முக்கிய செய்திகள்

அண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)

 

“பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்”

திமுகவையும், அதன் நிறுவனரான அண்ணாவையும் சிறுமைப்படுத்த அரசியல் எதிரிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வசைச் சொல் இது.

குரலற்ற மக்களின் குரலாக ஒலித்த தலைவன் பேசாமல் எப்படி தன் அரசியலை நடத்த முடியும். மனம் இருட்டிலும், மொழி மௌனத்திலும் உறைந்த வன்கணாளர்கள் அவரை எதிர்ப்பதற்கு பயன்படுத்திய கூரற்ற ஆயுதம்தான் இத்தகைய வசையாடல்கள்.

அப்படிப் பேச முடியாமல் கிடந்த சமூகத்திற்காக பேசிய அந்த பெருந்தகையாளர் குறித்து, உரிய கோணத்தில், பெரிய அளவில் பேசப்படவில்லை என்பதே யதார்த்தம்.

அவர் பெயரிலேயே கட்சி இருக்கிறது. அவரால் தொடங்கப்பட்ட கட்சியும் இருக்கிறது. அனைவரும் பேசிக் கொண்டுதானே இருக்கிறார்கள் என கேட்கலாம்.

பேசுகிறார்கள். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டிப் பேசப்பட வேண்டிய, ஆழ்ந்தகன்ற அரசியல் பேராளுமை அண்ணா.

“பெரியாரின் அறிவார் தளபதி”

“திராவிட இயக்கத்தின் பெருந் தலைவர்களில் ஒருவர்”

“திமுக எனும் பேரியக்கத்தை நிறுவியவர்”

“பேச்சாற்றலும் ,எழுத்தாற்றலும் மிக்கவர்”

இவையெல்லாம் அண்ணா பற்றி நமக்கு காட்டப்படும் பொதுவான அடையாளங்கள்.

திராவிட இயக்கத் தலைவர் என்ற அடையாளமே அவருக்கு பெருமிதமானது எனினும், அதனைத் தாண்டி தமிழ்ப் பொது வெளியில் கொண்டாடப் பட வேண்டிய, பிரம்மாண்டம் அண்ணா.

ஏன்?

அண்ணா கடந்து வந்த அரசியல் பரிணாமப் பாதை, காலத்தாலும், தத்துவத்தாலும் கரடுமுரடானது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என வெகுமக்களால் எளிதில் ஏற்க இயலாத அடர்த்தியான தத்துவச் செறிவைக் கொண்ட இயக்கங்களின் வழியாக  தன்னை வார்த்துக் கொண்டவர்தான் அண்ணா.

ஆனால் வெகுமக்களின் உளவியலில் தவிர்க்க முடியாத பேரியக்கமாக இன்று வரை வேரூன்றி படர்ந்திருக்கும் திமுக என்ற வெகுசனப் பேரியக்கத்தைத் தொடங்கிய இடத்தில்தான், அண்ணா என்ற அரசியல் ஆளுமை தமிழகம் பயணிக்க வேண்டிய எதிர்காலத் திக்கை சுட்டிக்காட்டும் பேருருவாக வசீகரம் பெற்று எழுந்து நிற்கிறது.

திமுகவைத் தொடங்கியதற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தமிழ் நிலத்தில் அந்த இயக்கம் நிகழ்த்திய வேதி வினை அசாத்தியமானது.  

1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம்.

மழை தூறிக் கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுது.

சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பெருமித உணர்வு பொங்க பேசுகிறார் அண்ணா.

“திராவிடர் கழகம் என்ற மரத்தின் ஒட்டுமாஞ்செடியாக முளைத்திருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகமே தவிர, அது வேறு, இது வேறு மரமல்ல, இரண்டில் இருந்தும் பூத்துக், காய்த்துக் கனியப் போவது ஓரே கனிதான்” என்று உறுதிபட பிரகடனம் செய்கிறார்.

