அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..

சென்னையில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது தொடங்கியது.
அதிமுக தற்போது 4 ஆக உடைந்துள்ளது. அதில் டி.டி.வி.தினகரன் மட்டும் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

சசிகலாவோ அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது. இதுவரை தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அதிமுகவை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து நிர்வாகம் செய்து வந்தனர். சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை பன்னீர்செல்வமும் நீக்கி உத்தரவிட்டார். தற்போது இருவருமே அதிமுக எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, 2 முறை பொதுக்குழுவை கூட்டி தனக்கு ஆதரவான தீர்மானத்தை கொண்டு வந்தார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு தன்னை எதிர்த்து யாரும் போட்டி போட முடியாத சூழ்நிலையையும் அவர் உருவாக்கினார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் தற்காலிக பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அதை சென்னை ஐகோர்ட் பெஞ்ச் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். அதனால் எடப்பாடியை கட்சியை விட்டு நீக்கவிட்டேன். அவர் கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பாஜ ஆதரவுடன் சில அதிரடி முடிவுகளை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பாஜவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உரசல்கள் இருந்து வருகின்றன. இதனால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை வைத்து பாஜவை மிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதோடு கூட்டணியில் இருந்து வெளியேற சந்தர்ப்பத்தை உருவாக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பாஜ கூட்டணியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அதிமுக வெளியேறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் தமிழகத்தில் உள்ள சில கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்தும் பாஜ மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் குஜராத் மாநில புதிய அரசு பதவி ஏற்பு விழாவுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். அதன்பின்னர் திடீரென்று மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார். வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமைக் கழக நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் மட்டுமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொண்டர்கள் ஓபிஎஸ் உடன் வந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.