நாடு முழுவதும் 24 போலி பல்கலைக் கழங்கள் : முதலிடத்தில் உத்திரப் பிரதேசம் :யுஜிசி அதிர்ச்சி..

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் இருப்பதாகவும், இவற்றில் அதிகபட்சமாக 8 போலி பல்கலைக் கழகங்கள் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருப்பதாக யுஜிசி தெரிவிதுள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் கூறுகையில், ”யுஜிசி கட்டுப்பாட்டுக்குள் வராத 24 பல்கலைக் கழகங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இவை போலி பல்கலைக் கழகங்கள் என்று அறிவிக்கப்படுகிறது. இதில் யாரும் சேர வேண்டாம். இவை அனைத்தும் யுஜிசியின் 1956 ஆம் ஆண்டின் சட்டத்திற்குள் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இவற்றில் 7 பல்கலைக் கழகங்கள் டெல்லியிலும், 8 பல்கலைக் கழகங்கள் உத்தரப் பிரதேசத்திலும் இருக்கின்றன. கர்நாடகா மாநிலம் பெல்காமில் இருக்கும் பதகன்வி சர்கார் உலக திறந்தவெளி பல்கலைக் கழகம், கேரளாவில் இருக்கும் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகம், மகாராஷ்டிராவில் இருக்கும் ராஜா அராபிக் பல்கலைக் கழகம், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசன், புதுச்சேரியில் இருக்கும் ஸ்ரீ போதி அகாடமி உயர் கல்வி ஆகியவை போலி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் போலி பல்கலைக் கழகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், யுஜிசி அங்கீகரிக்காத எந்த நிறுவனமும் பல்கலைக் கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று யுஜிசி தெரிவித்துள்ளது.