தத்துவத்தைத் தகவமைத்தவர்

தந்தையின் பாதையில் இருந்து விலகாத தனயனாகவே தனது அரசியலின் அடுத்த கட்டத்தை அவர் தொடர்ந்தாலும், எதிர்காலப் பயணத்திற்கு ஏற்றவாறு தத்துவார்த்த வழியைத் தகவமைத்ததுதான் அண்ணா புரிந்த அரசியல் சாகசம்.

அவர் சார்ந்திருந்த நீதிக்கட்சியை விடவும், திராவிடர் கழகத்தை  விடவும், அவரால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழ்ச் சமூகத்தின் அடித்தட்டு மக்களும் அதிகார மையத்தின் அருகில் செல்ல மட்டுமின்றி, திரளாக அதில் பங்கெடுப்பதற்குமான பெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டது.

அண்ணா ஒன்றும் போர்க்குணமற்ற நோஞ்சான் அல்ல.

இந்தித் திணிப்பின் போது,

“இது மொழிப்போராட்டமல்ல. கலாச்சாரப் போர். எனவே அறவே விட்டுக் கொடுக்க முடியாது. ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கைப்பற்றுவதாயிருந்தால் ஒன்று படையெடுப்பின் மூலமோ, அல்லது வியாபாரத்தின் மூலமோ, அல்லது கலாச்சாரத்தின் மூலமோ – ஆகிய இம்மூன்று முறைகளின் மூலம்தான் கைப்பற்ற வேண்டும். இவற்றுள் வட நாட்டினர் மூன்றாவது அதாவது கலாச்சாரத்தின் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றும் முறையைத் துவங்கி உள்ளார்கள்…. எனவே சகித்திருந்தது போதும். வாதாடிப் பார்த்ததும் போதும். இனியும் தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள். இனிப் போர்; போர் ; போர் ; போர் ; போர் தொடுப்பது தவிர வேறு வழி இல்லை. இன்றைய அரசாங்கத்திற்கு போர் தவிர வேறு எதுவும் புத்தி கற்பிக்காது…”

என்று முழங்கியவர்தான் அண்ணா. ஆனால், திமுகவைத் தொடங்கிய பின்னர், கால் வயிற்றுக் கஞ்சிக்கே போராடும் பெரும்பான்மை மக்களைக் கொண்ட தனது சமூகத்தை எத்தனை காலத்திற்கு போரிடச் சொல்லி சாகடிப்பது…? இதற்காகவா இத்தனை பெரிய அரசியலை நாம் முன்னெடுத்தோம் என்ற சிந்தனை அவரை ஆட்கொண்டது.

அவரது சிந்தனையும், தயக்கமும் சரியானதே என்பதை அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளும் உறுதிப்படுத்தின.

எதிரிகளை கூர்மழுங்கச் செய்த வியூகம்

1962ல்பிரிவினை பேசும் கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை.

அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுக்க வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக  1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி, அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் விதியில் திருத்தம் செய்ய நேரிட்டது.

“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும், இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றிற்குள், இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்றவாறு கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது.

இதன் மூலம் பிரிவினை கோரும் இயக்கம் என்ற அரசியல் எதிரிகளின் விமர்சனத்தில் இருந்து திமுக தப்பிக்க வழி பிறந்தது.

மூன்றாமுலக சூழலுக்கு ஏற்ற தீர்க்க தரிசனம்

ஒருவேளை திராவிட இயக்கத்தின் வேலைத் திட்டத்தையும், இயங்கு திசையையும் இப்படி சற்றே திருத்தி அமைக்காமல் போயிருந்தால், தமிழகத்தின் பிற்காலம் வேறு மாதிரியாகக் கூட இருந்திருக்கலாம். 50 களில் அறவழியில் தொடங்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம், காலப்போக்கில் எத்தகைய மாற்றங்களையும், சிக்கல்களையும் எதிர்கொண்டது என்பதை நாம் அறிகிறோம்.

