முக்கிய செய்திகள்

தி.ஜா: சில நினைவுகள் – அ.மார்க்ஸ் (பழையசோறு பகுதியில்…)

a.marx 2நேற்று (19.6.2015) தி.ஜானகிராமனின் பிறந்தநாள் என நண்பர் மகேஷ் ராமநாதனின் முகநூல் பதிவில் கண்டபோது அவரின் ஏதாவது ஒரு படைப்பை உடனடியாக வாசித்துவிட வேண்டும் என்கிற துடிப்பு விரட்டிக் கொண்டே இருந்தது.

கையில் அகப்பட்டது அவரது ‘அடி’ குறுநாவல்தான். கிரவுன் சைசில் சரியாக நூறு பக்கம்.

“மோகத்தைக் கொன்றுவிடு அலால் என் மூச்சை நிறுத்திவிடு” என எத்தனை முறை கதறி அழுதாலும், வேண்டித் துதித்தாலும் அவனை / அவளை அது விட்டுவிடுவதில்லை.

“சபலம்” / “ஆழ்ந்த பந்தம்” இரண்டிற்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. எல்லாமே சபலந்தான் என்கிறார் தி.ஜா இந்தக் குறுநாவலில்.

thi.janagiraman

ஆனால் சபலம் என்பது அப்படி ஒன்றும் இழிவானதோ இல்லை வென்றுவிடக் கூடியதோ இல்லை. அது ஒரு ஜீவ சுபாவம். அவ்வளவே.

குடும்பம் என்கிற நிறுவனத்தில் இந்த ஜீவ சுபாவம் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது, தீர்த்துக் கொள்ளப்படுகிறது, ஒடுங்குகிறது, ஒடுக்கப்படுகிறது, ஒடுக்கப்படுவதற்கு இணங்குகிறது என்பதுதான் அநேகமாக தி.ஜாவின் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கும் அடிப்படை.

இந்தக் குறுநாவலில் மத்திய வயதைத் தாண்டிய ஒருவன் சபலத்திற்கு ஆட்படுகிறான். அவளும். அவனது மனைவி இவர்களை எதிர்கொள்வதுதான் கதை. ஆனால் கிட்டத்தட்ட குறு நாவலின் மூன்றில் ஒரு பங்கை இந்த மையச் சரடிற்குத் தொடர்பில்லாத தந்தையற்ற, ஒரு பார்ப்பன விதவைத் தாயால் வளர்க்கப்பட்ட அவனின் இளம் வயது வறுமை வாழ்க்கை நிரப்புகிறது. ஆனால் அதன்றி இக்குறுநாவல் முழுமை பெறாது. தி.ஜாவின் எழுத்துக்கள் அனைத்திற்கும் இது பொருந்தும். அவர் சொல்ல வரும் அந்த மையச் சரடை ஒரு மிகப் பெரிய, வித்தாரமான பின்னணியில் இழைத்து நிறுத்துவார். அவரது ‘செம்பருத்தி’ நாவல் ஒரு எடுத்துக்காட்டு. சட்டநாதன் – குஞ்சம்மா இந்த இருவரையும் சுட்டெரிக்கும் காமத் தீ அதன் இயல்பான உச்சத்தைத் தொடாமலே கருகுவதைச் சொல்ல அவர் விரிக்கும் திரை மிகப் பெரிது. ஒரு அரை நூற்றாண்டு காலம், ஒரு அகன்ற கூட்டுக் குடும்பம், பல திறப்பட்ட மக்களும் வாழும் ஒரு தஞ்சாவூர்க் கிராமம், சுதந்திரத்திற்குப் பிந்திய அரசியலில் நேரும் அற வீழ்ச்சி இத்தனையும் தேவைப்படுகிறது அவருக்கு.

அவரது படைப்புகள் அனைத்திலும் விரவி நிற்கும் ஆன்மீக இழையும் கூட பெரிதாக உறுத்தாமல் அவர் சொல்ல வந்ததற்குத் துணை நிற்கும்.

