அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர். மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தோம். தேர்தல் பிரசாரத்துக்கு மு.க.ஸ்டாலின் அவசியம் வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். அவரும் வருவதாக சொன்னார். எங்களை பொறுத்தவரை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே ‘கை’ சின்னத்துக்கு கடந்த 3, 4 நாட்களாக தி.மு.க. அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, காங்கிரஸ் தொண்டர்களும், தி.மு.க. தொண்டர்களும், வாக்கு சேகரித்து பிரசாரம் செய்ததற்கு எங்களது நன்றியை தெரிவித்தோம்.