முக்கிய செய்திகள்

நில ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் பஞ்சாப் முதல்வர் விடுவிப்பு..


பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் அபிவிருத்தி கழகத்திற்குச் சொந்தமான 32 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு சட்டசபை பரிந்துரையின்படி, கேப்டன் அமரீந்தர் சிங், அப்போதைய பஞ்சாப் சபாநாயகர் கேவால் கிரிஷன் மற்றும் இரண்டு முன்னாள் மந்திரிகள் உள்பட 18 பேர் மீது மொகாலியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஷிரோமணி அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின்போது தொடரப்பட்ட இவ்வழக்கு பல ஆண்டுகளாக நீடித்தது. பின்னர் நீதிமன்ற உத்தவைத் தொடர்ந்து மறு விசாரணை நடத்தப்பட்டது.

மறு விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்தது. அத்துடன், வழக்கை மூடுவதற்கான அறிக்கையை கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அப்போது மாநில ஊழல் கண்காணிப்புத்துறை அளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜஸ்விந்தர் சிங், குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்ட 18 பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள முதல் மந்திரி அமரீந்தர் சிங், தன் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார். அதேசமயம், வழக்கு தொடர்ந்த அதிகாரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் கூறினார்