அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி :ஒன்றிய அரசை கண்டித்து அரிசி ஆலைகள் இன்று முழுநாள் வேலைநிறுத்தம்..

பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரிசி ஆலைகள், கடைகள் வேலை நிறுத்தம்.
அரிசி மீது 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரிசி ஆலைகள் மற்றும் கடைகளை அடைத்து உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பையில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வரும் 18ம் தேதி ( திங்கட்கிழமை) அமலுக்கு வர உள்ளது. அரிசிக்கு5 சதவீதம் ஜிஎஸ்டி அமல்படுத்தினால் ஒரு கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று அரிசு ஆலைகள், கடைகளை அடைத்து உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும் 500 க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை அரிசி விற்பனை கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்களை பாதிக்கும் 5 விழுக்காடு ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி கடைகளை முழுமையாக அடைத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியை வாபஸ் செய்யக்கோரி திண்டுக்கல்லில் 177 மொத்த அரிசி வியாபார கடைகள், 55 சிறிய அரிசி விற்பனையாளர் கடைகள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கபட்டுள்ளது .