அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு..

அருந்ததியர் சமூகத்திற்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

அருந்ததியர் சமூகத்திற்கு ஆதி திராவிடர் சமூகத்திற்காக வழங்கப்பட்ட 18 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி 2009-ம் ஆண்டு, திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து 5 நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

“சமூக நீதி லட்சியத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட கலைஞரால் பட்டியல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட 18 சதவிகிதத்தில், அருந்ததியினர் சமூகத்திற்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும், வரவேற்கத்தக்கது ஆகும்.

அன்றைய திமுக அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும், அருந்ததியினர் இன மக்களுக்கு வரப்பிரசாதமாகும்”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.