அசாமில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

அசாமில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்து உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில் உள்ள சல்மாரியா தேயிலை தோட்டத்தில் ஏராளமானோர் வேலைபார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பெண் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் ஒரு வியாபாரியிடம் விஷச்சாராயம் வாங்கி அருந்தி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியான நிலையில், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.

இதில் 7 பெண்களும் அடங்குவர். மேலும் 50-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கோல்ஹாட் அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 68 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 2 கலால் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை தரவும் அவர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர்.