ஆனால், தாய்த் தமிழகத்தைப் பொறுத்தவரை, அண்ணாவின் தீர்க்க தரிசனம், அதன் அரசியலை காலத்திற்கேற்றவாறு வடிவமைத்தது. இந்தி எதிர்ப்பு என்ற வடிவில், சற்று வன்முறை கலந்த  தன்னுரிமைப் போராட்டமாக முகிழ்த்த உணர்வை, அழுத்தமான ஜனநாயக அரசியல் உந்து சக்தியாக மாற்றினார் அண்ணா.

காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த மூன்றாம் உலகச் சூழல் என்பது, அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் கையில் அதிகாரம் கை மாறிய தருணமாகும். அத்தகைய சூழலில் தேசிய இன அடிப்படையிலான போராட்டங்கள், வல்லாதிக்கத்துக்கு எதிரான குரல்கள் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் கடுமையான ஒடுக்குமுறையைச் சந்தித்தன. இந்தப் போக்குக்கு வியட்நாம் சந்தித்த நெருக்கடிகளையே உதாரணமாகக் கொள்ளலாம். பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற, மாவீரன் ஹோசி மின் தலைமையேற்று நடத்திய போர் மூலமாக சுதந்திரக் காற்றை வியட்நாமின் ஒரு பகுதி (வடவியட்நாம்) மட்டுமே சுவாசிக்க முடிந்தது, பின்னர் பிரெஞ்சின் நயவஞ்சகத்தால் தெற்கு, வடக்காக பிரிந்தது. ஹோசிமின் போன்ற கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் உலகில் பரவ அனுமதிக்கக் கூடாது என்ற பிரெஞ்சின் வெறியூட்டும் பிரச்சாரத்தில் அதிகார உன்மத்தம் தலைக்கேறிய அமெரிக்கா, ஹோசிமினை ஒடுக்குவதற்காக தெற்கு வியட்நாமை ஆதரித்தது. ஹோசிமின் தலைமையிலான வடக்கு வியட்நாமுடன் போரிடத் தொடங்கியது. போரைத் தொடங்குவது எளிது, முடிப்பது சுலபமல்ல என்ற கருத்திற்கிணங்க, ஏறத்தாழ  ஹோசிமின் மறைந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் வரை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், புத்த பிட்சுகள் என எந்த வரையறையும் இன்றி அமெரிக்காவினால் கொன்று தீர்க்கப்பட்ட இந்தப் போர் நீடித்தது.

சர்வதேச அளவில் அப்போது நடைபெற்று வந்த இத்தகைய “போரழிவு”களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்த அண்ணா, தனது மக்களுக்கும், மண்ணுக்குமான அரசியலை மிக லாவகமாக வடிவமைக்கத் திட்டமிட்டதன் விளைவுதான், திராவிட நாடு கோரிக்கையில் ஏற்பட்ட திருத்தமும், திராவிட இயக்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமும் ஆகும்.

மூன்றாம் உலகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் வடிவமாக பரவலாகி நிலைபெறத் தொடங்கிய, ஜனநாயக கூட்டாட்சி அமைப்புக்குள் ஊடுருவி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே, காலத்துக்கு ஏற்ற அரசியல் போராட்ட நகர்வாக இருக்கும் என அண்ணா தீர்மானித்தார்.

வெகுமக்களிடமிருந்து விலகப் பிடிக்காதவர்

எந்த ஓர் உரிமைப் போராட்டமும் காலத்துக்கு ஏற்ற வடிவத்தில் முன்னெடுக்கப் படும் போது, அது மக்களின் ஆதரவைப் பெறுவது மட்டுமின்றி, அடையும் வெற்றியும் வேறொரு பரிமாணத்தைக் கொண்டதாக இருக்கும்.