ஜெயகாந்தனைப்போல அடித்தள மக்களிடம் வெளிப்படும் மேன்மைகளைப் பாடுவனவாக இவை அமைவதில்லை. சொல்லப்போனால் இவரது கதைகள் பலவும் சென்ற நூற்றாண்டுத் தஞ்சை மாவட்டத்து நில உடைமைப் பின்னணியில் இயங்குபவை. இவற்றில் அடித்தள மக்கள் வெறும் வண்டி ஓட்டிகளாகவோ, கடை ஊழியர்களாகவோ மட்டுமே தென்படுவர். தி.ஜாவின் நோக்கமும் களமும் வேறு.

ஆனாலும் பலதிறப்பட்ட மக்களும் வந்து செல்லும் களமாக மட்டுமல்ல அந்த ஒவ்வொருவரின், ஆம் ஒவ்வொருவரின் மொழியும், உரையாடல்களும், வழமைகளும் அத்தனை துல்லியமாகப் பதிவு காண்பதாகவும் அவரது எழுத்துக்கள் அமையும். உரையாடல்களின் ஊடாக மனிதர்களை அத்தனை variety உடனும் நம் கண்முன் ரத்தமும் சதையுமாய்ச் செதுக்குவதில் தி.ஜாவுக்கு இணையாக வெகு சிலரையே அடையாளம் காட்ட முடியும்.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

ஜானகிராமனை நான் ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அது எழுபதுகளின் இறுதி. தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மார்ஷ் ஹாலில் அந்தச் சந்திப்பு நடந்ததாக ஞாபகம். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றிய மறைந்த தோழர் சீனிவாசன், இப்போது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள (அப்போது மாணவர்) மதிவாணன் ஆகியோர்  உடன் இருந்தனர். கவிஞர் நா.விச்வநாதனும் இடையில் வந்து கலந்து கொண்டார் என நினைவு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்து செயல்பட்ட காலம். சங்கக் கிளையின் சார்பாக வெளியிடப்பட்டு வந்த ‘நடப்பு’ என்றொரு தட்டச்சு இதழுக்காக எடுத்த ஒரு பிரத்தியேக நேர்காணல் அது.

அப்போது நாங்கள் யாரும் இன்றைய அளவிற்குப் பொது வெளியில் அறிமுகமானவர்கள் அல்ல. நாங்கள் சென்றதும் ஒரு தட்டச்சு இதழுக்காக. இருந்தும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி, எங்களது சிறு பிள்ளைத் தனமான கோபத்துடன் கூடிய முற்போக்குக் கேள்விக்கெல்லாம் சிறிதும் பதட்டப்படாமல் அவர் பதிலளித்த பாங்கு மறக்க இயலாதது.

வேட்டி, ஒரு அரைக் கை சட்டை, நரைத்த முடி இவற்றுடன் எங்களுடன் பேசிக் கொண்டிருந்த ஜானகிராமனைப் பற்றி அப்போது நான் இப்படி எழுதியதாக ஞாபகம்: ‘ஒரு போஸ்ட் ஆபீஸ் ஸ்டாம்ப் விற்பனைக் கூண்டு அல்லது ரயில்வே நிலைய டிக்கட் விற்பனை கவுன்டருக்குள் அமர்ந்திருக்கும் ஒரு ஊழியரைப் பார்ப்பது போல இருந்தது அவரைப் பார்த்த கணத்தில்…’

எழுத்தாளர் என்பதற்கான எந்தத் தோரணை, தினாவெட்டு, அலட்சியம், படு ஆழமாக எதையாவது சொல்லிவிட வேண்டும் என்கிற முனைப்பு எதுவும் இல்லாமல் நிகழ்ந்த அந்தச் சந்திப்பை மறக்க முடியாது.

(முடிந்தால் அந்த நேர்காணலைத் தேடி எடுத்துப் பதிகிறேன்

A.Marx about Thi. Janagiraman

நன்றி : பேரா. அ.மார்க்ஸ் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து….