அமெரிக்க பொறுப்பு அதிபராக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் செயல்பட்ட கமலா ஹாரிஸ்..

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் மட்டும் அமெரிக்க பொறுப்பு அதிபராக செயல்பட்டார்.

அமெரிக்க அதிபார் ஜோ பைடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் நோய்க்காக அவருக்கு மயக்கவியல் நிபுணர்கள் அன்ஸ்தீஸியா எனப்படும் மயக்க மருந்தை செலுத்தி சிகிச்சை வழங்கினர். இதனால் சிகிச்சை முடிந்த அதிபர் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் அவரது அதிகாரங்கள் துணை அதிபரான கமலா ஹாரிஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த வகையில் சுமார் 1 மணி நேரம் 25 நிமிடம் அதிபர் பொறுப்பு அதிகாரம் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையைப் பெற்ற அவர், அமெரிக்காவின் தற்காலிக அதிபரான முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பு வரலாற்றில் இது போன்று தற்காலிக அதிபர் பொறுப்பு நிகழ்வு 2005, 2007 ஆண்டுகளில் ஜார்ஜ் டபிள்யு புஷ் அதிபராக இருந்த போது நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று தனது 79வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

கமலா ஹாரிஸும் இந்தியத் தொடர்பும்:

இந்திய தாய், ஆப்பிரிக்க தந்தைக்கு பிறந்தவர் கமலா ஹாரிஸ். இவரது கணவர் டக்ளஸ், யூதர் ஆவார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவருடைய தாய் ஷியாமளாவின் சொந்த ஊர் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு-துளசேந்திரபுரா என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற மன்னார்குடி ஷியாமளா கோபாலன் பல்கலைக்கழகத்தில் பழகிய ஜமைக்காவைச் சேர்ந்த ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் என்று இரண்டு பெண் குழந்தைகள். கமலா ஹாரிஸுக்கு ஏழு வயதானபோது தாயும் தந்தையும் மணமுறிவு செய்துகொண்டனர். தனித்து வாழும் தாயாக இரண்டு மகள்களையும் அமெரிக்காவிலேயே துணிச்சலாக வளர்த்தெடுத்தார். இருவரும் சட்டம் பயின்று முன்னேறினார்கள். மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்த ஷியாமளா 2009-ல் புற்றுநோயால் மரணமடைந்தார்.

சிறுபிராயத்திலிருந்தே சிவில் உரிமை ஆர்வலராகவே தாயால் கமலா வார்த்தெடுக்கப்பட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் முடித்துவிட்டு கலிஃபோர்னியா ஹேஸ்டிங்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார். அதன் பிறகு மனித உரிமைகளை முன்னிறுத்தும் வழக்கறிஞராக உருவெடுத்தார். 2003-ல் சான் ஃபிரான்சிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல் ஆனார். 2010-ல் கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார். அதிலும் கலிஃபோர்னியாவின் முதல் கறுப்பினப் பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பை பெற்றார். 2016-ல் அமெரிக்க செனட்டர் ஆகும் இரண்டாவது கறுப்பினப் பெண் என்ற புகழுக்குச் சொந்தக்காரர் ஆனார். ஒபாமா ஆட்சிக் காலத்திலிருந்தே அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுபடலானார்.

இவ்வாறாக அரசியலில் முன்னேறி கமலா ஹாரிஸ் இன்று அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.