இதனை திராவிடர் கழகத்தில் இருக்கும் போதே அண்ணா உணர்ந்திருந்தார். அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். அவை அனைத்திற்குமே, தமது கருத்துகள் வெகுமக்களைச் சென்றடைய வேண்டும் என்ற அண்ணாவின் ஜனநாயக ஆர்வமே அடிநாதமாக இருந்துள்ளது. சுதந்திர தினத்தை பெரியார் துக்கநாள் என்று அறிவித்த போது, அதனால் வெகுமக்கள் நம் மீது வெறுப்பு கொள்வார்கள் என்பது அண்ணாவின் கருத்தாக இருந்தது. அதேபோல், அனைவருமே கருப்புச் சட்டை அணிய  வேண்டும் என்ற பெரியாரின் கருத்திலும் அவர் முரண்பட்டுள்ளார். கருப்பு என்பது வெகுமக்கள் வெகுமக்களை நாம் நெருங்குவதற்கும், நம்முடைய கருத்துகளை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கும் தடையாக இருக்கும் எனக் கருதியுள்ளார்.

தேசிய இன உணர்வை அரசியலாகத் திரட்டிய ஆளுமை

அதேபோல் “திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த இயக்கத்திற்கு , “திராவிட முன்னேற்றக் கழகம்” என “ர்” விகுதியைத் தவிர்த்து விட்டு ஏன் பெயர் வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு அண்ணா கூறிய விளக்கம் முக்கியமானது. திராவிட மண்ணில் திராவிடர்கள் மட்டுமே வாழலாம் என்று வரையறை செய்வது குறுகிய நோக்கமாகும் எனக் கூறிய அண்ணா, இந்த மண்ணுக்கு நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்ளும் எந்த இனத்தவரும் இன்ப வாழ்வு வாழப் பணியாற்றுவதே நம் கட்சியின் லட்சியமாகும் எனவும் தெளிவு படுத்தி உள்ளார்.

இத்தகைய அரசியல் தகவமைப்புகளின் மூலமாக, இந்தி எதிர்ப்பு என்ற முழக்கத்துடன், தமிழ்ச் சமூகத்தின் மனப் பரப்பு முழுவதும் கிளர்ந்தெழுந்த தேசிய இன உணர்ச்சியை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஜனநாயக பேரரசியல் வடிவமாக உருமாற்றி இருக்கிறார் அண்ணா.

சென்னை ராஜதாணியாக இருந்த தமிழ் மண்ணின் குடியரசு, தமிழக அரசாக பெயர் மாற்றம் பெற்றது முதல், சாதி மறுப்புத் திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம்,  69 சதவீத இட ஒதுக்கீடு வரையிலான பல்வேறு சாதனைகளை, இத்தகைய கூட்டாட்சி அமைப்பின் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலமாகத்தான் தமிழர்கள் பெற முடிந்தது.   

மதம், சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வு என எல்லாமே கலந்து கட்டி இறுகிய மிகச் சிக்கலான சமூகத்தை அரசியல் படுத்துவது அத்தனை எளிதல்ல. அதனை சண்டமாருதமாக சவுக்கடி கொடுக்கும் வேகத்தில் பெரியார் மேற்கொண்டார் என்றால், தவழும் தென்றலாக எதிரிகளையும் தன் வசப்படுத்தும் தன்மையான அரசியலை அண்ணா கையிலெடுத்திருக்கிறார்.

உலகிலேயே, இனவழி உரிமைப் போராட்டத்தை, வீழ்த்த முடியாத அரசியல் அதிகார வலிமை பெற்ற ஜனநாயகப் பேராற்றல் கொண்ட அமைப்பாக மாற்றிய சாதனையை அண்ணா மட்டுமே நிகழ்த்திக் காட்டி உள்ளார்.

ஜனநாயகத்தை நேசிக்கும் எவராலும் அண்ணாவை வெறுக்கவும் முடியாது. ஒதுக்கவும் இயலாது.

நன்றி: இந்து தமிழ் திசை  (17.08.2018)

Anna Purintha Arasiyal Sahasaam: Mena.Ulaganathan (Unedited Full Form)