கிக் கொள்வது கிடையாது.
மனிதனுக்கும் கவலை, தொல்லைகளெல்லாம் ஒழிய வேண்டும். கவலையும், தொல்லையுமில்லாமலிருக்கும் போது அறிவில் சிறந்த மனிதன் மட்டும் கவலையும், தொல்லையும் அடைகிறான் என்றால், அதற்குக் காரணமே அவன் அமைத்துக் கொண்ட இந்த வாழ்க்கை முறையேயாகும். குடும்பம், மனைவி, குழந்தை என்று அவன் வாழ்நாள் முழுவதும் இதற்காகவே தொல்லைப்பட வேண்டியவனாகி விடுகின்றான். மிஷினில் கையைக் கொடுப்பது போல முட்டாள்தனத்திலே போய் மாட்டிக் கொள்கிறான். பிறகு தொல்லைக்கு ஆளாகின்றான்.
மனிதன் எந்த ஜீவராசிகளிலும் ஒத்தவனாக இல்லை. ஜீவராசிகளில் சில ஒரு ஆணோடு பெண்ணோடு இருக்கிறது. மற்றவை நேர்ந்தபடி இருக்க வேண்டியதாயிருக்கிறது. ஒரு ஆணோடு பெண்ணோடு இருப்பதும் இருக்கும் வரை தான். ஒன்று பிரிந்தால் மற்றொன்று தானே வேறென்றைத் தேடிக் கூடிக் கொள்கிறது. அதுபோன்று மிருகத்திலும் சில இருக்கின்றன. அந்த முறையில் மனிதனைப் பார்த்தால் அப்படியில்லை. அவனை எதோடு சேர்ப்பது என்றே புரியவில்லை. ஆனதனால் இயற்கைக்குச் சம்பந்தமில்லாத ஒன்றை இவனாகவே ஏற்பாடு செய்து கொண்டு, அதில் மாட்டிக் கொண்டு எண்ணற்றத் தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகின்றான். இந்தத் தொல்லைகளும், துன்பங்களும் மனிதனுக்கு நீங்க வேண்டுமானால் திருமணத்தையே நிறுத்தி விட வேண்டும். அப்போதுதான் மனிதன் கவலையற்றவனாக இருப்பான்.
தமிழனின் வாழ்வு முறைக்குக் குறள்தான் என்று சொல்வார்கள். நாம் காட்டு மனிதனாக இருந்த வரை குறள் சரி. நாட்டு மனிதனான பின், பெண்களுக்குத் தான் அதில் கற்பு நீதி சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஆண்கள் கற்பு நீதி பற்றி அதில் ஒன்றுமில்லை. குறளைத் தூக்கியெறிய வேண்டியது தான். பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வார்த்தை கூட அதில் இல்லை. குறளில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியங்கள் யாவுமே பெண்களை அடிமைப்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றன என்பதை விளக்கும்போது சின்னத்தம்பி அவர்கள் “அய்யா அவர்கள் மன்னிக்க வேண்டும் குறளில் ஆண்களுக்கும் நீதி சொல்லப்பட்டிருக்கிறது. “பிறர் இல் விழையாமை” என்ற ஓர் அதிகாரமே இருக்கிறது. பிறன் மனைவியை நினைப்பது, தீண்டுவது குற்றமென்று வள்ளுவர் ஆண்களுக்கும் சொல்லியிருக்கின்றார்” எனக் குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் அவர்கள், “அய்யா சொன்னது ரொம்ப சரி. வள்ளுவன் மற்றவன் திருமணமும் செய்து கொண்டுள்ள பெண்களை நினைப்பது, தீண்டுவது குற்றமென்று சொன்னானே தவிர, திருமணமாகாத பெண்களைத் தீண்டுவது குற்றமென்று சொல்லவில்லையே! பெண்கள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, அதாவது ஆண்களைக் கண்டால் பயந்து கொண்டும், வெட்கப்பட்டும், படிக்காத மடைச்சியாகவும், பிறர் கண்டால் அருவருப்பு அடையும்படியும் இருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, மனைவி கடவுளைத் தொழவிட்டாலும், கணவனைத் தொழுபவளாக இருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, ஆண்கள் தன் மனைவியைத் தொழ வேண்டும். மனைவி சொல்படி கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையே. அவ்வை பெண்தான். அப்படி இருந்தும், அவளே “தையல் சொல் கேளேல்” ‘பெண் சொல்வதைக் கேட்காதே’ என்று தான் எழுதி இருக்கிறாள்.
நான் வள்ளுவனைக் குறை கூறுகிறேன் என்று கருத வேண்டாம். அவன் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது. மனிதனெல்லாம் காட்டுமிராண்டியாக இருந்த காலம். அப்போதிருந்த நிலைமைக்குத் தக்கபடி அப்போதுள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி அவன் எழுதி இருக்கின்றான். இது அவன் குற்றமல்ல. அப்போதிருந்த நிலை அப்படிப்பட்டது. அதுவே இன்றைக்கும் என்பது தான் தவறாகும். மனிதன் 2,000-ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இன்றில்லை. தனது வசதிக்கும், வாய்ப்பிற்கும், தேவைக்கும் ஏற்ப உணவு, உடை, உறையுள் மற்ற எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டிருக்கின்றான். இதை மட்டும் மாற்றிக் கொள்ள மாட்டேனென்றால் இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? நீங்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மனிதன் எதில் மாறாமல் இருக்கின்றான்? நன்றாகச் சிந்தியுங்கள். உங்களுக்கு ஏதாவது தோன்றினால் எடுத்துச் சொல்லுங்கள். மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தால் எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.
மணமக்கள் தங்களின் வாழ்க்கையில் வரவிற்கு மேல் செலவிடக் கூடாது. முட்டாள்தனமாகக் கோயில் – குளங்களுக்குச் செல்லக் கூடாது. கூடுமானவரை குழந்தை பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மிஞ்சினால் ஒன்றிரண்டோடு நிறுத்திக் கொள்வது அவர்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே நன்மையாகும்.
______________________________________________________________________________________________