அ.தி.மு.க நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு

கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்த அதிமுக நிர்வாகிகள், முதலமைச்சர் மீதான புகார்கள் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளனர்.

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி சயன், மனோஜ் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர்.

அவர்கள் இருவரும் பேசிய வீடியோவை, பத்திரிகையாளர் மேத்யூ வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை ஆளுநரை சந்தித்து, விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்து இருந்தார்.

இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர்

சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து கோடநாடு விவகாரம் தொடர்பாக விளக்க மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முனுசாமி, முதலமைச்சரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் முயற்சியாக மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

தங்களது விளக்கம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்திருப்பதாகவும் முனுசாமி கூறினார்.

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த 2000 கோடி ரூபாய் பற்றி முதலமைச்சர் எதுவும் கூறவில்லை என்று ஸ்டாலின் சொல்வது தான்தோன்றித்தனமான கருத்து என்று முனுசாமி விமர்சித்தார்.

1996 ஆம் ஆண்டு ராஜீவ் கொலை குற்றவாளிகள் சிவராசன், தனுவுடன் தொடர்புபடுத்தி ஜெயலலிதா மீது கருணாநிதி குற்றச்சாட்டு கூறியதைப் போல் தற்போது அவரது மகன் ஸ்டாலின் புகார் தெரிவிப்பதாக கூறிய முனுசாமி, இந்த முயற்சியில் ஸ்டாலின் தோல்வி அடைவார் என்றார்.

பொய்யான குற்றச்சாட்டை கூறினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும் என்று குறிப்பிட்ட முனுசாமி, முதலமைச்சர் மீது பொய் குற்றச்சாட்டை குற்றவாளிகள் கூறினால் தாங்கள் வாயில் சாக்லேட் வைத்துக் கொண்டிருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்